திருத்தந்தை பிரான்சிசு

கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை
(பிரான்சிசு (திருத்தந்தை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருத்தந்தை பிரான்சிசு (/ˈfræns[invalid input: 'ɨ']s/, /ˈfrɑːns[invalid input: 'ɨ']s/; ஆங்கில மொழி: Francis இலத்தீன்: Franciscus இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ பி. 17 டிசம்பர் 1936) கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.

திருத்தந்தை
பிரான்சிசு
சே.ச
266ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்13 மார்ச் 2013
முன்னிருந்தவர்பதினாறாம் பெனடிக்ட்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு13 டிசம்பர் 1969
ரமோன் ஹொசே கஸ்தெல்லானோ-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு27 ஜூன் 1992
அந்தோனியோ குவாராசீனோ-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது21 பெப்ரவரி 2001
பிற தகவல்கள்
இயற்பெயர்ஹோர்கே மாரியோ பெர்கோலியோ
பிறப்பு17 திசம்பர் 1936 (1936-12-17) (அகவை 87)
புவேனோஸ் ஐரேஸ், அர்ஜென்டீனா
குடியுரிமைவத்திக்கான் குடியுரிமையுடைய அர்கெந்தீனர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
இல்லம்வத்திக்கான் நகர்
குறிக்கோளுரைஎளியவராயினும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்[1]
கையொப்பம்

தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. மேலும், இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார். மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[2] 913இல் திருத்தந்தை லாண்டோவுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார்.

இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.[3]

2005ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில் பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோவுக்கு 40 வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.[4] ஆயினும் கர்தினால் பெர்கோலியோ தமக்குத் திருத்தந்தைப் பதவிக்காக வாக்குகள் அளிக்க வேண்டாம் என்று உடன் கர்தினால்மார்களிடம் அழாக்குறையாகக் கேட்டுக்கொண்டதாகச் சில செய்திகள் கூறுகின்றன.[5]

இளமைப் பருவம்

வத்திக்கான் இணையதளம் தரும் தகவல்கள்படி, திருத்தந்தை ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் புவேனோஸ் ஐரேஸ் நகரில் இத்தாலியின் வடக்குப் பகுதியில் தூரின் நகர் அமைந்துள்ள பியத்மாந்து பிரதேசத்தின் பகுதியிலிருந்து சென்று குடியேறிய இத்தாலிய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார்.[6][7][8] அவருடைய பெற்றோர் பெயர்கள் மாரியோ ஹோசே பெர்கோலியோ, ரெஜீனா மரியா சிவோரி ஆகும். மாரியோ ஹோசே தொடருந்துத் துறையில் அலுவல் பார்த்தார். ரெஜீனா மரியா வீட்டுப்பொறுப்பைப் பார்த்துக்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிசு தம் இளமையில் அரசு பள்ளியில் கல்விபயின்றார். சுமார் 20 வயதில் அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக அவர் ஒரு நுரையீரலின் செயல்பாடு இழந்தார்.[9] புவேனோஸ் ஐரேஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10] பின்னர் தம்மைக் கடவுள் இயேசு சபைத் துறவறக் குருவாக அழைப்பதை உணர்ந்த அவர் இயேசு சபையில் 1958இல் புகுமுகத் துறவு நிலையில் சேர்ந்தார்.

இயேசு சபையில் சேர்தல்

பெர்கோலியோ இயேசு சபையில் புகுமுகத் துறவியாகச் சேர்ந்தது 1958, மார்ச்சு 11ஆம் நாள் ஆகும். வில்லா டெவோட்டா நகரில் இயேசு சபைக் குருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். 1964இலிருந்து மூன்று ஆண்டுகள் சாந்தா ஃபே மற்றும் புவேனோஸ் ஐரேஸ் நகர்க் கல்லூரிகளில் இலக்கியம், உளவியல் ஆகிய பாடங்கள் கற்பித்தார். 1967இல் இறையியல் படிப்பை முடித்த அவர் 1969, திசம்பர் 13ஆம் நாள், தமது 33ஆம் வயதில் இயேசு சபையில் குருத்துவப் பட்டம் பெற்றார். அவருக்குக் குருப்பட்டம் அளித்தவர் பேராயர் ரமோன் ஹோசே கஸ்தெல்லானோ என்பவர்.[11]

[12] அவர் கல்விபயின்ற குருத்துவக் கல்லூரியிலேயே புகுமுகத் துறவியர் தலைவராகவும் இறையியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

1973-1979 காலகட்டத்தில் பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் இயேசு சபை மறைத்தளத் தலைவராகப் பணியாற்றினார்.[13] பின்னர் அவர் 1980இலிருந்து 1986 வரை புனித மிக்கேல் குருத்துவக் கல்லூரி அதிபராகப் பணிபுரிந்தார்.[11] 1986இல் அவர் செருமனி சென்று, அங்கு பிராங்க்ஃபுர்ட் நகரில் புனித ஜோர்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார். ஆயினும் அங்கு அவர் பட்டப்படிப்பைத் தொடர்ந்து முடிக்கவில்லை.[14] பின்னர் அர்ஜென்டீனாவுக்குத் திரும்பிவந்து அங்கே கொர்தோபா நகரில் இயேசு சபையினருக்கு ஆன்ம வழிகாட்டியாகவும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்குபவராகவும் பணியாற்றினார்.[15]

ஆயராகப் பதவி ஏற்றல்

டிசம்பர் 2007இல் கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் குடியரசுத் தலைவர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னரை, சந்தித்தபோது

1992இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பெர்கோலியோவை புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார். அவருக்கு 1992, சூன் 27ஆம் நாள் ஆயர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆயர் பட்டம் வழங்கிய முதன்மைத் தலைவர் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் அந்தோனியோ குவாராசீனோ ஆவார்.

பின்னர் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயர் ஆனார். அதன் பிறகு, 1998, பெப்ருவரி 28ஆம் நாள் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதே நேரத்தில் அவர் அர்ஜென்டீனா நாட்டில் வாழ்ந்து தனி அமைப்பு இல்லாத கீழைச் சபைக் கத்தோலிக்கர்களுக்கும் ஆயராக நியமிக்கப்பட்டார்.

கர்தினால் பட்டம் பெறுதல்

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பேராயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோவை 2001, பெப்ருவரி 21ஆம் நாள் கர்தினால் பதவிக்கு உயர்த்தினார். அப்போது அவருக்குப் புனித இராபர்ட் பெல்லார்மீனோ கோவில் கர்தினால்-குரு என்னும் பதவியும் அளிக்கப்பட்டது.

கர்தினால் என்னும் வகையில் அவர் உரோமை மைய அலுவலகத்தின் பல பேராயங்களில் உறுப்பினராகப் பணிபுரிந்தார். அவை:

  • திருவழிபாடு மற்றும் அருட்சாதனங்கள் ஒழுங்குக்கான பேராயத்தின் உறுப்பினர்;
  • குருக்கள் பேராயத்தின் உறுப்பினர்;
  • துறவற வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வு நிறுவனங்களுக்கான பேராயத்தின் உறுப்பினர்;
  • குடும்பங்களுக்கான திருத்தந்தைக் கழகத்தின் உறுப்பினர்;
  • இலத்தீன் அமெரிக்காவுக்கான திருத்தந்தை ஆணைக்குழு உறுப்பினர்.

கர்தினால் பெர்கோலியோவின் பணிகளும் பண்புகளும்

கர்தினால் பெர்கோலியோவின் பணிக்காலத்தில் அவரிடம் துலங்கிய நற்பண்புகள் பற்றிப் பலரும் சான்றுபகர்கின்றனர். அவர் மிகவும் பணிவான, எளிமையான வாழ்க்கை நடத்தினார். ஏழைகள் மீது பரிவு காட்டுவதும், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக உழைப்பதும் அவருடைய சிறப்புப் பண்புகளாகக் குறிக்கப்படுகின்றன.

2007இல் நடந்த இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் கூட்டத்தில் கர்தினால் பெர்கோலியோ கீழ்வருமாறு பேசினார்:

கர்தினால் பெர்கோலியோ எளிமையான வாழ்க்கை நடத்தினார். பேராயர் என்ற முறையில் அவருக்குப் பெரியதொரு மாளிகை இல்லமாக இருந்தபோதிலும் அவர் ஒரு எளிய, சிறிய கட்டடத்தில் வாழ்ந்தார். தனி ஓட்டுநரைக் கொண்ட சொகுசு தானுந்து தமக்கு அளிக்கப்பட்டபோதும் அது வேண்டாம் என்று கர்தினால் பெர்கோலியோ பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்து மற்றும் பெருநகர் உந்துகளிலே பயணம் செய்தார்.[17] மேலும், சமயலுக்கென்று தனி ஆள் வைக்காமல், அவர் தமக்கு வேண்டிய உணவைத் தாமே சமைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அநீதியான அமைப்புகளை ஒழித்துச் சமூக நீதியை நிலைநாட்டுவதை விடவும் ஒவ்வொருவரும் நீதியான, எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கை நடத்தும்போது அதுவே சமூக நீதிக்கு வழியாகும் என்பது அவருடைய அணுகுமுறையாக இருந்தது.

நோயுற்றோர் மீது பரிவு காட்டல்

கர்தினால் பெர்கோலியோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் எனப்படுகின்ற எச்.ஐ.வி. நோய்க்குறி, மற்றும் எயிட்சு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் மட்டில் பரிவு காட்டி செயல்பட்டுள்ளார். 2001இல் அவர் இத்தகைய நோயாளர் வதிந்த ஓர் இல்லம் சென்று, அங்கு அவர்களது காலடிகளைக் கழுவி முத்தமிட்டு, அவர்கள் மட்டில் தமக்குள்ள பரிவை வெளிப்படுத்தினார்.[18]

கர்தினால் பெர்கோலியோ -2008 எடுக்கப்பட்ட படம்

திறந்த அணுகுமுறை

பெர்கோலியோ கர்தினாலாக உயர்த்தப்பட்ட 2001ஆம் ஆண்டில் உரோமையில் நடந்த ஆயர் மன்றத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் செப்டம்பர் 11ஆம் நாள் பயங்கரவாத தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து நியூயார்க் பேராயர் கர்தினால் எட்வர் ஈகன் நாடு திரும்பினார். அவரே ஆயர் மன்றத்தில் குறிப்புச் செயலராகப் பணியாற்றும் பொறுப்பை ஏற்றிருந்தார். அவருடைய இடத்தில் கர்தினால் பெர்கோலியோ செயல்பட்டு, திறந்த மனதுள்ள ஒருவராகத் தம்மை எண்பித்தார்.[19]

கர்தினாலாகப் பணி

உரோமையில் 2005இல் நடைபெற்ற ஆயர் மன்றக் கூட்டத்தின்போது கர்தினால் பெர்கோலியோ ஆயர் மன்றத் தொடர்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2005, நவம்பர் 8ஆம் நாள் அவர் அர்ஜென்டீனா ஆயர் பேரவைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினர். அதே பணிக்கு அவர் மீண்டும் 2008 நவம்பர் 11ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2007இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திரிதெந்து வழிபாட்டு முறைப்படி இலத்தீனில் திருப்பலி நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் வெளியிட்டார். அவ்வழிமுறைகள் வெளியான இரண்டே நாட்களுக்குள் அவற்றுக்கு ஏற்ப, கர்தினால் பெர்கோலியோ தமது மறைமாவட்டத்தில் அத்திருப்பலி முறை வாரத்துக்கு ஒருமுறை கடைப்பிடிக்கப்பட ஏற்பாடு செய்தார்.[20][21]

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

2013ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அதிர்ச்சியான ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது, தமது முதிர்ந்த வயது காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் தாம் திருத்தந்தைப் பணியைத் துறக்கப்போவதாக அவர் செய்தி வெளியிட்டார். கடந்த சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு ஒரு திருத்தந்தை பணியிலிருந்து விலகியதில்லை. மாறாக, திருத்தந்தைப் பதவி வாழ்நாள் முழுவதற்கும் நீடிப்பது என்ற வழக்கம் நிலவியது.

அந்த அதிர்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2013, மார்ச்சு 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய 115 கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குகள் அளித்தார்கள். அடுத்த நாள் மார்ச்சு 13, புதன்கிழமையன்று கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22][23] இவர் பிரான்சிசு என்பதை தனது ஆட்சி பெயராகத் தெரிவு செய்தார்.[24] அதே நாளில் வத்திக்கான் நகரின் துணை செய்தித் தொடர்பாளர் அருள்திரு தாமசு ரோசிக்கா, இப்பெயரை திருத்தந்தை அசிசியின் பிரான்சிசுவின் நினைவாகத் தேர்வு செய்தார் எனக் கூறினார்.[25][26][27] மேலும் அவர் திருத்தந்தையின் பெயர் பிரான்சிசு என்றும் முதலாம் பிரான்சிசு அல்ல எனவும் தெளிவுபடுத்தினார். பின்னாட்களில் வேறு ஒருவர் பிரான்சிசு என்னும் பெயரினைத் தேர்வு செய்தால் அப்போது இவர் முதலாம் பிரான்சிசு எனக் குறிக்கப்படுவார் எனவும் கூறினார்.[28]

ஆட்சி முத்திரை

திருத்தந்தை பிரான்சிசுவின் ஆட்சி முத்திரை மார்ச்,18,2013 அன்று வெளியிடப்பட்டது.[1] இயேசு சபையின் சின்னத்தையும், "இரக்கமுற்றுத் தேர்ந்துகொண்டார்" என்ற விருதுவாக்கையும், திருத்தந்தை பிரான்சிஸ் தன் ஆட்சி முத்திரையாகப் பயன்படுத்துகிறார். அர்கெந்தீனாவில் புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பணியேற்றபோது பயன்படுத்திய ஆட்சி முத்திரையும், குறிக்கோளுரையையும் திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

IHS என்ற மூன்று எழுத்துக்களும், அவற்றைச் சுற்றி அமைந்துள்ள கதிர்போன்ற அடையாளங்களும் இயேசு சபையினரின் அதிகாரப்பூர்வமான சின்னம். அதற்குக் கீழ் ஒரு விண்மீனும், இலாமிச்சை (spikenard) மலரும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, அன்னை மரியாவையும், புனித யோசேப்பையும் குறிப்பன.

வரிதண்டும் பணியில் இருந்த புனித மத்தேயுவை அன்புடன் பார்த்து, அவரைத் தன்பின்னே வரும்படி இயேசு அழைத்த நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு, "இரக்கமுற்றுத்துத் தேர்ந்துகொண்டார்" என்ற வார்த்தைகளைத் தன் பேராயர் பணிக்கென திருத்தந்தை தேர்ந்திருந்தார். 1953ம் ஆண்டு புனித மத்தேயு திருநாளன்று, அப்போது 17 வயது நிரம்பியவரான திருத்தந்தை பிரான்சிசு, தன் துறவற அழைப்பை உணர்ந்ததால், அந்த நிகழ்வைக் குறிக்கும் வார்த்தைகளைத் தன் பணிவாழ்வின் விருதுவாக்காக மேற்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. மேலும், miserando atque eligendo ("இரக்கமுற்றுத் தேர்ந்துகொண்டார்") என்னும் இலத்தீன் சொற்றொடர், இயேசு சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவைத் தம் சீடராகுமாறு அழைத்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது.

இந்த விவிலிய நிகழ்ச்சிபற்றி விரிவுரை எழுதியவர்களுள் ஒருவர் வணக்கத்துக்குரிய பேதா (The Venerable Bede) என்பவர். 672/3 - 735 ஆண்டுக்காலத்தில் வாழ்ந்த இவர் தமது விரிவுரையில், இயேசு மத்தேயுவைச் சுங்கச்சாவடியில் கண்டு அவர்மீது "இரக்கம் கொண்டு" அவரைத் தம் சீடராகத் "தேர்ந்துகொண்டார்" என்னும் கருத்தை எடுத்துச் சொல்லும் போது miserando atque eligendo என்னும் இலத்தீன் தொடரைப் பயன்படுத்துகிறார். அதையே திருத்தந்தை பிரான்சிசு தமது விருதுவாக்காகக் கொண்டுள்ளார். இதில் இரக்கம் என்னும் கருத்தும் தேர்ந்தெடுத்தல் (வேறுபாடு காட்டாமல் பரிவோடு ஏற்கும் மனப்பான்மை) என்னும் கருத்தும் அடங்கியுள்ளன.[29][30] தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே இக்கருத்துகளைத் திருத்தந்தை பிரான்சிசு தமது உரைகள் வழியாகவும் செயல்கள் வழியாகவும் வெளிப்படுத்தி வருகின்றார்.

திருத்தந்தை பிரான்சிசின் ஆட்சியின் முதல் நாள்கள்

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே பிரான்சிசு திருச்சபையின் ஆட்சி அமைப்பிலும் செயல்பாட்டிலும் சிந்தனைப் போக்கிலும் அடிப்படையான சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதற்கான அறிகுறிகளைத் தெரிவித்தார்.

  • 2013, மார்ச்சு 13, புதன்:

தேர்தல் அவையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கர்தினால் பெர்கோலியோவுக்கு தேர்தலின் இரண்டாம் நாள் ஐந்தாம் சுற்றில் கிடைத்தது. உடனேயே கூடியிருந்த கர்தினால்மார் கையொலி எழுப்பித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

கர்தினால்-வாக்காளர்களில் மூத்தவர் என்ற முறையில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே, கர்தினால் பெர்கோலியோவை அணுகி, சட்டமுறைப்படியான தேர்தல் வழி உமக்கு அளிக்கப்படுகின்ற திருத்தந்தைப் பதவியை ஏற்கிறீரா? என்று கேட்டார். அதற்குக் கர்தினால் பெர்கோலியோ ஏற்கிறேன் என்று பதிலிறுத்தார். அந்நேரத்திலிருந்து கர்தினால் பெர்கோலியோ "திருத்தந்தை" என்னும் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் கர்தினால் ரே, புதிய திருத்தந்தையிடம் என்ன பதவிப்பெயரைத் தெரிந்துள்ளீர்? என்று கேட்டார். அக்கேள்விக்குப் பதில்மொழியாகத் திருத்தந்தை பிரான்சிசு என்று கூறினார்.

பின்னர் திருத்தந்தை பிரான்சிசு சிவப்பு நிறமான தமது கர்தினால் அங்கியைக் களைந்துவிட்டு, திருத்தந்தைக்குரிய வெள்ளை அங்கியை அணிந்துகொண்டார். அந்த அங்கியின் மேல் திருத்தந்தைக்கே உரிய கருஞ்சிவப்பு நிறத்திலான தோள்சுற்றாடை (mozzetta) அணிந்து, அதன்மேல் தங்கக் கழுத்துச் சிலுவை அணியும்படி திருத்தந்தை வழிபாட்டுமுறைத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் திருத்தந்தை பிரான்சிசு அந்த ஆடம்பரம் தமக்கு வேண்டாம் என்று கூறி, தாம் ஆயரான நாளிலிருந்தே அணிந்துவந்துள்ள இரும்பிலான கழுத்துச் சிலுவையை போதும் என்றும், தோள்சுற்றாடை வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

அதன்பிறகு, அவர் கர்தினால்-வேட்பாளர்கள் கூடியிருந்த சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு மீண்டும் சென்று, அங்கு கர்தினால்மார் அளித்த மரியாதையைப் பெற்றுக்கொண்டார். அங்கு வழக்கமாகப் புதிய திருத்தந்தைக்கென்று ஓர் உயர்ந்த மேடையில் இடப்பட்ட அரியணை இருக்கும் அதில் புதிய திருத்தந்தை அமர்ந்திருக்க, ஒவ்வொரு கர்தினாலும் அவர்முன் வந்து, முழந்தாட்படியிட்டு அவருடைய கை மோதிரத்தை முத்திசெய்தி தம் மரியாதையையும் கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்துவர். ஆனால், இங்கேயும் திருத்தந்தை தாம் எளிய முறையைக் கடைப்பிடிப்பதாகக் காட்டினார். அவர் தமக்கென்று போடப்பட்ட அரியணையில் அமராமல், பிற கர்தினால்மார்களைப் போலவே நின்றுகொண்டு அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்னும் பெயருடைய அவர் பிரான்சிசு என்னும் பெயரைத் தெரிந்துகொண்டுள்ளார் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தை மக்கள் முன் தோன்றி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

மக்களுக்கு உரையாற்றியபோது திருத்தந்தை மக்களிடம் தமக்காக இறைவனிடம் அமைதியாக மன்றாடக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு கூறிய பின் சிறிது நேரம் மக்கள் முன்னிலையில் தலைதாழ்த்தி நின்றார். பின்னர் குருத்துவ அடையாளமான தோள்தொங்கல் பட்டையை அணிந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினார். ஆசி வழங்கியதும் அந்தப் பட்டையைக் கழற்றிக்கொடுத்துவிட்டார். இவ்வாறு மக்களோடு ஒருவராகத் தம்மை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தாம் பணியாளனாக இருப்பதைத் திருத்தந்தை செய்கைகள் வழியாக வெளிப்படுத்தினார்.

திருத்தந்தையின் எளிமையையும் பணிவையும் மக்கள் கண்டு வியந்தது மட்டுமல்ல, புதிய திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையில் எளிமை, கனிவு, பணிவு போன்ற பண்புகள் வளர்வதற்குத் தம் பணிக்காலத்தை அர்ப்பணிப்பார் என்று பொருள்கொண்டனர்.

திருத்தந்தை பிரான்சிசுவின் தலைமைப்பணி ஏற்புத் திருப்பலி

2013, மார்ச்சு 19ஆம் நாள், தூய யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தையின் தலைமைப்பணி ஏற்புத் திருப்பலி தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின்போது திருத்தந்தை பிரான்சிசு உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும், அந்தத் தகுதியின் அடிப்படையில் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் பகிரங்கமாகப் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். முன்னாட்களில் "முடிசூட்டல் விழா" (coronation) என்று அழைக்கப்பட்ட இந்த விழாவை எளிமையான விதத்தில் கொண்டாடும்படி பிரான்சிசு விரும்பினார். இயேசுவின் முதன்மைத் திருத்தூதரான புனித பேதுருவின் வழிவரும் பணியாளர் என்ற முறையில் இந்தப் பணிப்பொறுப்பை ஏற்பதாகப் பிரான்சிசு முன்வந்தார்.

திருப்பலியில் குறைந்தது 200,000 மக்கள் கலந்துகொண்டார்கள் என்று கணிக்கப்படுகிறது. வெளிநாட்டுத் தலைவர்களும் தூதர்களுமாக 132 நாடுகளிலிருந்து ஆட்சி அதிகாரிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின் மையப் பொருள் தூய யோசேப்பு திருக்குடும்பத்தின் பாதுகாவலர், திருச்சபையின் பாதுகாவலர் என்பதாகும். மார்ச் 19ஆம் நாள் தூய யோசேப்பின் பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிசின் பதவியேற்பு திருப்பலி நிகழ்வதால் திருத்தந்தை பாதுகாத்தல் என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு மறையுரை ஆற்றினார். இயேசு, மரியா ஆகியோருக்கு புனித யோசேப்பு பாதுகாப்பு அளித்து அவர்களைப் பேணிக் காத்தார். அதுபோலவே அவர் திருச்சபை அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்குகின்றார். மேலும், திருத்தந்தை தம் பணிப்பெயராகத் தேர்ந்து கொண்டுள்ள பிரான்சிசு ஏழைகள் மட்டில் நாம் கரிசனை கொண்டு செயல்பட வேண்டியதின் தேவையை உணர்த்துகிறது.

எனவே "பாதுகாத்தல்" என்பது திருச்சபைக்கும் கிறித்தவர்களுக்கும் முக்கியமான ஒன்று. ஆனால் "பாதுகாத்தல்" என்னும் கருத்து உலக மக்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை மனத்தில் கொண்டு திருத்தந்தை பிரான்சிசு பின்வருமாறு உரையாற்றினர்:

இந்தப் பதவியேற்பு விழாத் திருப்பலியும் அதோடு தொடர்புடைய சடங்குகளும் எளிமையான விதத்தில் நடத்தப்பட்டன. வழக்கமாக எல்லா கர்தினால்மார்களும் திருத்தந்தையை அணுகி அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். ஆனால், இந்த முறை ஆறு கர்தினால்மார் மட்டுமே கர்தினால் குழு அனைத்தின் சார்பிலும் இவ்வாறு மரியாதை செலுத்தச் சென்றார்கள்.[31]

கத்தோலிக்க திருச்சபையிலிருந்து 11ஆம் நூற்றாண்டில் பிரிந்து சென்ற மரபுவழி கீழைத் திருச்சபைக்குத் தலைவராக இருக்கின்ற காண்ஸ்டான்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலொமேயு இந்த விழாவில் கலந்துகொண்டது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். இந்த இரு திருச்சபைகளும் 1054இல் பிரிந்தன. அந்த நாளிலிருந்து இன்றுவரை கீழைத் திருச்சபை முதல்வர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதில்லை.[32]

திருப்பலி தொடங்குவதற்கு முன்னால், திருத்தந்தை புனித பேதுரு கோவில் வளாகத்தில் மக்களிடையே சென்று அவர்களை வாழ்த்தினார். இழைமக் கண்ணாடியால் மூடப்பட்ட சிறப்பு உந்தில் நின்றுகொண்டு மக்களிடையே செல்வது முந்திய வழக்கம். ஆனால் திருத்தந்தை பிரான்சிசு அந்த மூடிய உந்து தமக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். மக்களோடு நேரடி தொடர்புகொண்டு அவர்களோடு உறவாட விரும்பிய அவர் சிறப்பு உந்தில் நின்றுகொண்டு வளாகத்தில் கூடிய மக்கள் நடுவே சென்றபோது, ஆங்காங்கே இறங்கி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். சிறு குழந்தைகளை அவரிடம் கொண்டுவந்தபோது அவர்களுடைய உச்சந்தலையில் முத்தமிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார். குறிப்பாக, ஊனமுற்ற ஒருவரை ஒருசிலர் உயர்த்திப்பிடித்து அவரை ஆசிர்வதிக்கக் கேட்டபோது, திருத்தந்தை வண்டியிலிருந்து இறங்கிச் சென்று அவரைத் தொட்டு முத்தமிட்டு ஆசி வழங்கினார்.

சமயத் தலைவர்கள் வருகை

திருத்தந்தை பிரான்சிசின் பணியேற்பு விழாவில் கலந்துகொள்ள பல நாடுகளின் தலைவர்களும் தூதர்களும் வந்திருந்தனர். 132 நாடுகளிலிருந்து வந்திருந்த ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்த வரிசைகளுக்கு முன்னால் பீடத்தின் அருகில் 250 கர்தினால்மார் தமது வழிபாட்டு உடைகளை அணிந்தவர்களாக அமர்ந்திருந்தனர்.

புனித பேதுரு பெருங்கோவிலின் படிகளுக்குக் கீழ்ப்பகுதியில் கிறித்தவ சபைகள், யூத மதம், இசுலாம், புத்தமதம் ஆகிய சமயங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர்.

கம்பளிக் கழுத்துப்பட்டை அணிவித்த சடங்கு

மேடையில் அமர்ந்திருந்த திருத்தந்தை பிரான்சிசுக்குக் கம்பளிக் கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்டது. திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் (Habemus Papam) என்று 2013 மார்ச்சு 13ஆம் நாள் உலகுக்கு அறிவித்த கர்தினால் ழான்-லூயி தோரான் என்பவர் திருத்தந்தைக்கு அந்தக் கழுத்துப்பட்டையை அணிவித்தார். கம்பளி ஆடுகளிலிருந்து பெறப்பட்ட கம்பளியைக் கொண்டு நெய்யப்பட்ட அந்தக் கழுத்துப் பட்டை கிறித்தவ மக்கள் என்னும் "ஆட்டுமந்தையை" கரிசனையோடு மேய்த்து, வழிநடத்தும் தலைவராக, நல்ல ஆயராகத் திருத்தந்தை விளங்க வேண்டும் என்னும் உண்மையை நினைவுபடுத்தும் அடையாளம் ஆகும்.[33]

"மீனவர் கணையாழியை" அணிவித்த சடங்கு

பின்னர் கர்தினால் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செயோ சொடானோ என்பவர் திருத்தந்தையை அணுகி, அவருடைய வலதுகை மோதிரவிரலில் "மீனவர் கணையாழி" (Fisherman's Ring) என்று அழைக்கப்படும் மோதிரத்தை அணிவித்தார். இந்த மோதிரம் திருத்தந்தையின் அதிகாரத்தின் சின்னம் ஆகும். இயேசுவின் முதன்மைச் சீடரான புனித பேதுரு மீனவராக இருந்தார் என்பதால், பேதுருவின் வழித்தோன்றலாகப் பதவியேற்கும் திருத்தந்தையும் அந்த மீனவர் கணையாழியை அணிகின்றார். திருத்தந்தை பிரான்சிசுக்கு அணிவிக்கப்பட்ட மோதிரம் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிக் கணையாழி ஆகும். இதை என்றிக்கோ மான்ஃப்ரீனி என்னும் கலைஞர் திருத்தந்தை ஆறாம் பவுலுக்கென்று வடிவமைத்திருந்தார். அந்த மோதிரத்தில் புனித பேதுரு கைகளில் திறவுகோல்களைத் தாங்கி நிற்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மோதிரத்தைத் திருத்தந்தை ஆறாம் பவுல் அணியவில்லை. அவர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைச் சித்தரித்த மோதிரத்தை அணிந்தார். ஆனால் ஆறாம் பவுலுக்கென உருவாக்கப்பட்ட மோதிரத்தின் அச்சு பாதுகாக்கப்பட்டிருந்ததால் அதைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட மோதிரத்தைத் தாம் விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிசு கூறியதன்படி அவருக்கு அந்த மோதிரம் அணிவிக்கப்பட்டது.[34]

புனித யோசேப்பு பெருவிழாவின் பொருள்

மார்ச்சு 19ஆம் நாள் திருச்சபை புனித யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. அந்த நாளில் தமது பணியேற்பு விழா நடைபெறுவது பொருத்தமே என்று திருத்தந்தை தாம் ஆற்றிய மறையுரையில் சுட்டிக்காட்டினார்.[35] மேலும் புனித யோசேப்பைப் போன்று உலக மக்கள் அனைவரும், குறிப்பாக நாடுகளின் ஆட்சியாளர்கள், மக்களைப் "பாதுகாக்க" வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிசும் ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் சந்தித்தல்

2013, மார்ச்சு 23ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு திருத்தந்தையர்களின் கோடையில்லத்தில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்ற முன்னாள் திருத்தந்தை பெனடிக்டைச் சென்று சந்தித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

வத்திக்கான் நேரம் 12:05 அளவில் திருத்தந்தை இத்தாலிய உலங்கு வானூர்தியில் ஏறிச்சென்று, 10 நிமிட பயணத்திற்குப் பின் திருத்தந்தையர் கோடையில்லமாகிய காஸ்டல் கண்டோல்ஃபோ வானூர்தித் தளத்தில் இறங்கினார். அங்கு அவரை வரவேற்பதற்காக, ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்ட் நின்றுகொண்டிருந்தார். பிரான்சிசும் பெனடிக்டும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்.

பின்னர் சிற்றுந்தில் ஏறி இருவரும் கோடையில்லம் சென்றனர். அங்கு அமைந்துள்ள சிற்றாலயத்தில் இறைவேண்டல் செய்ய இருவரும் நுழைந்தனர். திருத்தந்தைக்கென மைய பீடத்தின் நடுவில் இடப்பட்டிருந்த தனிப்பட்ட சிறப்பு வேண்டல் முழந்தாட்பீடத்தில் மன்றாட்டு நிகழ்த்துப்படி பெனடிக்டு திருத்தந்தை பிரான்சிசைக் கேட்டார். ஆனால் பிரான்சிசு வேகமாக நடந்து சென்று, பொதுமக்களுக்கென்று இடப்பட்ட சாதாரண முழந்தாட்பீடத்தில் பெனடிக்டின் அருகே தாமும் முழந்தாட்படியிட்டு வேண்டச் சென்றார். அப்போது பெனடிக்டைப் பார்த்து, "நாம் இருவரும் சகோதரர்கள்" என்று கூறினார். இவ்வாறு, பிரான்சிசு செய்தது அர்த்தம் நிறைந்த செயலாகக் கருதப்படுகிறது.

12:30 அளவில் திருத்தந்தை பிரான்சிசும் ஒய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் நூலக வரவேற்பு அறையில் சந்தித்து 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எப்பொருள் பற்றி விவாதித்தார்கள் என்பது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உணவறைக்குச் சென்று அங்கு இருவரும் நண்பகல் உணவு அருந்தினர். பின்னர் திருத்தந்தை பிரான்சிசு உலங்கு வானூர்தி ஏறி மீண்டும் வத்திக்கான் சென்றடைந்தார்.

பதவியில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிசும் ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் இவ்வாறு சந்தித்தது வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்ச்சி. பல நூற்றாண்டுகளாகவே, திருத்தந்தையின் இறப்புக்குப் பின்னர்தான் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தைப் பின்பற்றாமல் திருத்தந்தை 16ஆம் பெனடிக்டு 2013, பெப்ருவரி 28ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற திருத்தந்தை புதிதாகப் பதவியேற்ற திருத்தந்தையின் ஆட்சியில் தலையிடுவாரா? அவருக்கு எதிரான அதிகார மையமாக அமைந்துவிடுவாரா? - இத்தகைய கேள்விகள் எழுகின்ற பின்னணியில் இரு திருத்தந்தையரும் சந்தித்தது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.[36][37][38]

திருத்தந்தை பிரான்சிசின் நூல் படைப்புகள் (எசுப்பானிய மொழியில்)

  • Meditaciones para religiosos (1982) (துறவிகளுக்கான தியானங்கள்)
  • Reflexiones sobre la vida apostólica (1986) (திருத்தூது வாழ்வு பற்றிய சிந்தனைகள்)
  • Reflexiones de esperanza (1992) (எதிர்நோக்கு பற்றிய சிந்தனைகள்)
  • Diálogos entre Juan Pablo II y Fidel Castro (1998) (திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இடையே உரையாடல்)
  • Educar: exigencia y pasión (2003) (கல்வி பயிற்றுவித்தல்: அதன் தேவையும் ஈடுபாடும்)
  • Ponerse la patria al hombro (2004) (நாட்டைத் தோளில் எடுத்தல்)
  • La nación por construir (2005) (நாட்டைக் கட்டியெழுப்புதல்)
  • Corrupción y pecado (2006) (ஊழலும் தீவினையும்)
  • Sobre la acusación de sí mismo (2006)(தற்குற்றம் நாட்டல்)
  • El verdadero poder es el servicio (2007) (பணிபுரிவதே உண்மையான அதிகாரம்)
  • Mente abierta, corazón creyente (2012) (திறந்த மனதும் நம்புகின்ற இதயமும்)
  • Jorge Bergoglio; Abraham Skorka (2010). Sobre el cielo y la tierra (in Spanish). Buenos Aires: Editorial Sudamericana. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789500732932. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)[39]

விமர்சனங்கள்

திருத்தந்தை பிரான்சிசு பதவியேற்ற ஒரு சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே அவர் அர்ஜென்டீனாவில் இயேசு சபைத் தலைவராகவும் கத்தோலிக்க திருச்சபையின் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் இருந்த காலத்தில் சமூகம், அரசியல் தொடர்பாக என்னென்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தார் என்பது பற்றிய விமர்சனங்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. அவ்வாறு வெளியான செய்திகளில் பல அவருடைய செயல்பாடுகளைப் போற்றி உரைத்தன. குறிப்பாக, பெர்கோலியோ ஏழை மக்களுக்கு உதவியது, தம் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடித்தது, புவேனோஸ் ஐரேஸ் மாநகரின் சேரிகளில் வாழ்ந்த மக்களைச் சென்று சந்தித்து அவர்களோடு தோழமை கொண்டாடி, அவர்களுடைய இன்பதுன்பங்களில் கலந்துகொண்டது போன்ற நல்ல விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.

அதே நேரத்தில் அவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை ஆட்சியாளர்களுள் ஒருவராக இருந்ததாலும், இயேசு சபையில் மாநிலத் தலைவராகச் செயல்பட்டதாலும் அந்த ஆட்சிக் காலத்தில் சமூகப் பிரச்சனைகளை எவ்வாறு அணுகினார், எவ்வாறு அணுகவில்லை, அவருடைய அணுகுமுறையில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன என்பது குறித்தும் கருத்துகள் வெளியாயின.

எனவே, கத்தோலிக்க திருச்சபையின் இன்றைய உலகளாவிய தலைவராக, 1.2 பில்லியன் மக்களை வழிநடத்துபவராகத் திருத்தந்தை பிரான்சிசு விளங்குவதால் அவரது செயல்பாடுகள்குறித்த விமரிசனங்களை எடுத்துக் கூறும்போது அவர் செயல்பட்ட காலம், அக்காலத்தின் அரசியல் சமூக பின்னணிகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்துவது இன்றியமையாதது.

அர்ஜென்டீனாவின் "இழிவான போர்" காலம் (1976-1983)

அர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் சர்வாதிகார ஆட்சி, இராணுவ ஆட்சி, அவற்றின் விளைவாக எழுந்த வன்முறைகள், அரசு எதிர்ப்பாளர்களைக் கைதுசெய்து, சித்திரவதை செய்து, கொன்றுபோடுகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளன. அந்த வரலாற்றில் மிக மோசமான ஒரு கால கட்டம் அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலம் (Dirty War) (1976-1983) என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் இன்று திருத்தந்தை பிரான்சிசு என்னும் பெயரில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹோர்கே பெர்கோலியோவுக்கு எந்த விதத்திலாவது தொடர்பு இருந்ததா என்பது இன்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

அர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்:[40]

  • 1946-1955: ஹுவான் பெரோன் என்னும் வலதுசாரி இராணுவத்தலைவர் நாட்டுத் தலைவராக ஆட்சிசெய்தார்.
  • 1955 செப்டம்பர் - இராணுவத்தின் மூன்று பிரிவுகளும் இணைந்து மூன்று நாள் பயங்கரச் சண்டைக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றின. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். பெரோன் பணிதுறந்தார். இறுதியில் எசுப்பானியாவில் தஞ்சம் புகுந்தார். நாட்டின் ஆட்சிச் சட்டம் (1893) மீண்டும் செயல்முறைக்குக் கொண்டுவரப்பட்டது.
  • 1966 - மீண்டும் இராணுவ ஆட்சி தளபதி ஹுவான் கார்லோஸ் ஓங்கானியா தலைமையில் அமைக்கப்பட்டது.
  • 1973 - பெரோன் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பயங்கரவாத வன்முறை நாட்டில் கோலோச்சியது. ஹுவான் பெரோன் எசுப்பானியாவிலிருந்து அர்ஜென்டீனா திரும்பி ஆட்சித் தலைவர் ஆனார்.
  • 1974 சூலை - ஹுவான் பெரோன் இறப்பு. அவருடைய மூன்றாம் மனைவி இசபெல் பெரோன் பதவி ஏற்றார். வலதுசாரி மற்றும் இடதுசாரி வன்முறை அதிகரித்தது. நூற்றுக்கணக்கானோர் வன்முறைக்குப் பலியாயினர். வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தன. பணவீக்கம் ஓங்கியது.
  • 1975 - பணவீக்கம் 300% எல்லைக்கு மேல் சென்றது.
  • 1976 - தளபதி ஹோர்கே விதேலா என்பவர் தலைமையில் இராணுவக் கூட்டாட்சி (military junta) ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இராணுவ ஆட்சியை எதிர்த்தவர்கள், மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்கள், கல்லூரி மாணவர்கள், சமூகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டார்கள். மேலும் பெயரோ முகவரியோ இன்றி "காணாமற்போனவர்கள்" அரசு கொடுமைக்கு ஆளானர்கள். இந்த "அரசு பயங்கரவாதம்" (state terrorism) அர்ஜென்டீனாவின் இழிவான போர் (Dirty War) என்னும் பெயரால் அறியப்படுகிறது. அத்தகைய அரசு பயங்கரவாதம் 1983 வரை நீடித்தது.
  • 1981 - இராணுவ ஆட்சிக்குத் தளபதி லெயோப்போல்டோ கல்த்தியேரி (General Leopoldo Galtieri) தலைமை ஏற்றார்.
  • 1982 ஏப்பிரல் - தளபதி கல்த்தியேரி கொடுத்த கட்டளையின்மேல் அர்ஜென்டீனிய படைகள் ஃபாக்லாந்து தீவுகளைக் கைப்பற்றின. ஐக்கிய இராச்சியம் தனது அயல்நாட்டுக் குடியேற்றப் பிரதேசமாகக் கருதிய அத்தீவுகளை மீட்க படை அனுப்பியது. போரில் 700 அர்ஜென்தீனியர் இறந்தனர். ஐக்கிய இராச்சியம் தீவுகளை மீண்டும் கைவசம் கொண்டுவந்தது. தளபதி கல்த்தியேரி பதவி இறங்கினார், தளபதி ரேய்னால்டோ பிக்னோனே என்பவர் பதவி ஏற்றார்.
  • 1983 - இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு அர்ஜென்டீனா குடிமக்கள் ஆட்சிக்குத் திரும்பியது. ராவுல் அல்ஃபோன்சின் என்பவர் அதிபர் ஆனார். உடனேயே அரசு இழிவான போர் நடந்த கால கட்டத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியினர் நிகழ்த்திய அட்டூழியங்களை விசாரிக்கக் கட்டளையிட்டது. அப்போது ஆட்சியில் பங்கேற்ற இராணுவத் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியது பற்றித் தகவல் சேகரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வழி ஏற்பட்டது. பணவீக்கம் 900% அளவை மிஞ்சியது.
  • 1989 - பெரோன் கட்சியைச் சார்ந்த கார்லோஸ் மேனெம் என்பவர் நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1995 - கார்லோஸ் மேனெம் மீண்டும் அதிபரானார்.
  • 1996 - நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொது வேலைநிறுத்தம்.
  • 1997 - எசுப்பானியாவில் ஒரு நீதிபதி அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் (1976-1983) அர்ஜென்டீனிய இராணுவ அதிகாரிகள் எசுப்பானிய குடிகளைக் கடத்திச்சென்றதற்கும் அவர்களைக் கொன்றதற்கும் தண்டனைபெற வேண்டும் என்று கூறி அவர்களைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தது. ஆனால் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அர்ஜென்டீனிய மன்னிப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்தது.
  • 1998 - அர்ஜென்டீனிய நீதிபதிகள் இழிவான போர் காலத்தில் (1976-1983) பெண்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுடைய குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றத்தைச் செய்தவர்களைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தனர்.
  • 1999 - மைய-இடதுசாரிக் கூட்டணி ஃபெர்னாண்டோ தெ லா ரூவா தலைமையில் பதவி ஏற்றது.
  • 2001 அக்டோபர் - நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியினரான பெரோன் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்றார்கள்.
  • 2001, திசம்பர் 20 - மோசமாகிப்போன பொருளாதார நிலை காரணமாகக் கலவரங்களும் எதிர்ப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிபர் ஃபெர்னாண்டோ தெ லா ரூவா பதவி துறந்தார்.
  • 2002, சனவரி 1 - பெரோன் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதுவார்தோ துகால்தே தற்காலிகத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2003 மே - நெஸ்டோர் கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
  • 2003 ஆகத்து - இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிப் பங்கேற்ற இராணுவத் தலைவர்களுக்கு மனித உரிமை மீறல் விசாரணையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் இயற்றின.
  • 2005 சூன் - நாட்டின் உச்ச நீதிமன்றம் இழிவான போர் காலத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் பங்கேற்றதாகக் கருதப்பட்ட இராணுவ ஆட்சியாளர்களை விசாரிப்பதிலிருந்து அளித்த பாதுகாப்பை விலக்கிவிட கட்டளை இட்டது.
  • 2005 நவம்பர் - அமெரிக்காக்களின் உச்ச மாநாடு அர்ஜென்டீனாவில் நடந்தது. அமெரிக்க அதிபர் ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்க்கு எதிராகவும் சுதந்திர வாணிகத்துக்கு எதிராகவும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
  • 2006 சனவரி - அனைத்துலக நாணய நிதியத்துக்கு அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்த வேண்டிய பல பில்லியன் டாலர் கடனை அர்ஜென்டீனா செலுத்தியது.
  • 2006 அக்டோபர் - முன்னாள் அதிபர் தளபதி ஹூவான் பெரோனின் உடலைப் புவேனோஸ் ஐரேஸ் நகரின் வேறொரு பகுதியில் புதைத்த போது வன்முறை நிகழ்ந்தது.
  • 2007 சனவரி - வலதுசாரி இராணுவக் குழுக்கள் 1970களில் கட்டவிழ்த்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த அப்போது ஆட்சியிலிருந்த இசபெல் பெரோன் கைதுசெய்யப்பட்டார்.
  • 2007 அக்டோபர் - அர்ஜென்டீனாவின் காவல்துறை ஆன்ம குருவாகச் செயல்பட்ட கிறிஸ்தியான் ஃபோன் வேர்னிச் என்பவர் அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் (1976-1983) கைதிகளைச் சித்திரவதை செய்து, கொன்ற நிகழ்ச்சிகளில் ஒத்துழைத்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
  • நாட்டு அதிபர் நெஸ்டோர் கிர்ச்னருக்குப் பின், அவருடைய மனைவி கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2007 திசம்பர் - கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
  • 2008 ஏப்ரல்- முன்னாள் அதிபர் இசபெல் பெரோன் தமது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டதால் அவரை அர்ஜென்டீனாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அர்ஜென்டீனா அரசு கேட்டது. அக்கோரிக்கைக்கு இணங்குவதற்கு எசுப்பானிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • 2008 ஆகத்து - 1973 முதல் 1983 வரை இராணுவ ஆட்சிக்காலத்தில் நடந்த இழிவான போர் காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு முன்னாள் தளபதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
  • 2009 சூலை - சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தீனா கிர்ச்னரின் பெரோன் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தது.
  • 2009 திசம்பர் - தற்போது ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகையின் கீழ் உள்ள ஃபாக்லாந்து தீவுகளும் வேறு பல தீவுகளும் தனது ஆளுகைக்கு உட்பட்டது என்று அர்ஜென்டீனிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
  • 2010 சூலை - ஓரினத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக நடத்தப்படலாம் என்று அர்ஜென்டீனா சட்டம் இயற்றுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் இவ்வாறு ஓரினத் திருமணங்களை ஏற்கும் ஒரே நாடு அர்ஜென்டீனா தான்.
  • 2010 அக்டோபர் - முன்னாள் அதிபர் நெஸ்டோர் கிர்ச்னர் இறப்பு. அவர் அதிபர் கிறிஸ்டீனா கிர்ச்னரின் கணவர். நெஸ்டோர் 2011இல் நிகழவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
  • 2010 திசம்பர் - மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் இராணுவத் தளபதி-ஆட்சியாளர் ஹோர்கே விதேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
  • 2011 அக்டோபர் - அர்ஜென்டீனாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அதிபர் கிறிஸ்டீனா கிர்ச்னர் இரண்டாம் முறை பதவியைக் கைப்பற்றினார். அவருக்கு 54% வாக்குகள் கிடைத்தன.
  • முன்னள் கடல்படைத் தலைவர்களுள் ஒருவரான ஆல்பிரேடோ ஆஸ்டிஸ் என்பவருக்கும் அவரோடு பாதுகாப்புப் படையினர் வேறு பதினொரு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியில் பங்கேற்று மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற அடிப்படையில் இத்தண்டனை பெற்றார்கள்.
  • 2012 சூலை - அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் (1976-1983) அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளைத் திருடியதை மேற்பார்வை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் இராணுவ ஆட்சித் தலைவர் ஹோர்கே விதேலா மற்றும் ரெய்னால்டோ பிக்னோனே என்பவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் வேறு மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.

மேலே தரப்பட்டுள்ள வரலாற்றுப் பின்னணியில் திருத்தந்தை பிரான்சிசு அர்ஜென்டீனா கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்னும் முறையிலும் இயேசு சபைக்கு அந்நாட்டில் தலைவராகச் செயல்பட்டார் என்னும் முறையிலும் மனித உரிமை மீறலில் எத்தகைய பொறுப்பு கொண்டிருந்தார் என்பது ஆய்வுக்கு உரியது.

படையாட்சியாளர்களுடன் பெர்கோலியோவுக்குத் தொடர்பு இருந்ததா என்பது பற்றிய சர்ச்சை

அர்கெந்தீனா மற்றும் குவாத்தமாலாவில் இயங்கும் காணாமல் போனவர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு (HIJOS), பிரான்சிசு பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் திருடப்பட்டதிலும், இரண்டு குருக்கள் படைத்துறையினரிடம் பிடிபட்டு சித்திரவதைப்பட்டபோதும் அவர்களைக் காக்க எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியது.[41] இக்குற்றச்சாட்டை அர்கெந்தீனாவின் முதன்மை ஊடகவியாளர்களில் ஒருவரான கொராசியோ வெர்பிற்சுகி (Horacio Verbitsky) தனது நூல் ஒன்றில் முன்வைத்தார். அக்குற்றச்சாட்டுக்கு ஆதாரம், கடத்தப்பட்ட குருக்களில் ஒருவர் கூறிய வாக்குமூலம் என்று கொராசியோ பத்து ஆண்டுகளுக்கு முன் கூறினார். சர்வாதிகார ஆட்சியின் போது (அர்ஜென்டீனாவின் இழிந்த போர்) நடந்த காலத்தில் (1976-1983) கத்தோலிக்க சமயக் குருக்கள் மற்றும் நற்பணியாளர்களுக்கு எதிராக அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அப்பின்னணியில் மேற்கூறிய இரு குருக்களையும் பாதுகாக்கவும் அவர்களை உயிரோடு மீட்டுக் கொணரவும் பெர்கோலியோ பெருமுயற்சி செய்தார் என்பதே உண்மை என்றும், அவர்மீது குற்றம் சாட்டுவது தவறு என்றும் பலர் கூறியுள்ளனர்.[42]

மேலும், பெர்கோலியோ மீது சாட்டப்படுகின்ற இக்குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் இவ்விரு குருக்களும் படைத்துறையினரால் விடுவிக்கப்பட்டபின்பு அப்போதைய கர்தினால் பெர்கோலியோவுடன் இணைந்து உழைத்தனர் எனவும், திருப்பலியும் திருவருட்சாதனமும் நிறைவேற்றினர் எனவும் வத்திக்கான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.[43]

இராணுவ ஆட்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட குருக்களில் ஒருவர் இறந்துவிட்டார். அங்கேரியில் பிறந்து அர்ஜென்டீனா சென்று பணிபுரிந்தவரும் இப்போது உயிரோடு இருப்பவருமான அருள்திரு பிரான்சு யாலிக்சு (Franz Jalics, S.J.) இவ்விடயம் குறித்து செருமானிய மொழியில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில், தான் கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கும் பெர்கோலியோவுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து, தான் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் கூறியது:[44]

திருத்தந்தை பிரான்சிசு குற்றமற்றவர் என்று சான்றுகூறுவோரில் ஒரு முக்கிய நபர் அடோல்ஃபோ பேரஸ் எஸ்கிவேல் (Adolfo Perez Esquivel) என்பவர். இவர் அர்ஜென்டீனாவின் இராணுவ ஆட்சியின்போது நிகழ்ந்த அட்டூழியங்களை உலகுக்கு வெளிப்படுத்தியதற்காக 1980இல் நோபல் பரிசு பெற்றவர். அவர் புவேனோஸ் ஐரேசில் "ராடியோ டெ லா ரேத்" (Radio de la Red) என்னும் ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது[45]:

"திருத்தந்தை பிரான்சிசுக்கும் அர்ஜென்டீனா சர்வாதிகாரிகளுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது" - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

2013, மார்ச்சு 18, திங்கள் கிழமை வெளியான செய்திப்படி, திருத்தந்தை பிரான்சிசு அர்ஜென்டீனாவில் இயேசு சபைத் தலைவராக இருந்த காலத்தில் அப்போது இராணுவத் தளபதிகளின் சர்வாதிகார ஆட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் அந்த ஆட்சியினரோடு எந்தவிதத்திலும் ஒத்துழைத்தது கிடையாது என்று அர்ஜென்டீனாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிக்கார்டோ லொரென்சேட்டி (Ricardo Lorenzetti) திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இயேசு சபையைச் சார்ந்த இரு குருக்களை இராணுவத்தினர் கடத்திக் கொண்டுபோய், பல மாதங்கள் சித்திரவதை செய்து அரைநிர்வாணமாக விட்டதற்கு அவர்களின் தலைவராக இருந்த பெர்கோலியோ உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டீனாவின் "கான்டினென்டல் ரேடியோ" (Radio Continental) என்னும் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அந்நாட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இவ்வாறு அறிக்கை விடுத்தார்.

இச்செய்தி பிரான்சு நாட்டின் முக்கிய இதழாகிய La Croix என்னும் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதே இதழ் எசுப்பானிய மொழியில் அர்ஜென்டீனாவின் தலைமை நீதிபதி வழங்கிய நேர்காணல்-உரையாடலுக்கான இணைப்பையும் கொடுத்துள்ளது[46]

கருக்கலைப்பு, கருத்தடை, கருணைக் கொலை

திருத்தந்தை பிரான்சிசு பெண்களின் சில குறிப்பிட்ட உரிமைகள் தொடர்பாக அடிப்படைவாதக் கொள்கையாளராக விமர்சிக்கப்படுகிறார். திருமண முறிவு, பெண்களுக்குக் குருத்துவம் அளிப்பது, பெண்களின் உடல் நலம் சார்ந்த உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் கருக்கலைப்பு மற்றும் கருத்தடைக்கான உரிமை ஆகியவற்றை கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ படிப்பினைகளின் படி எதிர்ப்பவர் ஆவார்.[47] கருக்கலைப்பு, குழந்தைக்குக் கருவில் அளிக்கப்படும் மரண தண்டனை எனக் கூறியுள்ளார்.[48][49] கருணைக் கொலை செய்வதைக் கடுமையாக எதிர்ப்பவர் ஆவார். மேலும் இவற்றில் எக்கொள்கையையேனும் சரி எனக் கடைபிடிப்பவர்கள் நற்கருணை வாங்கத் தகுதியற்றவர்கள் எனவும் கூறியுள்ளார்.[50][51]

நங்கை, நம்பி, ஈரர், திருனர்

கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளின் படி இவர் நங்கை, நம்பி, ஈரர், திருனர் பாலியல் நடத்தைகளையும் கடுமையாக எதிர்த்துள்ளார். ஆயினும் தற்பால் ஈர்ப்பு உடையவர்களை மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.[52][53]

இவர் பாலியல், திருமணம் தொடர்பாக அடிப்படைவாத கொள்கையாளார் ஆவார். அர்கெந்தீனாவில் நநஈதி திருமண உரிமைச் சட்டம் தொடர்பாக இவர் "இறைவனின் போர்" என்று கூறி கடுமையான எதிர்ப்பைத் திரட்டினார். அச்சட்டம் "சாத்தானின் திட்டம்" என்றும் விமர்சித்தார்.[54] மேலும் ஓரினத் தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுப்பது அக்குழந்தைகளுக்கு அநீதி இழைப்பதாகும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு கருத்துத் தெரிவித்தற்காக அர்ஜென்டீனா நாட்டுக் குடியரசுத்தலைவர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் கர்தினால் பெர்கோலியோவுக்கு வெளிப்படையான எதிர்ப்பினைக் காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிசு வெளியிட்ட முதல் சுற்றுமடல்

(காண்க:நம்பிக்கை ஒளி சுற்றுமடல் - ஆங்கிலத்தில்)

திருத்தந்தை பிரான்சிசு ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களுக்குள் தமது முதல் சுற்றுமடலை 2013, சூன் 29ஆம் நாள் வெளியிட்டார். அம்மடல் "நம்பிக்கை ஒளி" (Light of Faith; இலத்தீனில் Lumen Fidei) என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

இரு திருத்தந்தையரின் கூட்டுப் படைப்பு

திருத்தந்தை பிரான்சிசின் முதல் சுற்றுமடல் ஒரு கூட்டுப்படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதவி துறந்த வேளையில் இம்மடலைத் தொகுக்கத் தொடங்கியிருந்தார். அக்கையெழுத்துப் படியைத் தமக்குப் பின் பதவியேற்ற திருத்தந்தை பிரான்சிசிடம் அவர் ஒப்படைத்திருந்தார்.

பிரான்சிசு அம்மடலை நிறைவுக்குக் கொணர்ந்து அதைத் தமது பெயரில் வெளியிட்டார். இவ்வாறு "நம்பிக்கை ஒளி" என்னும் சுற்றுமடல் ஒரு கூட்டுப் படைப்பாக விளங்குகிறது.

முப்பெரும் சுற்றுமடல்கள்

திருத்தந்தை பெனடிக்ட் தம் ஆட்சிக்காலத்தில் கிறித்தவ மரபின்படி நம்பிக்கை (faith), எதிர்நோக்கு (hope), அன்பு (charity) என்னும் மூன்று இறையியல் பண்புகள் பற்றிப் படிப்பினை ஏடுகளைச் சுற்றுமடல்களாக வெளியிடத் தொடங்கியிருந்தார். அன்பு, எதிர்நோக்கு ஆகிய இரண்டு நற்பண்புகள் பற்றி எழுதிய அவர் நம்பிக்கை என்னும் நற்பண்பு பற்றி ஒரு சுற்றுமடலை எழுதி வெளியிட்டு, முப்பெரும் சுற்றுமடல் தொகுதியை நிறைவுசெய்ய எண்ணியிருந்த வேளையில் தம் திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். எனவே, தமது படைப்பை அவர் ஒரு தனி நூலாக, தனிப்பட்ட முறையில் வெளியிடக் கூடும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பெனடிக்ட் நம்பிக்கைப் பற்றி எழுதிய வரைவைத் திருத்தந்தை பிரான்சிசு அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதில் தமது கருத்துகளையும் இணைத்து, மறுபார்வையிட்டு, தமது பெயரில் வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கை ஒளி சுற்றுமடல் வழங்கும் போதனை

(காண்க:நம்பிக்கை ஒளி சுற்றுமடலின் சுருக்கம் - ஆங்கிலத்தில்)

இச்சுற்றுமடலில் திருத்தந்தை பிரான்சிசு கிறித்தவப் போதனையின் சில அடித்தளங்களை விளக்குகிறார். அதாவது, கடவுளை நம்புதல் மனித வாழ்வுக்கு ஒளியாக உள்ளது. இயற்கையின் துணையோடு மனிதர் கடவுள் நம்பிக்கையைக் கண்டடையலாம் என்றாலும், கடவுளை நம்பி ஏற்பதற்கு ஓர் இறையொளி தேவையாகிறது. இதுவே நம்பிக்கை என்னும் நற்பண்பு, கடவுளின் கொடை. இயேசு கிறிஸ்துவை ஏற்று நம்புதல் இந்த நம்பிக்கை ஒளியின் துணையோடுதான் நிகழ்கிறது. இயேசு கிறிஸ்துவை அறிந்து, அவரில் நம்பிக்கை கொள்ளும் செயல் மனித வாழ்வுக்கு நிறைவைக் கொணர்கிறது.

நம்பிக்கை என்பது மனிதரின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்றாலும் அது பகுத்தறிவுக்கு எதிரானதல்ல. மாறாக, மனிதரின் பகுத்தறிவு வெளிப்படுத்துகின்ற விழுமியங்கள் நம்பிக்கையால் உறுதிப்படுகின்றன.

நம்பிக்கை என்னும் நற்பண்பு நீதி மற்றும் அன்பு என்னும் நற்பண்போடு நெருக்கமான தொடர்புடையது. மனிதரிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, எல்லாரும் அன்பிலும் அமைதியிலும் வாழ்ந்திட உழைப்பதற்கான உந்துதல் நம்பிக்கையிலிருந்து பிறப்பதே.

இக்கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிசு தமது முதல் சுற்றுமடலாகிய நம்பிக்கை ஒளி என்னும் போதனை ஏட்டில் விளக்குகிறார்.

அகதிகளுக்கும் புலம்பெயர்வோருக்கும் ஆதரவு காட்டும் திருத்தந்தை பிரான்சிசு

திருத்தந்தை பிரான்சிசு கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலிருந்தே ஏழைகள் மட்டில் தனிக் கரிசனம் காட்டியுள்ளார். உரோமை நகருக்கு வெளியே அவர் முதன்முறை அதிகாரப்பூர்வமாகப் பயணமாகச் சென்றதும் ஏழை மக்களுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்குவதற்கே என்பது குறிப்பிடத்தக்கது[55].

லாம்பெதூசா தீவு

இத்தாலி நாட்டின் ஒரு பிரதேசமான சிசிலித் தீவில் அக்ரிஜெந்தோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறு தீவின் பெயர் "லாம்பெதூசா" (Lampedusa). ஆப்பிரிக்க அகதிகள் லிபியா, துனீசியா போன்ற நாடுகளிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு லாம்பெதூசா வந்தடைகின்றனர். அவ்வாறு வருகின்றவர்களுள் பலர் படகு விபத்தின் காரணமாகக் கடலில் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு, பிழைப்புத் தேடி வந்து கடலில் மாண்டுபோனவர்களுக்காக இறைவேண்டல் செய்யவே திருத்தந்தை பிரான்சிசு 2013, சூலை 8ஆம் நாள் லாம்பெதூசா தீவுக்குச் சென்றார். தம் நாட்டை விட்டு வெளியேறி, பிற நாடுகளுக்கு அகதிகளாகச் செல்வோர் உலகெங்கிலும் சுமார் 8 மில்லியன் இருப்பர். 5000 மக்களை மட்டுமே கொண்ட சிறிய தீவாகிய லாம்பெதூசாவில் பல்லாயிரக் கணக்கான அகதிகள் சென்றிறங்குகின்றனர். அவர்களுடைய துன்ப நிலை தம் இதயத்தில் தைத்த முள் போல உறுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.

அகதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிசு அம்மக்களுக்கு ஆதரவு தருகின்ற லாம்பெதூசா மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் அகதிகளின் நிலைகுறித்து உலக மக்களிடையேயும் நாடுகளிடையேயும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், அகதிகளின் அவல நிலையைப் பயன்படுத்தி அநியாயமாகப் பணம் ஈட்டுகின்ற இடைத் தரகர்களின் செயல்பாட்டையும் அவர் கண்டித்தார். கடலைக் கடந்து வந்தபோது விபத்துக்கு உள்ளாகி இறந்த அகதிகளின் நினைவாக ஓர் மலர் வளையத்தை அவர் கடலில் இட்டார்.

திருப்பலி நிறைவேற்றியபோது திருத்தந்தை மரத்தால் செய்த ஒரு கிண்ணத்தைப் பயன்படுத்தினார். அந்த மரக்கிண்ணம் அகதிகளை ஏற்றிவந்த ஒரு படகின் மரத்தால் செய்யப்பட்டது ஆகும்.

அகதிகளின் அவலநிலை

2011இல் ஆப்பிரிக்க அகதிகள் சுமார் 62 ஆயிரம் பேர் ஆபத்தான படகுப் பயணம் மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றனர். அவர்களுள் பலர் லாம்பெதூசாவில் கரையிறங்கினர்.

2013, சூலை 8ஆம் நாள் திருத்தந்தை லாம்பெதூசா சென்ற தருணத்தில் கூட மாலி நாட்டு அகதிகள் 165 பேர் லாம்பெதூசாவில் இறங்கினர். அதற்கு முந்திய நாள் கடற்கரையிலிருந்து 7 மைல் தூரத்தில் விபத்துக்கு உள்ளான படகிலிருந்து 120 அகதிகள் காப்பாற்றப்பட்டனர். அவர்களுள் 4 பெண்கள் கர்ப்பிணிகள்.

ஐ.நா. புள்ளிவிவரப்படி, 2013ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் லாம்பெதூசா தீவிலும் இத்தாலியின் தென் கடலோரத்திலும் வந்திறங்கிய அகதிகள் சுமார் எண்ணாயிரம் பேர். இவர்கள் பெரும்பாலும் லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளை விட்டு வந்தவர்கள்.

2013இன் முதல் ஆறுமாதங்களில் கடலில் விபத்துக்கு உள்ளாகி இறந்த அகதிகள் 40 பேர் துனீசியாவை விட்டு வந்தவர்கள். 2012இல் கடலில் இறந்த அல்லது காணாமற்போன அகதிகள் 500 பேர்.

வட ஆப்பிரிக்க நாடுகளான லிபியா, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் அகதிகளாக வருவோர் இசுலாம் சமயத்தவர். அவர்களைச் சென்று சந்தித்து, அவர்களுடைய துன்பத்தில் பங்கேற்ற திருத்தந்தையின் செயலைப் பல இசுலாமிய நாடுகள் பாராட்டியுள்ளன.

திருத்தந்தை பிரான்சிசு உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றல்

திருத்தந்தை பிரான்சிசு கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பணியை ஏற்ற பிறகு முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ சென்றார். அங்கு அவர் உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் (சூலை 22-28, 2013) கலந்துகொண்டு பல்லாயிரக் கணக்கான இளையோர் மற்றும் பிறரோடு உரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நற்செய்தியின் மகிழ்ச்சி பற்றிய போதனை மடல்

திருத்தந்தை பிரான்சிசு கிறித்தவ நற்செய்தி மகிழ்ச்சி கொணர்கின்ற ஒரு செய்தி என்றும், அதை அறிவிப்போரும் அந்த அறிவிப்பைப் பெறுவோரும் இறைவனின் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்ற ஒரு போதனை மடலை 2013, நவம்பர் மாதம் வெளியிட்டார். அந்தத் திருத்தூது மடலின் தலைப்பு நற்செய்தியின் மகிழ்ச்சி என்பதாகும்.

"ஆண்டின் சிறந்த மனிதர்" விருது வழங்கப்படல்

2013, திசம்பர் 11ஆம் நாளில், உலகப் புகழ்பெற்ற "டைம் வார இதழ்" (Time Magazine) திருத்தந்தை பிரான்சிசை 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துக் கவுரவப்படுத்தியுள்ளது.[56]

திருத்தந்தை பிரான்சிசுக்கு இந்த விருது வழங்கியது எதற்காக என்று கேட்ட கேள்விக்கு "டைம்" இதழின் ஆசிரியர் நான்சி கிப்சு (Nancy Gibbs) என்பவர் பின்வருமாறு பதிலிறுத்தார்:

திருத்தந்தை பிரான்சிசு, வத்திக்கான் அரண்மனையின் சொகுசுச் சூழலில் வாழ்வதற்கு மாறாகச் சாதாரண விடுதியொன்றில் வாழ்வதற்கு முடிவுசெய்தார். உலகிலேயே மிகப்பெரிய கிறித்தவ திருச்சபையான கத்தோலிக்க திருச்சபை தன் நிர்வாகத்தில் காணும் குறைகளைக் களைய அவர் துணிச்சலுடன் செயல்படுகிறார். தவற்றினைச் சுட்டிக்காட்டும்போதும் ஆங்கே கனிவையும் இரக்கத்தையும் காட்ட வேண்டும் என நினைவூட்டுகின்றார். ஏழைகளையும் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோரையும் அரவணைக்க மனித குலம் முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றார். இப்பின்னணியில் அவருக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிசுக்கு முன் வாழ்ந்த வேறு இரு திருத்தந்தையர்களுக்கும் "சிறந்த மனிதர்" விருது வழங்கப்பட்டது கருததத் தக்கது. அவர்கள் முறையே திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் (1962ஆம் ஆண்டு விருது), திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (1994ஆம் ஆண்டு விருது) ஆவர்.

உலக அமைதி பற்றிய செய்தி வழங்கல்: 2014 உயிர்த்தெழுதல் பெருவிழா

வத்திக்கான் நகரின் புனித பேதுரு பெருங்கோவில் முன்னே அமைந்துள்ள புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 150 ஆயிரம் முன்னிலையில் இயேசுவின் உயிர்த்தெழுதல் பெருவிழாவான 2014, ஏப்பிரல் 20ஆம நாளன்று திருத்தந்தை பிரான்சிசு (உரோமை) நகருக்கும் உலகுக்கும் (Urbi et Orbi) என்று கூறப்படுகின்ற சிறப்பு ஆசியுரை வழங்கினார். வானொலி, தொலைபேசி, சமூக வலையங்கள் வழியாகக் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்த அந்த ஆசியுரையின்போது திருத்தந்தை பிரான்சிசு உலக மக்கள் அனைவருக்கும் அமைதிச் செய்தியை எடுத்துரைத்தார்.

உலகம் முழுவதும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை குறிப்பாக, சிரியா நாட்டில் அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறைச் செயல்கள் நடைபெறுபெவது நிற்க வேண்டும் என்றார். அதுபோலவே, உக்ரைன் நாட்டில் இழுபறிநிலை தளர்த்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் நைஜீரியா நாட்டில் நிகழும் கொடூரமான பயங்கரவாதம், ஈராக் நாட்டில் நிலவும் வன்முறை, தென் சூடான் மற்றும் உலகெங்கிலும் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

2014,மே 24-26 நாள்களில் இசுரயேலுக்கும் பாலத்தீனத்திற்கும் திருப்பயணமாகச் செல்லவிருக்கின்ற திருத்தந்தை பிரான்சிசு அந்த இரு நாடுகளுக்கிடையே அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டார்.

மேலும், உலகத்தில் பசி பட்டினியால் மக்கள் அவதியுறுகின்ற நிலையை மாற்றிட அனைவரும் உழைக்க வேண்டும்; பசி பட்டினியால் குறிப்பாகச் சிறுவர்களும் முதுவயது தாண்டியோரும் வாடுகின்றனர். உலகில் நிகழும் போர்கள், கட்டாய இடம்பெயர்த்தல், வளங்களை வீணடித்தல் போன்றவையும் பசி பட்டினியை அதிகரிக்கின்றன. இந்நிலை மாற வேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிசு.

குறிப்பாக, எபோலா தீநுண்ம நோய் காரணமாகக் கினியா, சியேரா லியோனே, லைபீரியா போன்ற நாடுகளில் துன்புறும் மக்களைத் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். மேலும், அக்கறையின்மையாலும் கொடிய வறுமையாலும் பரவுகின்ற நோய்கள் காரணமாக உலகில் எத்துணையோ மக்கள் இன்னல்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, அந்நிலையை மாற்றிட அனைவரும் உழைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழக்கம்போல, திருத்தந்தை தம் உரையின் முடிவில் நகைச்சுவையோடு கீழ்வருமாறு கூறினார்: "அவ்வளவு தான்! உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! எல்லாரும் போய் நன்றாக விருந்துண்ணுங்கள்!"[57]

திருத்தந்தையின் முதல் ஆசியப் பயணம் - கொரியா: ஆகத்து 13-18, 2014

சென்றமுறை ஒரு திருத்தந்தை ஆசியாவிற்குப் பயணமாகச் சென்றது 1999இல் ஆகும் (இந்தியா). அப்பயணத்தை மேற்கொண்டவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை). அதன்பிறகு நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணம் இதுவே. இப்பயணம் திருத்தந்தை பிரான்சிசின் முதல் ஆசியப் பயணம். ஆசிய பெருநிலப் பரப்பில் வாழ்கின்ற பல கோடி மக்களுள் 3% பேர் மட்டுமே கத்தோலிக்கர் ஆவர். கொரியாவில் 10.4% பேர் கத்தோலிக்கர்.

ஆகத்து 13ஆம் நாள் வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு, மறுநாள் கொரியாவின் சியோல் விண்படைத் தளத்தில் வந்திறங்கினார். அங்கு அவரைத் தென் கொரியா நாட்டு அதிபர் பார்க் கியோன்-கை வரவேற்றார். கொரியா தீபகற்பத்தில் (மூவலந்தீவு) அமைதியும் நல்லிணக்க உறவும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தாம் பயணம் மேற்கொண்டதாகத் திருத்தந்தை கூறினார். தென் கொரியா நாட்டு அதிபர், தம் உரையின்போது, “திருத்தந்தை பிரான்சிசு கொரியா நாட்டுக்கு வருகை தருவது அந்நாட்டு மக்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பைக் காட்டுகிறது” என்றார்.

1984, 1989 ஆகிய ஆண்டுகளில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கொரியா நாட்டுக்குப் பயணமாகச் சென்றிருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும் ஆசியாவுக்குப் பயணமாகச் சென்றதில்லை. இப்போது கொரியாவுக்கு வருகின்ற திருத்தந்தை பிரான்சிசு மேற்கொண்டுள்ள பயணம் கொரியாவில் நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணங்களுள் மூன்றாவதாக அமைகிறது.

தென் கொரிய நாட்டு மக்கள் இந்த வருகையைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். வீதிகள் தோறும் திருத்தந்தைக்கு வரவேற்பு அறிக்கைகளும் வளைவுகளும் எழுப்பப்பட்டுள்ளன.

ஆசிய நாட்டு மக்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் ஆங்கில மொழியில் உரையாற்றுவதற்காகத் திருத்தந்தை பிரான்சிசு தயாரிப்போடு வருகிறார். வழக்கமாக அவர் இத்தாலிய மொழியில் உரையாற்றுவார். சிலவேளைகளில் தமது தாய்மொழியான எசுப்பானியத்தில் உரை நிகழ்த்துவார்.

ஆகத்து 14, வியாழன்: இன்று காலை கொரியா வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிசு, கொரியா நாட்டு ஆட்சித் தலைவர்களைச் சந்தித்த பிறகு, மாலையில் கொரியா கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

குண்டு துளைக்காத பாதுகாப்பு அரண்கொண்ட சிறப்பு ஊர்தியில் பயணம் செல்வதைத் தவிர்த்து, கொரியா நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்களுள் மிகச் சிறிய வகை சேர்ந்த “கியா சோல்” (Kia Soul) சிற்றுந்தைத் திருத்தந்தை தேர்ந்துகொண்டார். உலகப் பெரும் தலைவர்களுள் ஒருவரான திருத்தந்தை இவ்வாறு எளிய முறையில் பயணம் செய்வது குறித்து கொரியா மக்களும் பிறரும் வியக்கின்றனர்.

ஆகத்து 15, வெள்ளி: ஆகத்து 15ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டுத் திருத்தந்தை பொது அரங்கில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அவர் கூறியது: “கொரியா நாட்டு மக்கள் கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்கின்றனர். எத்தனையோ துன்பங்களுக்கு நடுவிலும், துன்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்துள்ளனர்...இவ்வுலகச் செல்வங்கள் மனிதரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற ஆன்ம வேட்கையை நிறைவு செய்ய முடியாது...கட்டற்ற போட்டியின் அடிப்படையில் எழுகின்ற பொருளாதார அமைப்புகளும், தொழிலாளரின் உரிமைகளை மறுக்கின்ற பொருளாதார அமைப்புகளும் மனித மாண்பை ஏற்க மறுக்கின்றன. கிறித்தவர்கள் ஏழை மக்கள்மீது சிறப்பான கரிசனை காட்ட வேண்டும்.”

ஆசியாவின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோருக்கு செய்தி வழங்கிய திருத்தந்தை, கொரியா நாட்டுக் குடும்பத்திற்காக இறைவனை வேண்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கொரியா நாட்டுப் பெண் ஒருவர் திருத்தந்தை பிரான்சிசிடம், “எங்கள் கொரியா நாடு இன்று வடக்கு ஒன்று, தெற்கு ஒன்று எனப் பிரிந்துகிடக்கின்றது. இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் என்றுதான் மறையுமோ” என்று கூறியதை அவர் கூர்ந்து கேட்டார்.

இளைஞர்களைச் சந்திக்கையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உரையை வாசித்து அளிப்பதில் திருத்தந்தை சிரமப்பட்டது தெரிந்தது. அப்போது திருத்தந்தை “ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பது இளையோரைக் கவராது. அவர்களோடு உறவாட வேண்டுமென்றால், இதயத்தின் ஆழத்திலிருந்து நேராகப் பேச வேண்டும் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார்” என்று கூறியதுமே, கூட்டத்திலிருந்து பலத்த கைத்தட்டு எழுந்தது. உடனேயே, திருத்தந்தை, ஆங்கில மொழியில் பேசுவதை விட்டுவிட்டு, இத்தாலிய மொழியில் உரையாடல் பாணியில் பேசத் தொடங்கினார். அப்போது, “கொரியா நாட்டு மக்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனர். நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு கொரியா என்று நாடு பிளவுபட்டுக் கிடப்பது மறைந்தது ஒரே குடும்பமாக நீங்கள் மாறிட அமைதியாக இறைவனை வேண்டுவோம்” என்று கூறியதும் கூட்டத்தில் பேரமைதி நிலவியது.

கம்போடியா நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண், திருத்தந்தையிடம், கம்போடியாவிலும் பல கிறித்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களையும் புனிதர் என்று அறிக்கையிடுவது நல்லது என்று கூறியதும், திருத்தந்தை அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார்.

“தாமி” (selfie) வகை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு இளையோரோடு கூடவே பிரான்சிசு நின்றார்.

ஆகத்து 16, சனி: சியோல் நகரில் கொரியா மறைசாட்சிகள் திருத்தலத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்தித்தார். 10 மணிக்குப் பவுல் சி-சுங் என்பவருக்கும் அவரோடு வேறு 123 பேருக்கும் “அருளாளர்” பட்டம் வழங்கினார். இவர்கள் 18-19 நூற்றாண்டுகளில் கொரியாவில் கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு கொல்லப்பட்டவர்கள். வெளிநாட்டு மறைபரப்பாளர்கள் கொரியாவில் கிறித்தவத்தைக் கொணரவில்லை, மாறாக, கொரியா நாட்டு பொதுமக்களில் சிலர் சீன நாடு சென்று, அங்கு வாழ்ந்த கிறித்தவர்களிடமிருந்து கிறித்தவப் போதனைகளைக் கற்று, அவற்றைத் தம் சொந்த நாட்டிலும் பரப்பினார்கள். தமது சமய நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்று, கொரியா மக்களுக்கும் ஆசிய மக்களுக்கும் ஏன் உலக மக்கள் அனைவருக்குமே அவர்கள் தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.

பின்னர், கோட்டோங்னே (Kkottongnae) என்ற ஊனமுற்றோர் இல்லம் சென்று அங்கு பலவித ஊனங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களாக 70 பேரைச் சந்தித்து ஒரு மணி அளவு நேரம் செலவிட்டார். அவர்களுள் சிலர் தங்கள் ஊனங்கள் காரணமாக மருத்துவப் படுக்கைகளிலும் சக்கர வண்டிகளிலும் இருந்தனர். அவர்களை ஒருவர் ஒருவராகச் சந்தித்து, வாழ்த்துக் கூறி அவர்களுக்காகச் செபம் ஒப்புக்கொடுத்தார்.

மாலையில் கொரியாவின் கத்தோலிக்க துறவியர் சுமார் 5000 பேரைச் சந்தித்து உரையாற்றினார். துறவியர், கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதிகள் அளிப்பதன் வழியாக, தங்கள் கிறித்தவ அழைத்தலை அதிக ஆர்வத்தோடு ஏற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, ஏழைகளோடு தங்களை ஒன்றுபடுத்திக் கொண்டு, செல்வத்தை நம்பியிராமல் எளியவர்களாக வாழ வேண்டும் என்றும் கூறினார்.

ஆகத்து 17, ஞாயிறு: திருத்தந்தை ஆசிய பெருநிலத்தின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளான 70 ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: கத்தோலிக்க திருச்சபை வெற்றி மமதை கொண்ட மனப்பான்மையோடு இங்கு வரவில்லை. ஆயர்கள் ஆசிய நாடுகளின் பண்பாடுகளை மதித்து, கத்தோலிக்க நம்பிக்கையைக் கடைப்பிடித்து, பிறரோடு பகிர வேண்டும். உரையாடல் மிக முக்கியம். ஆசியா பெருநிலத்தில், திருப்பீடத்தோடு முழு உறவு இன்னும் ஏற்படுத்தாத நாடுகள் இந்த உரையாடல் மனப்பான்மையோடு உறவுகள் ஏற்படுத்த முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். உரையாடல் என்பது அரசியம் துறையில் மட்டுமல்ல, சகோதர மனப்பான்மையோடு நிகழ்வதாகவும் இருக்க வேண்டும்.

ஆசியாவில், சீன நாடு 1951இல் திருப்பீடத்தோடு ஆட்சி உறவுகளை முறித்துக்கொண்டது. வட கொரியா நாட்டில் சமய சுதந்திரம் இல்லை. அங்கு கிறித்தவர்களும் மிகச் சிலரே என்று தெரிகிறது. அவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வட கொரியாவோடும் திருப்பீடத்திற்கு அரசியல் உறவுகள் இல்லை.

கொரியாவுக்கு வான்வழியாகப் பயணம் சென்ற திருத்தந்தை பிரான்சிசின் விமானம் சீன நாட்டு வான் எல்லையில் பறந்த போது, வழக்கம்போல, திருத்தந்தை பிரான்சிசு சீன அரசுத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

ஆகத்து 18, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, பல மதங்களைச் சார்ந்த தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார். பின்னர், சியோல் உயர் மறைமாவட்டத்தின் பெருங்கோவிலில் திருப்பலி நிகழ்த்தினார். அமைதியையும், கொரியா நாடுகளுக்கிடையே நல்லுறவு இணக்கத்தையும் வலியுறுத்தி அத்திருப்பலி அமைந்தது.

நண்பகலில் பிரியா விடை நிகழ்ந்தது. பின்னர் திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான் நோக்கிப் பயணமானார்.[58]

நற்செய்தி அறிவிப்புப் பின்னணியில் குடும்பங்கள் என்பது பற்றிய ஆயர் மன்றம்

2014, அக்டோபர் 5-19 நாள்களில் வத்திக்கானில் சிறப்பு ஆயர் மன்றம் நிகழ்ந்தது. இன்றைய உலகில் குடும்பங்கள் சந்திக்கின்ற பல சிக்கல்கள் பற்றி அந்த மன்றம் விவாதித்தது. திருத்தந்தை பிரான்சிசு ஒன்றுகூட்டிய அம்மன்றத்தில் ஆயர்கள் தவிர குடும்பங்கள் சிலவும் கலந்துகொண்டன. குடும்பங்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுள் கீழ்வருவன அடையாளம் காணப்பட்டன:
- திருமணம் ஆகாமலே கூடிவாழ்கின்ற தம்பதியர்
- திருமணத்திற்குப் பின் விவாகரத்து பெற்று, மறுமணம் செய்துகொள்வோர் நிலை
- ஓரினப் பால் தம்பதியர் நிலை

கத்தோலிக்க திருச்சபை மேற்கூறிய பொருள்கள் பற்றி இறுக்கமான கொள்கை கொண்டுள்ளது. திருச்சபை முறைப்படி மட்டுமே கத்தோலிக்கர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் கொள்கை இருந்தாலும் பல கத்தோலிக்கர் திருமணம் ஆகாமலே கூடிவாழ்வதால், அவர்களைத் திருச்சபை எந்த மனநிலையோடு நடத்த வேண்டும் என்னும் பொருள் ஆயர் மன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதுபோலவே, ஓரினப் பால் தம்பதியரின் வாழ்க்கைமுறை குறையுள்ளது என்றாலும், அவர்கள் மட்டில் பரிவுகாட்டி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலை வழங்கவேண்டியது திருச்சபையின் பணி என்று வலியுறுத்தப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபை கத்தோலிக்கருக்கு விவாகரத்தை அனுமதிப்பதில்லை. முறையான விதத்தில் திருமணம் செய்த பிறகு விவாகரத்து செய்துகொண்டோர் திருச்சபைக்கு வெளியே மறுமணம் செய்துகொண்டு வாழ்வதாக இருந்தால் அவர்களுக்கு நற்கருணை விருந்தில் இடம் அளிக்கப்படுவதில்லை. இது பற்றியும் ஆயர் மன்றம் விவாதித்தது. ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தகைய தம்பதியரை நற்கருணை விருந்திற்கு அனுமதிப்பது நல்லது என்னும் கருத்து ஆயர் மன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேற்கூறிய பொருள்கள் பற்றிய ஆய்வு தொடர்ந்து நிகழும் என்றும், 2015ஆம் ஆண்டு நிகழவிருக்கின்ற ஆயர் மன்றக் கூட்டத்தில் அந்த விவாதம் தொடரும் என்றும் அப்போது முடிவுகள் தெரியவரும் என்றும் திருத்தந்தை பிரான்சிசு கூறியுள்ளார்.[59]

திருத்தந்தை ஆறாம் பவுலுக்கு அருளாளர் பட்டம் வழங்குதல்

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1963-1978 ஆண்டுக்காலத்தில் திருத்தந்தையாகப் பணியாற்றி உயிர்நீத்த திருத்தந்தை ஆறாம் பவுல் என்பவருக்கு “அருளாளர் பட்டம்” வழங்கினார்.[60]

இரு இந்தியர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல்

திருத்தந்தை பிரான்சிசு 2014, நவம்பர் 23ஆம் நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாக் கொண்டாட்டத்தின்போது இந்தியாவின் கேரளத்தைச் சார்ந்தவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் சீரோ மலபார் வழிபாட்டு முறையினருமான இரு துறவிகளுக்குப் புனிதர் பட்டம் அளித்தார். உரோமையில் வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த சிறப்புச் சடங்கின்போது வேறு நான்கு இத்தாலியர்களுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

புதிதாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்தியர்கள் குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, எவுப்ராசியா எலுவத்திங்கல் ஆகியோர். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து, குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உரோமை சென்றிருந்தனர். கேரள அரசும் இந்திய நடுவண் அரசும் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன.[61]

துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம்

2014, நவம்பர் 28-30 நாட்களில் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டுக்குச் சென்று எல்லா சமயங்களையும் சார்ந்த மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து, மக்கள் பணியிலும், சமாதானத்தை வளர்ப்பதிலும் ஈடுபட வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.[62]

உலகில் அடிமை முறை ஒழிப்பதற்கான அறிக்கை வெளியிடல்

2014, திசம்பர் 2ஆம் நாள் அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் கடைப்பிடித்தலை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான் நகரில் உலக சமயத்தலைவர்கள் பலரோடு சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார். உலக சமயத்தலைவர்கள் கத்தோலிக்கம், கீழை மரபுவழி சபை, ஆங்கிலிக்க சபை ஆகிய கிறித்தவ சபைகளையும், யூதம், இசுலாம், இந்து சமயம், பவுத்தம் போன்ற பிற உலக சமயங்களையும் சார்ந்தவர்கள். இந்து சமய சார்பில் “அம்மா” என்று அழைக்கப்படுகின்ற அம்ருதானந்தமயி கையெழுத்திட்டார்.

அந்த அறிக்கையில் பிற சமயத் தலைவர்களோடு சேர்ந்து திருத்தந்தை பிரான்சிசு இவ்வாறு கூறுகிறார்:

"...நமது சமயநம்பிக்கையால் தூண்டப்படு, இன்று இங்கே நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சியை மேற்கொள்ளவும் நடைமுறைச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் இங்கே கூடியிருக்கின்றோம். அதாவது நவீன காலத்தில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்ற அடிமைமுறை என்னும் கொடுமையை வேரறுக்க நாம் வந்துள்ளோம். இன்று எத்தனையோ மில்லியன் ஆண்கள், பெண்கள், சிறார்கள் அடிமைமுறை காரணமாக உடலளவிலும், பொருளாதார அளவிலும், பால்வினை அளவிலும், உளவியல் அளவிலும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு செய்வது அவர்களுடைய மனிதத்தன்மையை மறுக்கும் செயலாகும். மேலும் மக்களை இழிவுபடுத்துவதும் ஆகும்.

”எல்லா மனிதர்களும், அவர்கள் ஆணாலும் சரி பெண்ணானாலும் சரி, ஆண்குழந்தையானாலும் சரி பெண்குழந்தையானாலும் சரி, கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளனர். மனிதர்கள் தமக்குள்ளே அன்புடன் உறவாடுகின்ற வேளையில் கடவுள் அங்கே துலங்குகின்ற அன்பும் சுதந்திரச் செயல்பாடும் கடவுளின் உடனிருப்பைக் குறிக்கின்றன. பிறருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சமத்துவ உணர்வோடும் சகோதரத்துவ மனநிலையோடும் வாழ்ந்து, சுதந்திரமாகத் தன் இறுதிக்கதியை அடையவேண்டும். எல்லா மனிதர்களுக்கும் அடிப்படையான மாண்பு உண்டு என்பதால் இதை அறிகிறோம். எல்லா மனிதரும் சமமான மனித மாண்பு கொண்டவர்கள் என்னும் உண்மையை மதிக்காமல் அவர்களை வேறுபடுத்தி ஒதுக்கிக் கொச்சைப்படுத்துகின்ற போக்கு பெரிய குற்றம் ஆகும், ஏன், ஒரு மாபெரும் பாதகம் ஆகும். எனவே, நாங்கள் எங்கள் ஒவ்வொருவரின் சமய நம்பிக்கையின் அடிப்படையில், மனிதர்களை வணிகப்பொருள்களாக நடத்தல், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தல், விபச்சாரத்திற்கு உட்படுத்தல், மனித உடலுறுப்புகளை வணிகப்பொருளாக்குதல் போன்ற நவீன அடிமை முறைகள் எல்லாம் மனித குலத்திற்கே எதிரான குற்றங்கள் என்று அறிக்கையிடுகின்றோம்..."[63]

அகதிகளுக்கு உதவி

உலகம் முழுவதும் பல நாடுகளில் போரினால் மனித இனங்கள் அகதிகளாக வேறு நாட்டுக்கு ஓடும் கொடுமை நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உலக கத்தோலிக்க நாடுகளில் அகதிகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.[64]இதில் முதல் கட்டமாக பிரான்ஸ்,[65] மற்றும் ஆஸ்திரேலியாவும்,[66]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வெளி ஊடகங்கள்
படிமங்கள்
Fumata Blanca
ஒளிதம்
யூடியூபில் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்!
யூடியூபில் திருத்தந்தை பிரான்சிசின் முதல் உரை
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Franciscus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
அந்தோனியோ குவாராசினோ
புவெனஸ் ஐரிஸ் உயர் உயர்மறைமாவட்ட பேராயர்
28 பெப்ரவரி 1998 – 13 மார்ச் 2013
பின்னர்
மரியோ போலி
முன்னர்திருத்தந்தை
13 மார்ச் 2013 முதல்
பதவியில் உள்ளார்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்