மக்கெடோனின் இரண்டாம் பிலிப்

மக்கெடோனிய அரசர் (கிமு.359-336)

மக்கெடோனின் இரண்டாம் பிலிப் (Philip II of Macedon, கிரேக்க மொழி: Φίλιππος Β' ὁ Μακεδών – φίλος phílos, "நண்பன்" + ἵππος híppos, "குதிரை"[1] — எழுத்துப்பெயர்ப்பு ; கி.மு 382–336), மக்கெடோனிய இராச்சியத்தை கி.மு 359 முதல் கி.மு 336இல் கொலை செய்யப்படும்வரை ஆண்ட மன்னர் (பசிலெயசு) ஆவார். இவர் மக்கெடோனின் மூன்றாம் பிலிப் மற்றும் பேரரசன் அலெக்சந்தரின் தந்தை ஆவார்.

மக்கெடோனின் பிலிப் II
மக்கெடோனியாவின் பசிலெயசு
ஆட்சிகி.மு 359–336
முன்னிருந்தவர்மக்கெடோனின் மூன்றாம் பெர்டிகாசு
பேரரசன் அலெக்சாந்தர்
மனைவிகள்
  • அவுதாத்தா
  • பிலா
  • நைசெசிபோலிசு
  • பிலின்னா
  • ஒலிம்பியாசு
  • ஒடெசாவின் மேடா
  • கிளியோபாத்ரா யூரிடைசு
வாரிசு(கள்)சைனான்
மக்கெடோனின் மூன்றாம் பிலிப்
பேரரசன் அலெக்சாந்தர்
கிளியோபாத்ரா
தெசாலோனிகா
யூரோப்பா
கரானுசு
கிரேக்கம்Φίλιππος
மரபுஆர்கெட் பரம்பரை
தந்தைமக்கெடோனின் மூன்றாம் அமைந்தாசு
தாய்யூரிடைசு
பிறப்புகி.மு 382
பெல்லா, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)
இறப்புஅக்டோபர் கி.மு 336 (அகவை 46)
ஐகை, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)
அடக்கம்ஐகை, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)

இவர் கிரேக்கத்தை ஒன்றுபடுத்தி ஐக்கிய மக்கெடோனிய இராச்சியத்தை நிறுவினார். ஏதேனும் நகர அரசை தமது படைகளால் கைப்பற்றுவார் அல்லது அதன் தலைவர்களுடன் உரையாடி/கையூட்டுக் கொடுத்து தமது இராச்சியத்தில் இணைப்பார். இவரது ஆட்சியில்தான் கி.மு 338இல் ஏதென்சிற்கு எதிரான கெரோனியப் போரில் அலெக்சாந்தர் தமது படைத்துறை வல்லமையை காட்டினார். பிலிப் கி.மு 336இல் ஒரு கலையரங்கில் தமது மெய்க்காப்பாளரால் கொலை செய்யப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

இளமைப் பருவம்

பிலிப் மன்னர் மூன்றாம் அமிண்டாஸ் மற்றும் முதலாம் யூரிடைஸ் ஆகியோரின் இளைய மகன் ஆவார். இவரது அண்ணன் இரண்டாம் அலெக்சந்தர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிலிப் அலோரோசின் தோலமியால் இல்லிரியாவுக்கு பணயக்கைதியாக அனுப்பப்பட்டார்.[2][3] பிலிப் பின்னர் தீப்சுக்கு (கி.மு. 368-365) கொண்டு செல்லபட்டார். அந்த நேரத்தில் கிரேக்கத்தில் தீப்ஸ் ஆதிக்கம் செய்யும் நகரமாக இருந்தது. தீப்சில் பிலிப் எபமினோண்டாசிடம் இருந்து இராணுவ உத்தி, இராஜதந்திரக் கல்வி போனவறவற்றைப் பெற்றார். [4][5] மேலும் தீப்சின் புனித இணையர் படையின் ஆதரவாளராகளாக இருந்த பம்மெனெசுடன் வாழ்ந்தார். சுருக்கமாக கூறுவதானால் அரச பதவியை திறம்பட வகிப்பதற்கான திகுதிகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டார்.

கிமு 364 இல், பிலிப் மக்கெடோனியாவுக்குத் திரும்பினார். கிமு 359 இல், பிலிப்பின் மற்றொரு சகோதரர், மன்னர் மூன்றாம் பெர்டிக்காஸ், இல்லியர்களுக்கு எதிரான போரில் இறந்தார். புறப்படுவதற்கு முன், பெர்டிக்காஸ் பிலிப்பை தனது கைக்குழந்தையான நான்காம் அமிண்டாசுக்கு அரசப் பிரதிநிதியாக நியமித்தார். ஆனால் பின்னர் பிலிப் இராச்சியத்தை தனக்காக ஆக்கிக்கொள்வதில் வெற்றி பெற்றார்.[6]

இராணுவ வாழ்க்கை

இராணுவ முன்னேற்றங்கள்

பிலிப் தன் இராசதந்திரத்தைப் பயன்படுத்தி, தனக்கு அச்சுறுத்தலாக இருந்த பியோனியர்கள் மற்றும் திரேசியர்களுக்கு கப்பம் செலுத்துவதாக உறுதியளித்தார், மேலும் 3,000 ஏதெனியன் ஹாப்லைட்டுகளை (கிமு 359) தோற்கடித்தார். தனது எதிரிகளின் தொல்லைகளில் இருந்து சிறிது நேரம் விடுபட்டு, அவர் தனது உள்நாட்டு நிலை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தனது இராணுவத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். இல்லியர்களுடனான போர்களின் காலத்திலிருந்து கிமு 334 வரை நாட்டின் இராணுவ வலிமைக்கு முதன்மையான ஆதாரமாக இருந்த குதிரைப்படை மற்றும் காலாட்படையை தோராயமாக இரட்டிப்பாக்கினார்.[7] படைவீரர்களின் ஒழுக்கமும் பயிற்சியும் அதிகரிக்கபட்டது. மேலும் பிலிப்பின் கீழ் இருந்த மாசிடோனியப் படைவீரர்களுக்கு பதவிகள், வெகுமதிகள், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த மாற்றங்களுக்கு மேலதிகமாக, பிலிப் மாசிடோனிய ஃபாலங்க்ஸ் எனப்படும் ஒரு காலாட்படை அமைப்பை உருவாக்கினார். இதில் வீரர்கள் அனைவரும் சாரிசா எனப்படும் நீண்ட ஈட்டிகளை ஏந்தியிருந்தனர். மாசிடோனிய இராணுவத்தில் சரிசாவைச் சேர்த்ததற்காக பிலிப் புகழ் பெற்றார். அது விரைவில் பெரும்பாலான வீரர்களால் பயன்படுத்தப்படும் பொதுவான ஆயுதமாக ஆனது.

துவக்ககால இராணுவ வாழ்க்கை

பிலிப் இல்லியன் அரசர் பார்டிலிசின் மகளோ அல்லது பேத்தியோவான ஆடாடாவை மணந்தார். இருப்பினும், இந்த திருமணம் கிமு 358 இல் இல்லியர்களுக்கு எதிராக படைகள் அணிவகுத்துச் செல்வதையும், சுமார் 7,000 இல்லியர்கள் கொல்லபட்டு போரில் அவர்களை தோற்கடிப்படுவதையும் (357) தடுப்பதாக இருக்கவில்லை. இந்த நடவடிக்கையின் மூலம், பிலிப் தனது அதிகாரத்தை ஓஹ்ரிட் ஏரி வரை கொண்டு சென்றார்.[8]

பிலிப் காயமுறுதல்.

மாசிடோனின் மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளைப் பலப்படுத்திய பிறகு, பிலிப் கிமு 357 இல் ஏதெனியர்கள் வசமிருந்த ஆம்பிபோலிசை முற்றுகையிட்டார். பாங்கயான் மலைகளின் தங்கச் சுரங்கங்களை தன் பிடிக்குள் வைத்திருக்கவேண்டுமானால் ஆம்பிபோலிசை கைப்பற்றுவது அவசியம். ஆம்பிபோலிசை கைப்பற்றிய பிலிப் பாங்கியான் மலையின் தங்கச் சுரங்களில் இருந்து தங்கத்தை வெட்டி எடுத்து அரசின் வருவாயைப் பெருக்க ஆரம்பித்தார. இதனால் ஏதென்சு விரைவில் இவருக்கு எதிராக போரை அறிவித்தது. இதன் விளைவாக, பிலிப் மாசிடோனியாவை ஒலிந்தசின் கால்சிடியன் கூட்டணி உடன் இணைத்தார். இவர் பின்னர் பொடிடியாவைக் கைப்பற்றினார். அதை தான் கொடுத்த வாக்கின்படி கிமு 356 இல் கூட்டணிக்கு விட்டுக் கொடுத்தார்.[9]

கிமு 357 இல், பிலிப் எபிரோட் இளவரசி ஒலிம்பியாசை மணந்தார். அலெக்சாந்தர் கிமு 356 இல் பிறந்தார், அதே ஆண்டில் பிலிப்பின் பந்தயக் குதிரை ஒலிம்பிக் போட்டிகளில் வென்றது.[10]

கிமு 356 இல், பிலிப் கிரெனைட்ஸ் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை பிலிப்பி என மாற்றினார். பின்னர் அவர் தனது சுரங்கங்களைப் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த துணைப்படையை நிறுவினார். அதன் மூலம் கிடைத்த தங்கத்தின் பெரும்பகுதியை அவர் தனது போர்த்தொடர்களின் செலவுகளுக்குத் தங்கத்தின் பெரும்பகுதியைப் பயன்படுத்தினார். இதற்கிடையில், இவரது தளபதி பார்மேனியன் மீண்டும் இல்லியர்களை தோற்கடித்தார்.[11]

கிமு 355-354 இல் இவர் ஏதென்சின் கட்டுப்படுத்தப்பாட்டில் இருந்த தெர்மைக் வளைகுடாவின் கடைசி நகரமான மீத்தோனை முற்றுகையிட்டார். முற்றுகையின் போது, பிலிப்பின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது, பின்னர் அதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கபட்டது.[12] ஏதென்சின் இரண்டு கடற்படைகள் அதை பாதுகாக்க வந்த வந்தபோதிலும், நகரம் கிமு 354 இல் வீழ்ந்தது. திரேசியன் கடற்கரையில் (கிமு 354-353) அப்டெராவையும், மரோனியாவையும் பிலிப் தாக்கினார்.[13]

மாசிடோனின் இரண்டாம் பிலிப் பிரதேசத்தின் வரைபடம்

மூன்றாம் புனிதப்போர்

மூன்றாம் புனிதப் போரில் (கிமு 356–346) பிலிப்பின் ஈடுபாடு கிமு 354 இல் தொடங்கியது. தெசலியன் லீக்கின் வேண்டுகோளின் பேரில், பிலிப்பும் அவரது இராணுவமும் பகாசேயைக் கைப்பற்றுவதற்காக தெசலிக்கு போர்ப் பயணம் மேற்கொண்டனர். இதன் விளைவாக தீப்சுடன் கூட்டணி ஏற்பட்டது. ஒரு ஆண்டு கழித்து, கிமு 353 இல், மீண்டும் போரில் உதவுமாறு பிலிப் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் இந்த முறை ஓனோமார்கசால் ஆதரிக்கப்பட்ட சர்வாதிகாரி லைகோஃப்ரானுக்கு எதிராக. பிலிப்பும் அவரது படைகளும் தெசலி மீது படையெடுத்து, 7,000 பேர்கொண்ட பேசிய படையினரைத் தோற்கடித்து, ஓனோமார்கசின் சகோதரரான பைலஸை வெளியேறும் நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்.[14]

அதே ஆண்டில், ஓனோமார்கசும் அவரது இராணுவத்தினரும் அடுத்தடுத்த இரண்டு போர்களில் பிலிப்பை தோற்கடித்தனர். பிலிப் அடுத்த கோடையில் தெசலிக்குத் மீண்டும் படையெடுத்து வந்தார். இந்த முறை 20,000 காலாட்படை, 3,000 குதிரைப்படை மற்றும் தெசலியன் லீக்கின் படைகளின் கூடுதல் ஆதரவு படைகளோடு வந்தார். குரோக்கஸ் பீல்ட் போரில், 6,000 போசியன்கள் வீழ்ந்தனர் மேலும் 3,000 பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் நீரில் மூழ்கினர். இந்த போர் பிலிப்புக்கு மகத்தான கௌரவத்தையும், பெரேயை கையில் கொண்டுவந்து சேர்த்தது. இவர் தெச்சாலியன் லீக்கின் தலைவராக (ஆர்கோன்) ஆக்கப்பட்டார். மேலும் மக்னீசியா மற்றும் பெர்ரேபியாவை உரிமை கோரி அதை அடைய முடிந்தது. இதனால் பகாசே வரை இவர் தன் எல்லையை விரிவுபடுத்த இயன்றது.[15][13]

ஏதென்சுடன் அப்போதுவரை எந்த பகையும் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் ஏதென்சு மாசிடோனியர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தது. கிமு 352 முதல் 346 வரை, பிலிப் மீண்டும் தெற்கே போர்பயணங்களை மேற்கொள்ளவில்லை. அவர் மேற்கு மற்றும் வடக்கே பால்கன் மலைநாட்டை அடிபணியச் செய்வதில் ஈடுபட்டுவந்தார்.

கிமு 348 இல், பிலிப் ஒலிந்தசிக்கு எதிராக முற்றுகையைத் தொடங்கினார். அதன் பிறகு ஒலிந்தசு பிலிப்புக்கு அடிபணிந்தது. ஆனால் பின்னர் அது தன் விசுவாசத்தை ஏதென்சுக்கு காட்டத் தொடங்கியது. எவ்வாறாயினும், ஏதெனியர்கள் நகரத்திற்கு உதவியாக எதுவும் செய்யவில்லை. ஏனெனில் யூபோயாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அவர்களின் கவணத்தை அங்கு செலுத்தவேண்டியதாயிற்று. மாசிடோனிய மன்னர் கிமு 348 இல் ஒலிந்தசைத் தாக்கி நகரத்தை தரைமட்டமாக்கினார். கால்சிடியன் தீபகற்பத்தின் மற்ற நகரங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது, இதன் விளைவாக கால்சிடியன் லீக் கலைக்கப்பட்டது.[16]

இரண்டாம் பிலிப்பின் சிலை, 350-400 கி.பி. ரைனிஷ்ஸ் லேண்டெஸ் அருங்காட்சியகம்.

மாசிடோனும் அதை ஒட்டிய பகுதிகளும் இப்போது பாதுகாப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இருந்ததால், பிலிப் தனது ஒலிம்பிக் போட்டிகளை டியமில் கொண்டாடினார். கிமு 347 இல், பிலிப் ஹெப்ரசின் கிழக்கு மாவட்டங்களை கைப்பற்றுவதற்கு முன்னேறினார், மேலும் திரேசிய இளவரசர் செர்சோபில்ப்டெசை அடிபணியுமாறு கட்டாயப்படுத்தினார். கிமு 346 இல், அவர் தீப்ஸ் மற்றும் போசியஸ் இடையேயான போரில் தலையிட்டார். அதேசமயம் ஏதென்சுடனான இவரது போர்கள் இடைவிடாது தொடர்ந்தன. எவ்வாறாயினும், ஏதென்ஸ் சமாதானத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டது. பிலிப் மீண்டும் தெற்கே சென்றபோது, தெசலியில் அமைதி உறுதி செய்யப்பட்டது.[13]

பிந்தைய போர்த் தொடர்கள்

முக்கிய கிரேக்க நகர அரசுகள் அடிபணிந்த நிலையில், இரண்டாம் பிலிப் எசுபார்த்தாவை நோக்கி திரும்பினார். அவர்களிடம் "நான் லாகோனியா மீது படையெடுத்தால், அங்கிருந்து உங்களை வெளியேற்றுவேன் என எச்சரித்தார்.[17] ஆனால் அதை எசுபார்த்தன்கள் ஏற்க்கவில்லை. அதன் பிறகு பிலிப் லாகோனியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினார். அதன் பெரும்பகுதியை அழித்து, பல்வேறு பகுதிகளிலிருந்து சுபார்டான்களை வெளியேற்றினார்.[18]

கிமு 345 இல், பிலிப் ஆர்டியாயோய்க்கு (ஆர்டியாயி) எதிராக ஒரு கடினமான போர்த்தொடரைர மேற்கொண்டார். அவர்கள் தங்கள் மன்னரான முதலாம் புளூரடசின்ன் கீழ் போராடினர். போரின்போது பிலிப் ஒரு ஆர்டியன் வீரனின் தாக்குதலால் கீழ் வலது காலில் பலத்த காயம் அடைந்தார்.[19]

கிமு 342 இல், பிலிப் சித்தியர்களுக்கு எதிராக வடக்கே ஒரு போர்ப் பயணத்தை வழிநடத்தினார். திரேசியன் கோட்டையான அவர்களின் குடியேற்றமான யூமோல்பியாவைக் கைப்பற்றி அதற்கு பிலிப்போபோலிஸ் (நவீன பிளோவ்டிவ்) என்று பெயரிட்டார்.

கிமு 340 இல், பிலிப் பெரிந்தஸ் முற்றுகையைத் தொடங்கினார். மேலும் கிமு 339 இல் பைசாந்தியம் நகருக்கு எதிராக மற்றொரு முற்றுகையைத் தொடங்கினார். இரண்டு முற்றுகைகளும் தோல்வியடைந்ததால், கிரேக்கத்தின் மீது பிலிப்பின் செல்வாக்கு குறைந்தது.[13] கிமு 338 இல் செரோனியா போரில் தீபன்ஸ் மற்றும் ஏதெனியர்கள் கூட்டணியை தோற்கடித்து ஏஜியனில் தனது அதிகாரத்தை வெற்றிகரமாக மீண்டும் உறுதிப்படுத்தினார். அதே ஆண்டில் தெல்பிக்கு சொந்தமான கிரிசாயன் சமவெளியின் ஒரு பகுதியை குடியிருப்பாளர்கள் சட்டவிரோதமாக பயிரிட்டதால் அம்ஃபிசாவை அழித்தார். இந்த தீர்க்கமான வெற்றிகள் கிமு 338/7 இல் பாரசீக சாம்ராஜ்யத்திற்கு எதிராக இணைந்த கிரேக்கக் கூட்டமைப்பான கொரிந்தின் இராணுவ தலைவராக பிலிப் அங்கீகரிக்கப்பட வழிவகுத்தது.[20][21] கூட்டணி உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் போர் தொடுப்பதில்லை என்று ஒப்புக்கொண்டனர்.[22]

ஆசியப் போர்த் தொடர்கள் (கிமு 336)

பிலிப் அகமானசியப் பேரரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கிமு 352 முதல், இவர் மூன்றாம் அர்தசெராக்ச்சுக்கு எதிரான பல பாரசீக எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தார். அதாவது இரண்டாம் ஆர்டபாசோஸ், அம்மினபேஸ் அல்லது சிசினெஸ் என்ற பாரசீக பிரபு போன்றவர்களை ஆதரித்தார். இவர்கள் பாரசீக அரசால் நாடு கடத்தபட்டிருந்தனர்.[23][24][25][26] இது இவருக்கு பாரசீக பிரச்சினைகள் பற்றிய நல்ல புரிதலைக் கொடுத்தது. மேலும் இது இவரது மாசிடோனிய அரசு நிர்வாகத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.[23] அலெக்சாந்தர் தனது இளமைக் காலத்தில் பாரசீகத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இவர்களையும் அறிந்திருந்தார்.[24][27][28]

கிமு 336 இல், மேற்குக் கடற்கரை மற்றும் தீவுகளில் வசிக்கும் கிரேக்கர்களை அகமானசிய ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்கான படையெடுப்பு ஏற்பாட்டுக்கு, அனத்தோலியாவுக்கு 10,000 பேர் கொண்ட படையணியுடன் அமிண்டாஸ், ஆண்ட்ரோமினெஸ், அட்டாலஸ் ஆகியோருடன் பார்மேனியனை இரண்டாம் பிலிப் அனுப்பினார்.[29][30] அதன்பிறகு எல்லாம் நன்றாகவே நடந்தன. அனதோலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கிரேக்க நகரங்கள் பாரசீகர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டன. ஆனால் பிலிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வரும் வரையே அவற்றால் கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட முடிந்தது. பிலிப் படுகொலைக்குப் பிறகு அவரது இளம் மகன் அலெக்சாண்ந்தர் அரசராக பதவியேற்றார். மாசிடோனியர்கள் பிலிப்பின் மரணத்தால் மனச்சோர்வடைந்தனர், பின்னர் ரோட்சின் கூலிப்படையான மெம்னானின் தலைமையின் கீழ் அகமானசியர்களால் மக்னீசியா அருகே தோற்கடிக்கப்பட்டனர்.[30][29]

இரண்டாம் பிலிப்பின் நான்காவது மனைவியும், அலெக்சாந்தரின் தாயார் உருவம் பதித்த, ஒலிம்பியாசின் உரோமானிய பதக்கம். தெசலோனிகி அருங்காட்சியகத்தில் உள்ளது.

திருமணங்கள்

மாசிடோனிய மன்னர்கள் பலதுணை மணம் செய்து வந்தனர். இரண்டாம் பிலிப் தனது வாழ்நாளில் ஏழு மனைவிகளைக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் அண்டை நாடுகளைச் சேர்ந்த அரச வம்சத்தினர் ஆவர். பிலிப்பின் மனைவிகள் அனைவரும் அரசிகளாகக் கருதப்பட்டனர். அவர்களின் குழந்தைகளையும் அரச குடும்பத்தினர்களாக ஆக்கினர்.[31] பிலிப்பின் பல திருமணங்கள் நடந்த காலம் மற்றும் அவரது சில மனைவிகளின் பெயர்கள் பண்டைய கிரேக்க எழுத்தாளர் அதீனியஸ் குறிப்பிட்ட வரிசையின் படி கீழே குறிப்பிடபட்டுள்ளன. 13.557b–e:

  • அவுடாடா, இல்லியன் அரசன் பார்டிலிசின் மகள். சைனானின் தாய்.
  • எலிமியாவின் ஃபிலா, டெர்டாஸ் மற்றும் எலிமியோடிஸின் மச்சாடாசின் சகோதரி.
  • பெரேயின் நிசிசிபோலிஸ், தெசலி, தெசலோனிக்காவின் தாய்.
  • எபிரஸின் ஒலிம்பியாஸ், முதலாம் நியோப்டோலமசின் மகள்,[32] பேரரசர் அலெக்சாந்தர் மற்றும் கிளியோபாட்ராவின் தாய்.
  • லாரிசாவின் பிலின்னா, பின்னர் மாசிடோனின் மூன்றாம் பிலிப் என்று அழைக்கப்பட்ட அர்கிடேயசின் தாயார்.
  • ஒடெசோஸின் மேதா, திரேசின் மன்னன் கோதேலசின் மகள்.
  • கிளியோபாட்ரா, ஹிப்போஸ்ட்ராடஸின் மகள் மற்றும் மாசிடோனியாவின் தளபதி அட்டாலசின் மருமகள். பிலிப் அவளுக்கு மாசிடோனின் கிளியோபாட்ரா யூரிடைஸ் என்று புதிய பெயரை சூட்டினார்.

படுகொலை

கிமு 336 ஆம் ஆண்டு, அரங்கில் இருந்தபோது, அரசர் பிலிப்பை பௌசானியாஸ் படுகொலை செய்தல்.

கிமு 336 அக்டோபரில் மாசிடோன் இராச்சியத்தின் பண்டைய தலைநகரான ஏகேயில் மன்னர் பிலிப் படுகொலை செய்யப்பட்டார். பிலிப்பும் அவரது அரசவையினரும் எபிரசின் முதலாம் அலெக்சாந்தர் மற்றும் மாசிடோனின் கிளியோபாட்ரா ஆகியோரின் திருமணத்தை கொண்டாடுவதற்காக கூடியிருந்தனர். (கிளியோபட்ரா இவரது நான்காவது மனைவி ஒலிம்பியாஸ் மூலம் பிறந்த பிலிப்பின் மகள்.) அரசர் நகர அரங்கிற்குள் நுழையும் போது, ​​அந்த நேரத்தில் இருந்த கிரேக்க இராசதந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அணுகக்கூடியவராக தோன்றுவதற்காக அவர் போதிய பாதுகாப்பற்றவராக இருந்தார். பிலிப்பை அவரது ஏழு மெய்க்காவலர்களில் ஒருவரான ஒரெஸ்டிசின் பௌசானியாஸ் திடீரென நெருங்கிவந்து அரசரின் விலா எலும்பில் குத்தினார். பிலிப்பைக் கொன்ற பிறகு, கொலையாளி உடனடியாக தப்பித்து, ஏகே நுழைவாயிலில் குதிரைகளுடன் அவருக்காக காத்திருந்த கூட்டாளிகளிடம் சென்றடைய முயன்றார். கொலையாளியை பிலிப்பின் மற்ற மூன்று மெய்க்காப்பாளர்கள் துரத்திச் சென்றனர். தப்பிச் செல்லுகையில், அவரது குதிரை தற்செயலாக ஒரு கொடியின் மீது இடறி விழுந்தது. இதையடுத்து மெய்ப்பாதுகாவலர்களால் அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.[33]

படுகொலைக்கான காரணங்கள் உறுதியாக கண்டறியப்படவில்லை. இது குறித்து பண்டைய வரலாற்றாசிரியர்களிடையே கூட சர்ச்சை இருந்தது; அட்டாலஸ் (பிலிப்பின் மாமனார்) மற்றும் அவரது நண்பர்களால் பௌசானியாஸ் புண்படுத்தப்பட்டதால் பிலிப் கொல்லப்பட்டதாக அரிசுட்டாட்டில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.[34]

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்