இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
2 சூன் 1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி - போனி கபூர்[10] தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[11]
ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக நீண்ட காலம் பாலிவுட்டில் அவர் நடித்துவந்தார்.
மறைவு
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில்மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது.[12] பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.[13][14] உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[15]