பனிச்சிறுத்தை

பனிச்சிறுத்தை
CITES Appendix I (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பேந்திரா
இனம்:
பே. அன்சியா
இருசொற் பெயரீடு
பேந்திரா அன்சியா
(சிரெபர், 1775)
பனிச்சிறுத்தை பரம்பல், 2017-ல்[1]
வேறு பெயர்கள்
  • பெலிசு அன்சியா சிரெபர், 1777
  • பெலிசு இர்பிசு எக்ரென்பெர்க், 1830
  • பெலிசு அன்சியோடிசு கோர்சூபீல்டு, 1855
  • அன்சியா அன்சியா போக்காக், 1930
  • பேந்திரா பைகாலென்சிசு-ரோமானி மெட்வெடேவ், 2000

பனிச்சிறுத்தை (Snow leopard) என்பது ஒரளவிற்கு பெரிய பூனை வகையைச் சேர்ந்ததாகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் உலகளாவிய இதன் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கையானது 2040ஆம் ஆண்டில் சுமார் 10% மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வாழ்விட ஆழிப்பு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் அச்சுறுத்தப்படுகிறது. இது கிழக்கு ஆப்கானித்தான், இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியிலிருந்து தெற்கு சைபீரியா, மங்கோலியா மற்றும் மேற்கு சீனா வரை 3,000–4,500 மீ (9,800–14,800 அடி) உயரத்தில் அல்பைன் மற்றும் சபால்பைன் மண்டலங்களில் வாழ்கிறது. இதன் வரம்பின் வடக்குப் பகுதியில், இது குறைந்த உயரத்திலும் வாழ்கிறது.

வகைபாட்டியல் அடிப்படையில், பனிச்சிறுத்தை நீண்ட காலமாக அன்சியா என்ற பேரினத்தில் ஒற்றை சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டது. தொகுதி இன வரலாறு ஆய்வுகள் பேந்திரா பேரினத்திற்கிடையேயான உறவுகளை வெளிப்படுத்தியதால், இது பேந்திரா பேரினத்தின் சிற்றினமாகக் கருதப்படுகிறது. உருவ வேறுபாடுகளின் அடிப்படையில் இரண்டு துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டிற்கும் இடையே உள்ள மரபணு வேறுபாடுகள் இதனை உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே இது ஒரு ஒற்றை சிற்றின பேரினமாகக் கருதப்படுகிறது.

பெயரிடுதல் மற்றும் சொற்பிறப்பியல்

இலத்தீன் பெயர் அன்சியா (uncia) மற்றும் ஆங்கில வார்த்தை அவுன்சு (ounce) இரண்டும் பழைய பிரெஞ்சு சொல்லான ஒன்சிலிருந்து பெறப்பட்டது. இது முன்னர் யூரேசிய லின்க்சுக்கு (லின்க்சு லின்க்சு) பயன்படுத்தப்பட்டது. தவறான பிளவு மூலம் லின்க்சின் முந்தைய மாறுபாட்டிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது. லோன்சு (lonce) என்பது எல் ஒன்சு (l once) என விளக்கப்பட்டது. இதில் எல் என்பது நீக்கப்பட்டு பிரஞ்சு லா ('தி') வடிவமாக்கப்பட்டு, இந்த விலங்கின் பெயராக உணரப்படுகிறது.[2] பாந்தர் என்ற சொல் பண்டைய இலத்தீன் பாந்தேராவிலிருந்து வந்தது, இது பண்டைய கிரேக்க πάνθηρ pánthēr-லிருந்து வந்தது. இது புள்ளிகளுடைய பூனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.[3]

உயிரின வகைப்பாடும் பரிணாமமும்

வகைப்பாடு

பெலிசு அன்சியா என்பது 1777ஆம் ஆண்டில் ஜோஹன் கிறிஸ்டியன் டேனியல் வான் ஸ்க்ரெபர் என்பவரால் பயன்படுத்தப்பட்ட பனிச்சிறுத்தையின் விலங்கியல் பெயர் ஆகும். கிழக்கு இந்தியா மற்றும் சீனாவில் பார்பரி கடற்கரையில் காணப்பட்ட பூனையினை ஜார்ஜஸ்-லூயிஸ் லெக்லெர்க், காம்டே டி பஃபன் குறித்து கூறிய கூற்றின் அடிப்படையிலாகும்.[4] நீண்ட மற்றும் தடித்த வால் கொண்ட ஆசிய பூனைகளுக்கு 1854ஆம் ஆண்டில் ஜான் எட்வர்டு கிரே அன்சியா என்ற பேரினப் பெயரினை முன்மொழிந்தார்.[5] 1830ஆம் ஆண்டில் கிறிஸ்டியன் காட்ஃபிரைட் எஹ்ரென்பெர்க்கால் முன்மொழியப்பட்ட பெலிசு இர்பிசு என்பது அல்தாய் மலைகளில் சேகரிக்கப்பட்ட ஒரு பெண் பனிச்சிறுத்தையின் தோலின் அடிப்படையிலானதாகும். பல சிறுத்தையின் (பா. பர்டசு) தோல்கள் முன்பு பனிச்சிறுத்தையின் தோல்கள் என தவறாக அடையாளம் காணப்பட்டதையும் இவர் தெளிவுபடுத்தினார்.[6] 1855ஆம் ஆண்டில் தாமஸ் ஹார்ஸ்ஃபீல்டால் முன்மொழியப்பட்ட பெலிசு அன்சியோயிட்சு என்பது நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பனிச்சிறுத்தையின் தோலாக கிழக்கிந்திய கம்பெனியின் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்தது.[7]

"அன்சியா அன்சியா" என்பது 1930-ல் ரெஜினால்ட் இன்னஸ் போகாக் ஆசியாவிலிருந்து "பாந்தெரா" இனங்கள் தோல்கள் மற்றும் மண்டை ஓடுகளை மதிப்பாய்வு செய்தபோது பயன்படுத்தப்பட்டது. பனிச்சிறுத்தை மற்றும் சிறுத்தை தோல்களுக்கு இடையே உள்ள உருவ வேறுபாடுகளையும் இவர் விவரித்தார்.[8]2000ஆம் ஆண்டில் உருசிய விஞ்ஞானி ஒருவரால் முன்மொழியப்பட்ட பாந்திரா பைகலென்சிசு ரோமானி தெற்கு திரான்சுபைக்கலில் உள்ள பெட்ரோவ்சுக்-ஜபாய்கால்ஸ்கி மாவட்டத்தில் இருந்து அடர் பழுப்பு நிற பனிச்சிறுத்தை தோலின் அடிப்படையில் ஆகும்.[9]பனிச்சிறுத்தை நீண்ட காலமாக அன்சியா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது.[10] இனவரலாற்று ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இது பாந்தெரா பேரினத்தின் கீழ்ப்படுத்தப்பட்டது.[11][12][13][14]2017 வசந்த காலம் வரை, இந்தச் சிற்றினத்தின் கீழ் துணையினங்களை அங்கீகரிப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஒரு இனபுவியியல் பகுப்பாய்வின் முடிவின் அடிப்படையில் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டது.[15]

  • பா. அ. அன்சியா, பாமிர் மலைகளின் எல்லை நாடுகள்
  • பா. அ. இர்பிசு, மங்கோலியா
  • பா. அ. அன்சியோடெசு, இமயமலை மற்றும் கிங்கா.

இந்தக் கருத்திற்கு பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் எதிர்க்கப்பும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.[16][17][18][19]கூடுதலாக, அழிந்துபோன ஒரு துணையினமான பாந்திரா அன்சியா பைரெனாயிகா, 2022-ல் பிரான்சில் காணப்படும் பொருட்களின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது.[20]

பரிணாமம்

பாந்தெராவின் இரண்டு தொகுதிபிறப்பு வரைபடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலே உள்ள படம் 2006 மற்றும் 2009-ல் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது.[11][21] கீழே உள்ள படம் 2010 மற்றும் 2011-ல் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.[12][22]

இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பெலிடே குடும்ப உறுப்பினர்களின் டி. என். ஏ. வரிசை முறை இனவரலாற்று மூலக்கூறு பகுப்பாய்வின் அடிப்படையில், பனிச்சிறுத்தை புலிகளுடன் (பா. டைகிரிசு) ஒரு சகோதர குழுவை உருவாக்குகிறது. இந்த குழுவின் மரபணு வேறுபாடு 4.62 முதல் 1.82 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கவேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[11][21] பனிச்சிறுத்தையும் புலியும் 3.7 முதல் 2.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்திருக்கலாம்.[12] பாந்தெரா பெரும்பாலும் வடக்கு மத்திய ஆசியாவில் உருவாகியுள்ளது. மேற்கு திபெத்தின் நாகரி மாகாணத்தில் அக்ழ்வாய்வில் அறியப்பட்ட பாந்தெரா பிளைதியே, அறியப்பட்ட பழமையான பாந்தெரா சிற்றினமாகும். இதன் மண்டை ஓடு பண்புகள் பனிச்சிறுத்தை பண்பினை வெளிப்படுத்துகிறது.[23]பனிச்சிறுத்தை, சிறுத்தை மற்றும் சிங்கம் (பா. லியோ) ஆகியவற்றின் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி மரபணுக்கள் இவற்றின் உட்கரு மரபணுக்களைக் காட்டிலும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்திருக்கிறது. இது இவற்றின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் இவைகளின் முன்னோர்கள் கலப்பினமாக்கப்பட்டன என்பதைக் குறிக்கிறது.[24]

விளக்கம்

ஏனைய பெரிய பூனைகளை விட பனிச்சிறுத்தைகள் சிறியவையாகவே இருக்கின்றன. ஆனால் இவை அந்த பெரிய பூனைகளைப் போலவே இருக்கின்றன. பல அளவுகளில் காணப்படும் இவை பொதுவாக 27 மற்றும் 54 கிலோகிராம்கள் (60 மற்றும் 120 lb)க்கு இடையிலான எடையில் இருக்கும். உடல் நீளம் 75 முதல் 130 சென்டிமீட்டர்கள் (30 முதல் 50 அங்)இல் இருந்து வேறுவேறு அளவுகளில் இருக்கும். சுமார் அதே அளவு நீளத்திற்கு இவற்றின் வால்களும் நீண்டிருக்கும்.[25]

பனிச்சிறுத்தைகள் நீண்ட தடித்த ரோமங்களைக் கொண்டிருக்கும். இவற்றின் அடிப்படை நிறம், சில இடங்களில் வெள்ளையுடன் கூடிய, புகைபோன்ற சாம்பல் நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் போன்று மாறுபட்டு காணப்படும். இவற்றின் தலையில் கரும்பழுப்பு நிறத்திலான சிறிய புள்ளிகளும், அவற்றின் கால்கள் மற்றும் வாலில் அதே நிறத்தில் பெரிய புள்ளிகளும், உடலில் கரும்பழுப்பு, கருப்புநிற ரோசாப்பூ இதழ் அளவிற்கு புள்ளிகளும் காணப்படுகின்றன.[25]

பனிமலைச்சூழலில் வாழ்வதற்கேற்ப பனிச்சிறுத்தைகள் பல்வேறு மாற்றங்களை ஏற்றுகொண்டிருக்கின்றன. பருத்த உடலைக் கொண்டிருக்கும் இவற்றின் ரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். அவற்றின் காதுகள் சிறியதாகவும், சுருண்டும் இருக்கும். இவை வெப்ப இழப்பைக் குறைக்க உதவுகின்றன.பரந்திருக்கும் அவற்றின் பாதங்கள், பனியில் நடப்பதற்கு வசதியாக அவற்றின் எடையை உடல் முழுக்க பகிர்ந்து அளிக்கின்றன. மேலும் அவற்றின் அடிப்பரப்பிலும் பனிச்சிறுத்தைகளுக்கு ரோமங்கள் இருக்கின்றன. இது சரிவுகளிலும், ஸ்திரமற்ற தளங்களிலும் அவற்றின் உராய்வை அதிகரிக்கின்றன. அத்துடன் வெப்ப இழப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பனிச்சிறுத்தைகளின் வால்கள் நீளமாகவும், இலகுதன்மையுடனும் இருக்கும். இவை அவற்றின் சமநிலையைப் பராமரிக்க அவற்றிற்கு உதவுகின்றன. வாலும் கூட மிக அடர்த்தியான ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இவை வெப்ப இழப்பைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், அவை தூங்கும் போது அவற்றின் முகத்தை மறைக்க ஒரு போர்வை போலவும் பயன்படுகின்றன.[25][26]

பனிச்சிறுத்தைகள் அவற்றின் தாய்நாடுகளில், ஷான் (லடாக்கி), இர்வெஸ் (மொங்கோலியம்: ирвэс), பார்ஸ் அல்லது பேரிஸ் (காசாக்கு மொழி: барыс /ˈbɑrəs/) மற்றும் பர்ஃபானியா சீத்தா - "ஸ்னோ சீத்தா" (உருது) என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அதிகளவில் பதுங்கி இருக்கும் குணத்தைக் கொண்டிருப்பதால், இவை மிகவும் ஏமாற்றும் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதுடன், பெரும்பாலும் தனிமையிலேயே இருக்கின்றன. பனிச்சிறுத்தைகள் இரவு நேரங்களிலும், அத்துடன் அந்திப்பொழுதின் மங்கலான வெளிச்சத்திலும், அதிகாலை நேரத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இமாலயம் மற்றும் கரகோரம், திபெத் பீடபூமி மற்றும் குன்லுன் பகுதிகளிலும்; இந்து குஷ், பமீர்கள் மற்றும் டியன் ஷா; சீனா, கஜகிஸ்தான் மற்றும் ரஷ்ய எல்லையருகில் இருக்கும் மங்கோலிய எல்லையை வரையறுக்கும் அல்டே சிகரங்கள்; பைக்கால் ஏரியின் மேற்கில் இருக்கும் சயான் தொடர்கள் உள்பட 12 நாடுகளின் சுமார் ஒரு மில்லியன் சதுர மைல்களில் இவை வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.[25][26]

பனிச்சிறுத்தைகள் உவையுரு நாவடி எலும்பின் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் கூட, இவை உறுமுவதில்லை. பெரிய பூனைகள் உறும வேண்டுமானால் இந்த எலும்புவளர்ச்சி இருக்க வேண்டும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் உறுமுவதென்பது பிற விலங்கு-தவார வடிவயியல் பண்பல்லாமல் பிற காரணங்கள், குறிப்பாக குரல்வளை சம்பந்தப்பட்டதாகும் என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது பனிச்சிறுத்தைகளில் காணப்படவில்லை.[27][28] சீறொலி செய்வது, வேடிக்கையான ஒலி, மியாவ் ஒலிசெய்தல், முறுமுறுப்பு மற்றும் புலம்பல் போன்ற ஒலிகளை பனிச்சிறுத்தை எழுப்புகிறது.

பரவல் மற்றும் வாழிடம்

பனிச்சிறுத்தை பைக்கால் ஏரியின் மேற்கிலிருந்து தெற்கு சைபீரியா, குன்லூன் மலைகள், அல்தாய் மலைகள், சயான் மற்றும் தன்னு-ஓலா மலைகள், தியான் ஷான், தஜிகிசுதான், கிர்கிசுதான், உசுபெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் வழியாக கிழக்கு ஆப்கானித்தானின் இந்து குஷ் வரை காணப்படுகிறது. வட பாக்கித்தானில் உள்ள காரகோரம், பாமிர் மலைகள், திபெத்திய பீடபூமி மற்றும் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானில் இமயமலையின் உயரமான பகுதிகளிலும் வாழ்கின்றன. மங்கோலியாவில், இது மங்கோலியன் மற்றும் கோபி அல்தாய் மலைகள் மற்றும் காங்காய் மலைகளில் வாழ்கிறது. திபெத்தில், இது வடக்கில் அல்டின்-டாக் வரை காணப்படுகிறது.[29][30] இது அல்பைன் மற்றும் சபால்பைன் மண்டலங்களில் 3,000 முதல் 4,500 மீ (9,800 முதல் 14,800 அடி வரை) உயரத்தில் வாழ்கிறது. ஆனால் இதன் வடக்குப் பகுதியில் குறைந்த உயரத்திலும் வாழ்கிறது.[31] இந்தியவில் இமயமலையில் சாத்தியமான பனிச்சிறுத்தை வாழ்விடமாக சம்மு மற்றும் காசுமீர், லடாக், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் 90,000 கிமீ2 (35,000 சதுர மைல்) க்கும் குறைவாக நிலப்பரப்பில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 34,000 சதுர கி.மீ. (13,000 மைல்) உகந்த வாழிடமாகக் கருதப்படுகிறது. வாழ்விடப் பகுதியின் 14.4% பரப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1990களின் தொடக்கத்தில், இந்தியப் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை 200 முதல் 600 வரை இருக்கலாம் என்றும், இவை 25 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டது.[30]

கோடையில், பனிச்சிறுத்தை பொதுவாக அல்பைன் புல்வெளிகளிலும், பாறைப் பகுதிகளிலும் 2,700 முதல் 6,000 மீ (8,900 முதல் 19,700 அடி) உயரத்தில் வாழும். குளிர்காலத்தில், சுமார் 1,200 முதல் 2,000 மீ (3,900 முதல் 6,600 அடி) உயரப் பகுதிகளுச் செல்கின்றன. பனிச்சிறுத்தை பாறை, துண்டான நிலப்பரப்பை விரும்புகிறது. மேலும் 85 செ.மீ. (33 அங்குலம்) ஆழமான பனியில் நகரக்கூடியது. ஆனால் மற்ற விலங்குகளால் உருவாக்கப்பட்ட பாதைகளைப் பயன்படுத்த விரும்புகிறது.[32]

வடகிழக்கு ஆப்கானித்தானின் தனிமைப்படுத்தப்பட்ட வாகான் புலி நடமாட்டப் பகுதிகளில் 16 இடங்களில் புகைப்படக் கருவியின் மூலம் பனிச்சிறுத்தைகள் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டன.[33]

சுற்றுச்சூழலும், நடத்தையும்

கோடைகாலத்தில், பனிச்சிறுத்தைப் பொதுவாக மலைப்புற்களின் மரவரிசைகளுக்கு மேலேயும், 2700 மீ முதல் 6000 மீ உயர மலைப்பிரதேசங்களிலும் வாழ்கின்றன. குளிர்காலத்தில், 1200 மீ முதல் 2000 மீ உயரத்திலிருக்கும் காடுகளுக்கு இறங்கி வருகின்றன. மலைக்குகைகளில் குட்டிகளைத் தாய் பனிச்சிறுத்தைகள் தாங்கி பிடித்து கொண்டிருந்தாலும் கூட, இவை பெரும்பாலும் தனிமையான வாழ்க்கையே வாழ்கின்றன.

ஒரு தனிப்பட்ட பனிச்சிறுத்தை ஒரு நல்ல வசதியான வாழிடத்தில் வாழ்வது போல வாழ்கிறது. ஆனால் பிற பனிச்சிறுத்தைகள் இவற்றின் பிராந்தியங்களுக்குள் அத்துமீறி நுழைந்தாலும், இவை இவற்றின் பிராந்தியங்களை ஆக்ரோஷமாக பாதுகாக்க முயற்சிப்பதில்லை. இதன் வாழிடம் பெரும்பாலும் அளவுகளில் வேறுபடுகின்றன. வேட்டையாடுதல் மறுக்கப்பட்டிருக்கும் நேபாளத்தில், வாழிட அளவு 12 km2 (5 sq mi) இல் 40 km2 (15 sq mi) இருந்து வரைக்கும் இருக்கக் கூடும். ஒவ்வொரு 100 km2 (39 sq mi)-க்கும் ஐந்திலிருந்து பத்து விலங்குகள் வரை காணப்படுகின்றன; நெருக்கமற்ற இரைகளுடன் வாழ்விடங்களில், 1,000 km2 (386 sq mi) அளவிலான இடம் இந்த பூனைகளின் ஐந்திற்கு மட்டுமே ஆதரவளிக்கிறது.[34]

பனிச்சிறுத்தைகள் மங்கலான வெளிச்சத்தில் வாழக்கூடியவை. இவை அதிகாலைப்பொழுதிலும், அந்திநேரத்திலும் அதிக சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவையாகும்.[25]

உணவுப் பழக்கம்

பனிச்சிறுத்தைகள் மாமிச உண்ணிகளாகும். இத்துடன் இவற்றின் இரையை வெறியுடன் வேட்டையாடக் கூடியவையும் ஆகும். எவ்வாறிருப்பினும், ஏனைய அனைத்து பூனைகளையும் போலவே, இவையும் சந்தர்ப்பத்திற்கேற்ப உண்ணும் இயல்புடையன. அழுகிய உடல்கள் மற்றும் உள்ளூர் சேமிப்பு மாமிசங்கள் உட்பட எந்தவகையான மாமிசத்தையும் இவை சாப்பிடக்கூடியவையாகும். இவற்றைவிட மூம்மடங்கு பெரிய மிருங்கங்களையும் கூட கொல்லக்கூடிய திறமை படைத்த இவை, முயல் மற்றும் பறவைகள் போன்ற சிறிய இரையையே தேவைப்படும்போது எடுத்துக்கொள்கின்றன.[26]

பனிச்சிறுத்தையின் உணவு பழக்கம், ஓராண்டுக்குள்ளேயே பல்வேறு வகையில் வேறுபடுகிறது. இத்துடன் சூழ்நிலைக்கேற்ப கிடைக்கும் இரையையும் இவை சார்ந்திருக்கின்றன. இமாலயங்களில் பெரும்பாலும் இவை இமாலய நீலநிற ஆடு மற்றும் இமயமலை வரையாடுகளை இரையாக புசிக்கும். ஆனால் காரகோரம், தியான் சான், மற்றும் அல்தாய் போன்ற பிற மலைத்தொடர்களில் சைபீரிய ஐபிக்ஸ் (ibex) மற்றும் அர்காலி (ஒருவகையான காட்டு வெள்ளாடு) போன்றவையே இதன் முக்கிய இரையாக இருக்கிறது. பனிச்சிறுத்தைகள் வாழும் பல பாகங்களில் இவை அரிதாகவே கிடைக்கின்றன என்றபோதினும் அவை அதையே இரையாக எடுத்துக்கொள்கின்றன.[25][35] பல்வேறு வகையான காட்டு ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் (முறுக்கிய கொம்பு கொண்ட ஆடு மார்க்கோர் காட்டு ஆடு மற்றும் தாடிவைத்த சிவப்புநிற ஆடு போன்றவை), இமயமலை வரையாடு மற்றும் கோரல்கள், பிளஸ் மான், காட்டுப்பன்றி மற்றும் லங்கூர் குரங்குகள், செம்மறியாடு போன்ற பிற அசைபோடும் விலங்குகள் உட்பட பெரிய விலங்குகளையும் இது சாப்பிடுகிறது. மார்மோட்கள், ஊலி ஹேரே, பிகா, பல்வேறு ரோடென்ட், மற்றும் பனிச்சேவல் மற்றும் சூகார் போன்ற பறவைகள் ஆகியவையே இவற்றின் சிறிய உணவுகளாக இருக்கின்றன.[25][26][35][36] 2017ஆம் ஆண்டில், கங்கோத்ரி தேசிய பூங்காவிற்கு அருகில் ஒரு பனிச்சிறுத்தை புதிதாக கொல்லப்பட்ட கம்பளி பறக்கும் அணிலை (யூப்பிடாரசு சைனெரசு) சுமந்து செல்வது புகைப்படம் எடுக்கப்பட்டது.[37] மங்கோலியாவில், செம்மறி ஆடுகள் பனிச்சிறுத்தையின் உணவில் 20% க்கும் குறைவாகவே உள்ளன. இருப்பினும் காட்டு இரை குறைந்துள்ளது என்வே மக்களுடன் தொடர்பு கொள்வது பொதுவானது.[38]பனிச்சிறுத்தைகள் செங்குத்தான மலைப்பகுதிகளில் இரையைத் தேடுகின்றன. பனிச்சிறுத்தைகள் இரையை வேட்டையாடுவதற்காக மேலே பதுங்கி காத்திருக்கும். இரையை கண்டவுடன் 14 மீட்டர்கள் (46 அடி) உயரத்திலிருந்தும் குதித்து கீழே ஓடிவரும்.[39] இவற்றின் ஆரம்ப பாய்ச்சலின் வேகத்தைப் பயன்படுத்தி 300 மீ (980 அடி) வரை விலங்குகளைத் துரத்துகின்றன. இவை இரையை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் சென்று, சடலத்தின் அனைத்து உண்ணக்கூடிய பகுதிகளையும் உட்கொள்கின்றன. இவை மீண்டும் வேட்டையாடுவதற்கு முன் இரண்டு வாரங்களுக்கு ஒரு இமயமலை நீல செம்மறி ஆடு ஒன்றினை உண்டு உயிர்வாழ முடியும். மேலும் ஒரு வயது வந்த பனிச்சிறுத்தை வருடத்திற்கு 20 முதல் 30 வயது முதிர்ந்த நீல செம்மறி ஆடுகளை உண்ணும்.[1][32] பனிச்சிறுத்தைகள் இணையாக வேட்டையாடுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[40]

பனிச்சிறுத்தை இதன் வரம்பில் வயது வந்த ஆண் கவரிமா தவிர பெரும்பாலான விலங்குகளைக் கொல்லும் திறன் கொண்டது. இது புல் மற்றும் கிளைகள் உட்பட குறிப்பிடத்தக்க அளவு தாவரங்களையும் சாப்பிடுகிறது. இது மனிதர்களைத் தாக்குவதாகப் புகாரளிக்கப்படவில்லை.[32]

ஆயுட்காலம்

பனிச்சிறுத்தைகள் பொதுவாக குளிர்காலத்தின் இறுதிப்பகுதிகளில் தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றிற்கு 90 முதல் 100 நாட்கள் வரை சூல்கொள்ளும் காலமாக இருக்கிறது. இவை ஒரே ஈற்றில் ஐந்து குட்டிகள் வரை ஈன்றெடுக்கக்கூடியவையாகும். ஆனால் பொதுவாக இரண்டு அல்லது மூன்று குட்டிகள் தான் ஈன்றெடுக்கின்றன. குட்டிகள் சுமார் 18-22 மாதங்கள் வரைக்கும், அதாவது சுதந்திரமாக நடமாட தொடங்கும் வரைக்கும், தாயுடனேயே இருக்கும். வழக்கமாக பனிச்சிறுத்தைகள் 15-18 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவையாகும். ஆனால் சிறைகூண்டுகளில் 20 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழ்கின்றன.

பாதுகாப்பு

பிரான்சில் இருக்கும் டி'ஆம்னிவெல்லின் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் பனிச்சிறுத்தை, அதன் ரோமங்களுடன் கூடிய பருத்த வாலைக் காட்டிக்கொண்டிருக்கிறது.
பனிச்சிறுத்தை

பனிச்சிறுத்தை சிஐடியிஎசுன் பின் இணைப்பு I இல் பட்டியலிடப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு முதல் வனவிலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான மாநாட்டின் அட்டவணை I இல் அழிந்துபோகும் அச்சுறுத்தல் உள்ள விலங்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. கிர்கிசுதானில் 1950களிலிருந்து பனிச்சிறுத்தைகளை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் பனிச்சிறுத்தைக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பனிச்சிறுத்தைகளை வேட்டையாடினால் 3 முதல் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. நேபாளத்தில், 1973 முதல் சட்டப்பூர்வமாக பனிச்சிறுத்தைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வேட்டையாடுதல் மற்றும் வர்த்தகம் செய்ததற்காக அபராதம் விதிக்கப்படும். 1978ஆம் ஆண்டு முதல், இது சோவியத் ஒன்றியத்தின் சிவப்பு புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இன்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சிவப்பு தரவு புத்தகத்தில் அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்காக குறிப்பிடபப்ட்டுள்ளது. பனிச்சிறுத்தைகளை வேட்டையாடுவது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் இச்செயல் மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தலை நீக்கும் வகையிலே அனுமதிக்கப்படுகிறது. பனிச்சிறுத்தையின் உடல் உறுப்புகளை கடத்தினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பனிச்சிறுத்தைகளை வேட்டையாடுவது 1986 முதல் ஆப்கானித்தானில் தடைசெய்யப்பட்டுள்ளது. சீனாவில், 1989 முதல் பனிச்சிறுத்தைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. பனிச்சிறுத்தைகளை வேட்டையாடுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் அல்லது அவற்றின் உடல் பாகங்கள் விற்பனைச் செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் மூலம் குற்றம் செய்போரின் சொத்து பறிமுதல், அபராதம் மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது 1995 முதல் பூட்டானிலும் பாதுகாக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில், கஜகசுதானின் அல்மாட்டியின் புறநகரில் பனிச்சிறுத்தைகளின் காட்சிகளைப் பிடிக்கும் வகையில் 35 புகைப்படக் கருவிகள் நிறுவப்பட்டன. நவம்பர் 2021-ல், ரஷ்ய உலக வனவிலங்கு நிதியம் அறிவித்தது,.புகைப்படக் கருவிகள் நிறுவப்பட்டதிலிருந்து டிரான்ஸ்-இலி அலடாவ் மலைகளில் உள்ள இந்த கேமராக்களில் 65 முறை பனிச்சிறுத்தைகளின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

2003-ஆம் ஆண்டு மெக்கார்தே எட் அல்லினால் செய்யப்பட்ட கணக்கீட்டின்படி, காட்டில் 4,080-இல் இருந்து 6,590 வரையிலான பனிச்சிறுத்தைகளே வாழ்கின்றன என்று கண்டறியப்பட்டது. (கீழே அட்டவணையைப் பார்க்கவும்) இந்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவை குத்துமதிப்பானவை என்பதுடன் மதிப்பிழந்தவையாகவும் இருக்கின்றன.[1]

உலகமெங்கும் மிருகக்காட்சிசாலைகளில் 600-700 பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன.[41] பனிச்சிறுத்தைகள் பின்வரும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றன:

நாடுவசிக்கும் இடப்பரப்பு
(கிலோமீட்டர்2.)
கணக்கிடப்பட்ட
எண்ணிக்கை[1]
ஆப்கானித்தான்50,000100-200[42]
பூடான்15,000179–112[43]
சீனா1,100,0004,500[44]
இந்தியா75,000516–524[45]
கஜகிஸ்தான்50,000100–120[46]
கிரிஜிக் குடியரசு105,000300–400[47]
மங்கோலியா101,0001,000[48]
நேபாளம்30,000301–400[49]
பாக்கித்தான்80,000250-420[50]
ரஷ்யா70–90[51]
தஜிகிஸ்தான்100,000250–280[52]
உசுபெகிஸ்தான்10,00030–120[53]
சான் டியோகோ மிருகக்காட்சி சாலையில் பனிச்சிறுத்தை

பாதுகாக்கப்பட்ட பகுதிகள்:

பனிச்சிறுத்தைகள் பின்வரும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றன:

  • கசகசுதான்: அக்சு-ஜபாக்லி இயற்கை பாதுகாப்பு பகுதி[54]
  • உருசியா: கட்டூன் இயற்கை பாதுகாப்பு சரணாலயம், சயானோ-ஷுஷென்ஸ்கி நேச்சர் ரிசர்வ்[54]
  • கிர்கிசுத்தான்: சாரிசாட்-எர்டாஷ் மாநில இயற்கை காடு, சாரி-செலக் இயற்கை காப்பகம், பெஷ்-தாஷ் ஸ்டேட் நேச்சர் நேஷனல் பார்க், கிர்கிஸ்-அட்டா தேசிய பூங்கா, கரகோல் தேசிய பூங்கா, சிச்கன் வனவிலங்கு புகலிடம்[54]
  • உசுபெக்கிசுத்தான்: சட்கல்சுகி மாநில இயற்கை வனம், ஜாமின் தேசிய பூங்கா, உகம்-சட்கல் தேசிய பூங்கா, ஹிஸ்ஸார் தேசிய காப்புகாடு[55]
  • தஜிகிஸ்தான்: பாமிர் தேசிய பூங்கா[54]
  • மங்கோலியா: அல்தாய் தவன் போக்ட் தேசிய பூங்கா, சம்பகராவ் உல் தேசிய பூங்கா, ஹர் உசு நூர் தேசிய பூங்கா மற்றும் கோபி குர்வன்சாய்கான் தேசிய பூங்கா[54]
  • சீனா: சாங் டாங் நேச்சர் ரிசர்வ், கோமோலாங்மா தேசிய இயற்கை பாதுகாப்பு[56] மற்றும் திபெத்திய பீடபூமியில் உள்ள சஞ்சியாங்யுவான் தேசிய இயற்கை காப்பகம்,[57] மேற்கு தியான்ஷான் மலைகளில் உள்ள தோமூர் தேசிய பாதுகாப்பு மண்டலம்,[58] கிலியான் மலைகளில் கிலியான்ஷான் தேசிய இயற்கை காப்பகம்[59]
  • பாக்கித்தான்: கைபர்-பக்துன்க்வா பகுதியில் உள்ள சித்ரல் தேசியப் பூங்கா, மத்திய காரகோரம் தேசியப் பூங்கா மற்றும் கில்கிட்-பால்டிசுதானில் உள்ள குஞ்சேரப் தேசியப் பூங்கா, தியோசாய் தேசியப் பூங்கா, நல்டார் வனவிலங்கு சரணாலயம், பால்டிசுதான் வனவிலங்கு சரணாலயம் மற்றும் 300 கிமீ (120 சதுர கிமீக்கு குறைவான பாதுகாக்கப்பட்ட பகுதிகள்)[54]
  • இந்தியா: கெமிசு தேசிய பூங்கா, கிஷ்த்வார் தேசிய பூங்கா, டாச்சிகம் தேசியப் பூங்கா, குல்மார்க் வனவிலங்கு சரணாலயம், ஹிர்போரா வனவிலங்கு சரணாலயம், ரங்டம் வனவிலங்கு சரணாலயம், ஓவரா-ஆரு, காஞ்சி, கியா-மிரு மற்றும் பால்டால்-தஜ்வாஸ் வனவிலங்கு சரணாலயங்கள் லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர்; ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, பெரிய இமாலய தேசியப் பூங்கா, ரூபி-பாபா வனவிலங்கு சரணாலயம், செச்சு துவான் நாலா வனவிலங்கு சரணாலயம்[54] மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கிப்பர் வனவிலங்கு சரணாலயம்[60], உத்தரகண்டில் உள்ள நந்தா தேவி தேசியப் பூங்கா, கங்கோத்ரி தேசியப் பூங்கா மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா; கிழக்கு இமயமலையில் உள்ள காங்சென்ட்சோங்கா தேசிய பூங்கா மற்றும் திபாங் வனவிலங்கு சரணாலயம்[54]
  • நேபாளம்: அபி நம்பா பாதுகாப்பு பகுதி, தோர்பதன் வேட்டை ரிசர்வ், ஷே ஃபோக்சுண்டோ தேசிய பூங்கா, அன்னபூர்ணா பாதுகாப்பு பகுதி, மனாசுலு பாதுகாப்பு பகுதி, லாங்டாங் தேசிய பூங்கா, சாகர்மாதா தேசிய பூங்கா, மகலு பாருன் தேசிய பூங்கா மற்றும் காஞ்சன்ஜங்கா பாதுகாப்பு பகுதி[61]
  • பூடான்: பும்டெலிங் வனவிலங்கு சரணாலயம்,[54] ஜிக்மே டோர்ஜி தேசிய பூங்கா[62] மற்றும் வாங்சுக் நூற்றாண்டு தேசிய பூங்கா[63]

பாதுகாப்பு முயற்சிகள்

பனிச்சிறுத்தையைக் காப்பாற்றவும், அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கும் இவை வாழும் மலைவாழ் சுற்றுசூழல்களை பாதுகாக்கவும் பல அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. பனிச்சிறுத்தை அறக்கட்டளை, பனிச்சிறுத்தை சரணாலயம் மற்றும் பனிச்சிறுத்தை பிணையம் ஆகியவை இதில் உள்ளடங்கும். பனிச்சிறுத்தைகளுக்கான இந்த குழுக்களும், பல தேசிய அரசாங்கங்களும், உலகெங்கிலும் உள்ள இலாபநோக்கமற்றவர்களும் மற்றும் நன்கொடை வழங்குனர்களும் சமீபத்தில் பெய்ஜீங்கில் ஒன்றுகூடி 10வது சர்வதேச பனிச்சிறுத்தைகள் மாநாட்டை நடத்தினார்கள். பனிச்சிறுத்தைகள் வாழும் பிராந்தியங்களில் ஆராய்ச்சி மற்றும் சமூக திட்டங்கள் மீதான ஒருமுனைப்பானது, இந்த பெரும் பூனையின் தேவைகள், அத்துடன் பனிச்சிறுத்தைகளின் வாழ்க்கையையும், பழக்கத்தையும் பாதிக்கும் கிராமவாசிகளின் மற்றும் மந்தை மேய்ப்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து பனிச்சிறுத்தையின் பாதுகாப்பினை உறுதிபடுத்துவது இதன் நோக்கமாக கொண்டிருக்கிறது.[64][65]

உலகளாவிய பனிச்சிறுத்தை மன்றம்

2013ஆம் ஆண்டில், பனிச்சிறுத்தையின் எல்லையை (ஆப்கானித்தான், பூட்டான், சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிசுதான், மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், உருசியா, தஜிகிசுதான் மற்றும் உசுபெகிஸ்தான்) உள்ளடக்கிய 12 நாடுகளின் அரசாங்கத் தலைவர்களும் அதிகாரிகளும் உலகளாவிய பனிச்சிறுத்தை மன்றத்தில் ஒன்று கூடினர். கிர்கிசுதானின் அப்போதைய குடியரசுத் தலைவர் அல்மாசுபெக் அடம்பாயேவ் மற்றும் கிர்கிசுதான் அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவியல் தொடர்பான மாநில அமைப்பால் தொடங்கப்பட்டது. இக்கூட்டம் பிசுகெக்கில் நடைபெற்றது. மேலும் பனிச்சிறுத்தை மற்றும் உயரமான மலை வாழ்விடங்கள் பனிச்சிறுத்தை மக்களுக்கு சாத்தியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் இதன் பலவீனமான சூழலைப் பாதுகாப்பதற்கும் எல்லை தாண்டிய ஆதரவு தேவை என்பதை அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த நிகழ்வானது பனிச்சிறுத்தை பாதுகாப்பு, பனிச்சிறுத்தை அறக்கட்டளை மற்றும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஒன்றியம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட பல கூட்டாளர்களை ஒன்றிணைத்தது. பனிச்சிறுத்தை வலையமைப்பு, உலக வங்கியின் உலகளாவிய புலி முன்முயற்சி, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம், இயற்கைக்கான உலகக் காட்டு நிதியம், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி ஆகியவை இந்த முயற்சியை ஆதரித்தன.[66]உலகளாவிய பனிச்சிறுத்தை மன்றம் கூட்டத்தில், 12 நாடுகள் பிசுகெக் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இதில் இந்நாடுகள், இந்நாடுகளின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் ஈடுசெய்ய முடியாத சின்னம் மற்றும் மலை சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையின் குறிகாட்டி பனிச்சிறுத்தை என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்றும், பனிச்சிறுத்தைகள் வாழும் மலைச் சூழல் அமைப்புகள், உலகின் மூன்றில் ஒரு பங்கு மனித மக்கள்தொகைக்கு பயனளிக்கும் ஆறுகளின் அமைப்புகளின் மூலங்களிலிருந்து தண்ணீரைச் சேமித்து வெளியிடுவது உட்பட அத்தியாவசிய சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகின்றன என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றும், உணவு, எரிபொருள், தீவனம் மற்றும் மருந்து; மற்றும் உத்வேகம், பொழுதுபோக்கு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்குவோம் என்றும் கையெழுத்திட்டனர்.

கொல்லைப்படுத்தல்

மாஸ்கோ உயிரியல் பூங்கா 1872-ல் துர்கெசுதானில் பிடிக்கப்பட்ட முதல் பனிச்சிறுத்தையை காட்சிப்படுத்தியது. கிர்கிசுதானில், 1936 மற்றும் 1988க்கு இடையில் 420 உயிருள்ள பனிச்சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பப்பட்டன. கொல்லைப்படுத்தப்பட்ட முதல் பனிச்சிறுத்தை 1990களில் பெய்ஜிங் உயிரியல் பூங்காவில் குட்டிகளை ஈன்றன. பனிச்சிறுத்தை இனங்கள் உயிர்வாழும் திட்டம் 1984-ல் தொடங்கப்பட்டது.[67] 1986 ஆண்டுகளில், அமெரிக்க உயிரியல் பூங்காக்கள் 234 சிறுத்தைகளை வைத்திருந்தன.[68]

கலாச்சார முக்கியத்துவம்

பனிச்சிறுத்தை மத்திய ஆசியாவில் மரபுச் சின்னமாகவும் மற்றும் ஆசியச் சின்னமாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட காலமாக தத்தாரிஸ்தான், கசக்குகள் மற்றும் பல்கேர்களால் அரசியல் சின்னமாக, வெண் சிறுத்தைகள் பயன்படுத்தப்படுகிறது. அல்மாத்தியின் உத்தியோகபூர்வ முத்திரையிலும், முன்னாள் 10,000 கஜகஸ்தானி டெங்கே பணத்தாள்களிலும் பனிச்சிறுத்தை சித்தரிக்கப்பட்டுள்ளது. தத்தாரிஸ்தான் தேசிய சின்னம், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரின் முத்திரை மற்றும் நூர்-சுல்தானின் பழைய அரச் சின்னத்திலும் இறக்கைகள் கொண்ட வெள்ளைச் சிறுத்தை சித்தரிக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தானில், தலைநகர் பிஷ்கெக்கின் நவீன சின்னத்தில் இது மிகவும் பகட்டான வடிவத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலும் கிர்கிஸ்தான் பெண் சாரணர் சங்கத்தின் அடையாள பட்டையிலும் இப்படம் உள்ளது. உருசியாவின் ஷுஷென்ஸ்கி மாவட்டத்தின் கரங்களில் ஒரு முடிசூட்டப்பட்ட பனிச்சிறுத்தை இடம்பெற்றுள்ளது. இது இந்தியாவில் லடாக் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் மாநில விலங்கு ஆகும்.[69][70]

மேற்கோள்கள்

மேலும் காண்க

புற இணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பனிச்சிறுத்தை&oldid=3761787" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்