நீதிக் கட்சி

சென்னை மாகாணத்தில் செயற்பட்ட அரசியல் கட்சி
(நீதிக்கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரவலாக நீதிக் கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் பெடரேசன்) சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1916ஆம் ஆண்டு மருத்துவர் சி. நடேசனால், டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோருடன் இணைந்து நிறுவப்பட்டது. சென்னை மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணரல்லாதோர் மாநாடுகளின் விளைவாக இக்கட்சி உருவாக்கப்பட்டது.

நீதிக் கட்சி
தலைவர்சி. நடேசன்
தலைவர்பிட்டி தியாகராயர்
பனகல் அரசர்
முனுசாமி நாயுடு
பொபிலி அரசர்
ஈ. வெ. இராமசாமி
பொ. தி. இராசன்
செயலாளர்ஆற்காடு இராமசாமி முதலியார்
நிறுவனர்சி. நடேசன்
டி. எம். நாயர்
பிட்டி தியாகராயர்
தொடக்கம்1917
கலைப்பு27 ஆகத்து 1944
முன்னர்மதராசு திராவிடர் சங்கம்
பின்னர்திராவிடர் கழகம்
தலைமையகம்மதராசு
செய்தி ஏடுஜஸ்டிஸ்
திராவிடன்
ஆந்திர பிரகாசிகா
கொள்கைசமூகவுடைமை
பிராமண எதிர்ப்பு

சென்னை மாகாணச் சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூறாண்டின் முற்பகுதியிலும் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோருக்கிடையே வகுப்புவாரியாகப் பிரிவினை ஏற்பட்டிருந்தது. பிராமணர்கள், மொத்த மக்கள்தொகையில் தங்கள் சதவிகிதத்தை விட மிக அதிக அளவில் அரசு பணிகளில் இடம் பெற்றிருந்ததும், பிறசாதியினரை அவர்கள் நடத்திய விதமும் இப்பிரிவினைக்கு முக்கிய காரணங்கள். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிராமணரல்லாதோருக்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க நடந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. நீதிக்கட்சியின் உருவாக்கம் இத்தேவையை நிறைவேற்றியது. இக்கட்சி தன் ஆரம்ப ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றங்களிலும், பிரித்தானிய ஆட்சியாளர்களிடமும் முறையிட்டு அரசு பணிகள் மற்றும் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற முயற்சி செய்தது.

மொண்டேகு கெம்ஸ்போர்ட் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின் கீழ் 1920ஆம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. 1920–37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி தேசியவாத இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அரசியல் மாற்றாகச் செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை. 1938-ல் பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவரானார். 1944-ல் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய ஈ. வே. ராமசாமி, கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் “நீதிக்கட்சி” என்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். இதன் பின்னால் இப்பிரிவு மெதுவாகச் செயலிழந்து விட்டது.

பிரித்தானிய இந்திய அரசியலில் நீதிக்கட்சி மைய நீரோட்டத்திலிருந்து விலகித் தனித்தே செயல்பட்டது. பிராமண எதிர்ப்பே இக்கட்சியின் கொள்கைகளின் மையக்கருத்தாக இருந்தது. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்குமென நீதிக்கட்சி கருதியதால் அதனை எதிர்த்தது; காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிராகவும் செயல்பட்டது. மகாத்மா காந்தி பார்ப்பனியத்தை புகழ்ந்ததால் அவரையும் எதிர்த்தது. தேசியவாதத்தை முன்னிறுத்திய காங்கிரசில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், காங்கிரசு தலைமையில் நடைபெற்ற இந்திய விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை. பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனுக்காகச் செயல்படுவதாக நீதிக்கட்சி கூறினாலும், விரைவில் இது முசுலிம்கள் மற்றும் பட்டியல் பிரிவு மக்களின் ஆதரவை இழந்து விட்டது. பிராமணரல்லாத வெள்ளாள சாதியினரான முதலியார்கள் மற்றும் பிள்ளைகள், பலிஜா நாயுடுகள், பெரி செட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகியோரின் நலனுக்காக செயல்படுவதாக முசுலிம்களும் பட்டியல் பிரிவு மக்களும் குற்றம் சாட்டினர்.

சாதி அடிப்படியில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது ஆகியவை நீதிக்கட்சி அரசுகளின் குறிப்பிடத் தக்க செயல்கள். நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. சென்னை நகரின் தற்கால தி. நகர்ப் பகுதி நீதிக்கட்சி அரசுகளால் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது 1937–40 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. 1967 இலிருந்து தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றுக்கு நீதிகட்சியும் திராவிடர் கழகமும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.

பின்னணி

பிராமணர் - பிராமணரல்லாதோர் பாகுபாடு

இந்திய சமூக அமைப்பில் வட இந்திய பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காடே இருந்த தமிழ் பிராமணர்கள் 1850களில் இந்தியர்கள் வகிக்கக்கூடிய அரசு பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கினர். இதன் மூலம் அவர்களது அரசியல் செல்வாக்குப் பெருகியது.[1]

19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்திய நிருவாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர்.[2] பிராமணர் சாதியில் கல்வியறிவும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். இதனால் பிராமணரல்லாதோருக்கும் பிராமணருக்குமிடையே இருந்த அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது.

1912 இல் சென்னை மாகாணத்தில் சில குறிப்பிட்ட பணிகளில் பல்வேறு சாதியினரின் விகிதம் பின்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளது.[1][3]

சாதிதுணைக் கலெக்டர்கள்துணை நீதிபதிகள்மாவட்ட முன்சீப்புகள்மொத்த ஆண் மக்கள் தொகையில் %
பிராமணர்கள்7715933.2
பிராமணரல்லாத இந்துக்கள்3032585.6
முசுலிம்கள்15026.6
இந்திய கிறித்தவர்கள்7052.7
ஐரோப்பியர்கள் மற்றும் யுரேசியர்கள்1103.1

பிராமணர்களின் இந்த ஆதிக்கம் சென்னை மாகாண சட்டமன்றத்திலும் காணப்பட்டது. 1910–20 காலகட்டத்தில் ஆளுனரால் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது நிருவாக உறுப்பினர்களில் எட்டு பேர் பிராமணர்கள். நியமிக்கப்பட்டவர்களில் மட்டுமல்லாது உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட உறுப்பினர்களிலும் பெரும்பான்மையினர் பிராமணர்கள். இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர். சென்னை மாகாணத்தில் அப்போது வெளி வந்து கொண்டிருந்த 11 முக்கிய இதழ்களில் நான்கு (தி இந்து, இந்தியன் ரெவியூ, சுதேசமித்திரன் மற்றும் ஆந்திரப் பத்திரிக்கா) பிராமணர்களால் நடத்தப்பட்டவை. மேலும், அன்னி பெசண்டின் நியூ இந்தியா பிராமண ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டது. மீதமிருந்த ஆறில் இரண்டு பிரித்தானிய ஆதரவு இதழ்கள் (மெட்ராஸ் மெயில், மெட்ராஸ் டைம்ஸ்); மேலும் நான்கு எவாஞ்செலிக்கக் கிறித்தவப் பிரச்சார இதழ்கள். இந்த ஆதிக்கம் சரியனறு எனப் பிராமணரல்லாத தலைவர்கள் துண்டறிக்கைகளிலும் சென்னை ஆளுனருக்கு எழுதிய திறந்த கடிதங்களிலும் தெரிவித்து வந்தனர். இவற்றுள் 1895 இல் “ஃபேர்பிளே” என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒரு பெயரிலி எழுத்தாளர் எழுதிய துண்டறிக்கைக் குறிப்பிடத்தக்கது.

20ம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் சென்னை மாகாணத்தில் பிராமணர்கள் மூன்று அரசியல் குழுக்களாகப் பிரிந்திருந்தனர்.[4] அவை - சேத்துப்பட்டு ஐயர்கள் மற்றும் வெம்பாக்கம் ஐயங்கார்களைக் கொண்ட மயிலாப்பூர் குழு, தி இந்து உரிமையாளர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் தலைமையில் செயல்பட்ட எழும்பூர் குழு மற்றும் சி. ராஜகோபாலச்சாரியின் சேலம் தேசியவாதிகள் குழு ஆகியவை. இம்மூன்றுடன் போட்டியிடும் வகையில் நான்காவதாகப் பிராமணரல்லாதோர் குழு ஒன்று தோன்றி நீதிக்கட்சியாக உருவெடுத்தது.[5]

வகுப்புவாதமும், பிரித்தானிய ஆட்சியாளர்களும்

பிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் பங்குகுறித்து வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. காத்லீன் கோ, திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பிரித்தானியர்களுக்குப் பங்கிருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தென்னிந்தியாவில் செல்வாக்கு கொண்டிருந்தது என்கிறார்.[6] யூஜீன் இர்ஷிக் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பிராமணரல்லாதோர் இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தாலும், அவ்வளர்ச்சி அவர்களது செயல்களால் மட்டும் நிகழவில்லையெனக் கருதுகிறார்.[7][8] பிராமணரல்லாதோர் இயக்கம் தேசியவாத எதிர்ப்பு இயக்கமாகவே செயல்பட்டது, பிரித்தானிய அரசின் கொள்கைகளால் தான் அது உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது என்பது டேவிட் வாஷ்புரூக்கின் கருத்து.[9] வாஷ்புரூக்கின் இக்கூற்று பி. ராஜாராமனால் மறுக்கப்படுகிறது. பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோர் இடையே நிலவிய சமூகப் பிளவே நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்குக் காரணம் என்கிறார் ராஜாராமன்.[4]

நீதிக்கட்சியின் வளர்ச்சியில் பிரித்தானியப் பங்குகுறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும், அது சிறிதளவேனும் இருந்திருக்க வேண்டுமென்று பெரும்பாலான வரலாற்றாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். 1916 இல் பிராமணரல்லாத தலைவர்கள் வெளியிட்ட கொள்கை அறிக்கையில் இடம்பெற்றிருந்த புள்ளி விவரங்கள் பிரித்தானிய ஆட்சிப்பணி அதிகாரிகள் பொதுப்பணிக் குழுவுக்காகத் தயாரித்தவையே.[10]

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வலுப்பெற்ற மயிலாப்பூர் பிராமணர் குழுவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பிராமணரல்லாதோர் பலரை அரசு பணிகளில் நியமிக்கத் தொடங்கினர். 1903ம் ஆண்டு சென்னை ஆளுனர் அம்ட்ஹில் பிரபு சி. சங்கரன் நாயரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு (பாஷ்யம் அய்யங்கார் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட காலியிடம்). 1912 இல் சர் அலெக்சாந்தர் கார்டியூவின் முயற்சியால் சென்னை அரசுச் செயலகம், அரசுப் பணி நியமனங்களில் பிராமணரல்லாதோர் என்றொரு தனிப்பிரிவை உருவாக்கியது. 1918 இல் இரு பிரிவினருக்கும் தனித்தனியே பட்டியல்கள் உருவாக்கப்பட்டு நியமனங்களில் பிராமணரல்லாதோருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாயிற்று.[9]

ஆரம்பகால பிராமணரல்லாதோர் அமைப்புகள்

பிரித்தானிய இந்தியாவில் மொழிக்குழுக்கள் அடையாள அரசியலில் ஈடுபடுவது பரவலாக இருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரசு ஆட்சிக்குட்பட்ட விடுதலை இந்தியாவை விடப் பிரித்தானிய ஆட்சியே மேலெனக் கருதிய குழுக்கள் இருந்தன.[11]

1909 இல் பி. சுப்ரமணியம், எம். புருசோத்தம் நாயுடு எனும் இரு வழக்கறிஞர்கள் “சென்னை பிராமணரல்லாதோர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி அக்டோபர் 1909 க்கு முன்னர் ஆயிரம் பிராமணரல்லாத உறுப்பினர்களைச் சேர்க்கப்போவதாக அறிவித்தனர். ஆனால் பிராமணரல்லாத மக்களிடையே இதனால் எவ்விதத் தாக்கமும் ஏற்படவில்லை; இந்த அமைப்பும் நீர்த்துப் போனது. 1912 இல் சரவணப் பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, எஸ். நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணரல்லாதோர் தலைவர்கள் ”சென்னை ஐக்கிய சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். நடேச முதலியார் இதன் செயலாளராக இருந்தார். இவ்வமைப்பு அரசியலைத் தவிர்த்துச் சமூகப் பணிகளில் மட்டும் ஈடுபட்டது. அக்டோபர் 1, 1912 இல் இவ்வமைப்பு புனரமைக்கப்பட்டு சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரிடப்பட்டது. சென்னை நகரத்தில் பல கிளைகளைத் தொடங்கிய இச்சங்கத்தின் முக்கிய சாதனை பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நிறுவியது. மேலும் இது ஆண்டுதோறும் பிராமணரல்லாத பட்டதாரிகளுக்காக விழாக்களை நடத்தியதுடன், அவர்களது கோரிக்கைகளை முன்வைக்கும் நூல்களையும் வெளியிட்டது.[4]

நீதிக்கட்சியின் தோற்றம்

1920களில் எடுக்கப்பட்ட படம் : தியாகராய செட்டி நடுவில் அமர்ந்துள்ளார் (சிறுமிக்கு வலப்புறம் இருப்பவர்). அவருக்கு வலப்புறம் இருப்பவர் ஆற்காடு ராமசாமி முதலியார். பனகல் அரசர், சிங்கம்பட்டி ஜமீன்தார் மற்றும் வெங்கடகிரி அரசர் ஆகியோர் உடனிருக்கின்றனர்.

இந்திய சட்டமன்றத்துக்கான 1916 தேர்தலில் பிராமணரல்லாத வேட்பாளர்களான டி. எம். நாயர் (தெற்கு மாவட்டங்கள் தொகுதி) மற்றும் பனகல் அரசர் (ஜமீன்தார்கள் தொகுதி), பிராமண வேட்பாளர்கள் வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி மற்றும் கே. வி. ரங்கசாமி ஐயங்கார் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டனர். அதே ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் தியாகராய செட்டியும், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவும் ஹோம் ரூல் இயக்க ஆதரவு பிராமண வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இந்தத் தோல்விகள் இரு குழுவினருக்கிடையேயான பகையுணர்வை அதிகரித்து, பிராமணரல்லாதோருக்காகத் தனியே ஒரு அரசியல் அமைப்பு உருவாக உடனடிக் காரணமாக அமைந்தன.

நவம்பர் 20,1916 அன்று சென்னை வேப்பேரியில் இருக்கும் வழக்கறிஞர் டி.எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் அமைப்புக் கூட்டம் ஒன்று கூடியது. திவான் பகதூர் பிட்டி. தியாகராய செட்டியார், டாக்டர் டி. எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், திவான் பஹதூர் பி. எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. ராமராய நிங்கார், திவான் பகதூர் எம். ஜி. ஆரோக்கியசாமிப் பிள்ளை, திவான் பகதூர் ஜி. நாராயணசாமி ரெட்டி, ராவ் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார், ராவ் பகதூர் எம். சி. ராஜா, டாக்டர் முகமது உஸ்மான் சாகிப், ஜே. எம். நல்லுசாமிப்பிள்ளை, ராவ் பகதூர் கே. வேங்கட்டரெட்டி நாயுடு (கே. வி. ரெட்டி நாயுடு), ராவ் பகதூர் ஏ. பி. பாத்ரோ, டி. எத்திராஜுலு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார், ஜே. என். ராமநாதன், கான் பகதூர் ஏ. கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர், அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள், ஏ. ராமசாமி முதலியார், திவான் பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜுலு நாயுடு, எல். கே. துளசிராம், கே. அப்பாராவ் நாயுடுகாரு, எஸ். முத்தையா முதலியார், மூப்பில் நாயர் உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.[12]

அக்கூட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (சிபா) உருவானது. பிராமணரல்லாதோரின் குற்றச்சாட்டுகளை முன் வைக்க ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் செய்தித்தாள்களை நடத்துவது இவ்வமைப்பின் குறிக்கோள். தியாகராயரும் டாக்டர் நாயரும் சென்னை நகரசபை அரசியலில் எதிரணியில் இருந்தவர்கள் ஆனால் நடேச முதலியாரின் முயற்சியால் ஓரணியில் ஒன்றிணைந்தனர். இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் இயக்கமும் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கூட்டு நிறுவனர்களாக டி. எம். நாயரும் பிட்டி தியாகராய செட்டியாரும் இருந்தனர். தலைவராக ராஜரத்ன முதலியார், துணைத் தலைவர்களாக ராம்ராய நிங்கார், பிட்டி. தியாகராய செட்டியார், கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர், எம். ஜி. ஆரோக்கியசாமிப் பிள்ளை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பி. எம். சிவஞான முதலியார், பி. நாராயணசாமி முதலியார், முகமது உஸ்மான், எம். கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் செயலாளர்களாகவும் ஜி. நாராயணசாமி செட்டியார் பொருளாளராகவும் செயல்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராக டி. எம். நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] இந்த இயக்கம் பின்னாளில் நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) என்று பரவலாக அழைக்கப்படலாயிற்று. ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழை அது வெளியிட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. டிசம்பர் 1916 இல் இவ்வமைப்பு “பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கை” ஒன்றை வெளியிட்டது. அதில் பிரித்தானிய அரசின் மீது தங்கள் விசுவாசத்தை அறிவித்த அதேவேளை நிருவாகத்தில் பிராமண ஆதிக்கத்தைக் கடுமையாகத் தாக்கியது.[4] இந்த அறிக்கையைத் தேசியவாத நாளிதழான தி இந்து பின்வருமாறு கடுமையாக விமர்சித்தது (20 டிசம்பர் 1916):

இந்த அறிக்கை எமக்கு மிகுந்த வியப்பினையும் வேதனையையும் அளிக்கிறது. இவ்வறிக்கை அது பேசும் பொருளைப் பற்றித் தவறான, வெகுவாகத் திரிக்கப்பட்ட கண்ணோட்டதை முன் வைக்கிறது. பெரும் பாரத சமூகத்தினிடையே பகையுணர்வை வளர்ப்பது மட்டுமே இதன் நோக்கமாகக் கொள்ள முடியும்.[4]

இந்து நேசன் இதழ் ”இப்போது இந்தப் புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியமென்ன?” என்று வினவியது. ஹோம் ரூல் இயக்கத்தின் நியூ ஏஜ் இதழ், இப்புதிய அமைப்பை நிராகரித்ததுடன் அது விரைவில் அழிந்து விடும் என்றும் யூகித்தது. பெப்ரவரி 1917ல் சிபா கூட்டுப்பங்கு நிறுவனம் தலா 100 ரூபாய் மதிப்புள்ள 640 பங்குகளை விற்று முதலீடு திரட்டியது. இப்பணத்தைக் கொண்டு ஒரு அச்சுக் கூடத்தை வாங்கி , ஜஸ்டிஸ் இதழை வெளியிட முயன்றது. முதலில் சி. கருணாகர மேனன் இதழாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்து நாயரே அவ்விதழின் கௌரவ ஆசிரியரானார். பி. என். ராமன் பிள்ளையும், மு. சி. பூரணலிங்கம் பிள்ளையும் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினர். இதன் முதல் பதிப்பு பெப்ரவரி 26, 1917 இல் வெளியானது. ஜூன் 1917 இல் பக்தவத்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்ட திராவிடன் என்ற தமிழ் இதழையும் வெளியிடத் தொடங்கியது. பின்னர் ஏ. சி. பார்த்தசாரதி நாயுடு ஆசிரியராக இருந்த ஆந்திர பிரகாசிக்கா என்ற நாளிதழையும் நீதிக்கட்சி வாங்கியது. ஆனால் 1919 ம் ஆண்டு நிதிப்பற்றாக்குறையினால் இவ்விரு நாளிதழ்களும் வார இதழ்களாக மாற்றப்பட்டன.[4]

ஆகஸ்ட் 19, 1917 இல் கோயம்புத்தூரில் பனகல் அரசர் தலைமையில் முதல் பிராமணரல்லாதோர் மாநாடு நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் இதுபோலப் பல மாநாடுகள் கூட்டப்பட்டன. அக்டோபர் 18 இல் டி. எம். நாயரால் எழுதப்பட்ட கட்சிக் குறிக்கோள்கள் தி இந்து நாளிதழில் வெளியாகின:

1) தென்னிந்தியாவில் பிராமணரல்லாத அனைத்து சாதியினர்களையும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல், பொருள் மற்றும் அற ரீதியாக முன்னேற்றுவது. 2) [பிராமணரல்லாத அனைத்து சமூகத்தினரின் நலனைப் பாதுகாக்க] தென்னிந்திய மக்களின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் தக்க வகையில் உரிய காலத்தில் அரசின் முன் வைப்பது; பொதுக் கேள்விகளை விவாதிப்பது. 3) பொதுக் கருத்து தொடர்புடைய தாராண்மிய கொள்கைகளைக் கருத்தரங்குகள், அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பிற வழிகள் மூலமாகப் பரப்புவது.[13]

ஆகஸ்ட்-டிசம்பர் 1917 காலகட்டத்தில் சென்னை மாகாணம் முழுவதும் மாநாடுகள் நடத்தப்பட்டன. பெசவாடா, சேலம், திருநல்வேலி, கோவை, புலிவெந்தலா, பிக்கவோல் ஆகியவை மாநாடுகள் நடத்தப்பட்ட ஊர்களுள் சில. இந்த மாநாடுகளும் பிற கூட்டங்களும் அரசியல் களத்தில் நீதிக்கட்சியின் நுழைவைப் பறைசாற்றின.[14]

ஆரம்பகால வரலாறு (1916–1920)

1916–20 காலகட்டத்தில் நீதிக்கட்சி காங்கிரசின் எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் குழுக்களுடன் அரசியல் களத்தில் மோதியது. பிராமணரல்லாதோருக்கு அரசு அதிகாரத்தில் இட ஒதுக்கீடு தேவையெனப் பிரித்தானிய அரசிடமும் பொது மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. காங்கிரசின் மூன்றாவது குழுவான ராஜாஜி அணி பிரித்தானிய அரசுடன் ஒத்துழையாமைக் கொள்கை கொண்டிருந்தது.[5]

ஹோம் ரூல் இயக்கத்துடன் மோதல்

1916ம் ஆண்டு பிரம்ம ஞான (தியோசோபிகல்) சங்கத்தின் தலைவியான அன்னி பெசண்ட், ஹோம் ரூல் லீகினை உருவாக்கி இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடலானார். அவரது செயல்பாடுகள் சென்னையை மையமாகக் கொண்டிருந்தன. அவருடைய் அரசியல் ஆதரவாளர்களில் பலர் பிராமணர்கள். அவர் இந்தியாவை ஒரே மாதிரியான சமய, மெய்யியல், பண்பாட்டுக் கூறுகளையும் ஒரு சாதி அமைப்பினையும் கொண்டிருக்கும் ஒன்றுபட்ட அமைப்பாகக் கருதினார். இந்தியப் பண்பாடுகுறித்து அவரது கருத்துகளுக்குப் புராணங்களும், மனுதர்மமும் வேதங்களும் அடிப்படையாக இருந்தன. இவற்றைக் கல்வி கற்ற பிராமணரல்லாதோர் கேள்விக்குட்படுத்தத் தொடங்கியிருந்தமையால் சென்னை மாகாணத்தில் ஹோம் ரூல் இயக்கத்துக்கும் பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கும் மோதல் உருவானது.

ஹோம் ரூல் இயக்கம் துவக்கப்படும் முன்னரே டி. எம். நாயருக்கும் அன்னி பெசண்ட்டுக்குமிடையே உரசல் ஏற்பட்டிருந்தது. நாயர் தனது மருத்துவ ஆய்விதழ் ஆண்டிசெப்ட்டிக் இல் பிரம்மஞானத் தலைவர் சார்லஸ் லெட்பெட்டரின் பாலுறவுப் பழக்கங்களைத் தாக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து நாயருக்கு எதிராகப் பெசண்ட் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தோல்வியடைந்திருந்தது.[4][15]

பெசண்ட் பிராமணர்களுடன் கொண்டிருந்த நட்புறவும், அவரது இந்தியா குறித்த பார்வை பார்ப்பனிய கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருந்ததும் அவருக்கும் நீதிக்கட்சிக்குமிடையே மோதலை உருவாக்கியது. டிசம்பர் 1916 இல் வெளியான நீதிக்கட்சி கொள்கை அறிக்கையில் ஹோம் ரூல் இயக்கத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. பெசண்டின் நியூ இந்தியா இதழ் அந்த அறிக்கையை விமர்சித்தது. ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி, தனது இதழ்களில் பெசண்ட்டை “ஐயர்லாந்து பாப்பாத்தி” என்று வருணித்தது. தினமும் பெசண்ட்டையும் அவரது இயக்கத்தையும் தாக்கி நீதிக்கட்சி இதழ்கள் செய்திகள் வெளியிட்டன. திராவிடன் இதழில் “ஹோம் ரூல் என்பது பிராமணர்களின் ஆட்சி” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இச்செய்திகளும் கட்டுரைகளும் பின்பு தொகுக்கப்பட்டு “அன்னி பெசண்ட்டின் படிவளர்ச்சி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. ஹோம் ரூல் இயக்கமானது அரசின் கெடுபிடிகளின் பாதிப்பில்லாத வெள்ளைப் பெண்மணியால் நடத்தப்படும் அரசியல் இயக்கம் என்றும் அதன் விளைவுகள் பிராமணர்களுக்கே சாதகமாக அமையும் என்றும் நாயர் விமர்சித்தார்.[4][15]

வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை

ஆகஸ்ட் 20, 1917 இல் பிரித்தானிய அரசின் இந்தியச் செயலர் எட்வின் மொண்டேகு இந்தியாவின் நிருவாகத்தில் இந்தியரின் பங்கை அதிகரிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளை வளர்க்கவும் சில அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தார். இவ்வறிவிப்பு சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாத தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் இறுதியில் நீதிக்கட்சி தனது கோரிக்கைகளை முன்வைத்துப் பல மாநாடுகளை நடத்தியது. 1909 இல் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டது போலவே பிராமணரல்லாதோருக்கும் மாகாண சட்டமன்றங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும்படி தியாகராய செட்டி மொண்டேகுவுக்கு தந்தி அனுப்பினார். காங்கிரசின் பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சிக்குப் போட்டியாகச் சென்னை மாகாண சங்கம் ஒன்றை உருவாக்கினர். பெரியார் ஈ. வே. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் தலைவர்கள். இச்சங்கத்துக்கு காங்கிரசின் பிராமணர்கள் மற்றும் தி இந்து இதழின் ஆதரவு இருந்தது. தங்கள் கோரிக்கையினை பலவீனப்படுத்த பிராமணர்களின் கைக்கூலியாக இச்சங்கம் செயல்படுவதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது.[4][14][16]

டிசம்பர் 14, 1917 இல் மொண்டேகு அரசியல் சீர்திருத்தங்கள்குறித்து பலதரப்பினரின் கருத்தறிய சென்னை வந்தார். ஓ. கந்தசாமி செட்டி தலைமையில் நீதிக்கட்சி தூதுக்குழுவும், கேசவ பிள்ளை தலைமையில் சென்னை மாநில சங்க தூதுக்குழுவும் வேறு இரு பிராமணரல்லாதோர் தூதுக்குழுக்களும் அவரைச் சந்தித்து தங்கள் தரப்பினை முன் வைத்தன. இரு தரப்பினரும் பலிஜா நாயுடுகள், பிள்ளைகள், முதலியார்கள், செட்டிகள், பஞ்சமர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு வேண்டின. கேசவ பிள்ளை இந்நிலைப்பாட்டுக்கு காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவின் ஆதரவினையும் பெற்றார். போர்ட்லாந்து பிரபு போன்ற பிரித்தானிய ஆட்சியாளர்களும், மெட்ராஸ் மெயில் போன்ற அரசு ஆதரவு இதழ்களும் இந்நிலைப்பாட்டை ஆதரித்தன. ஆனால் மொண்டேகு இந்து சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விரும்பவில்லை. ஜூலை 2, 1918 இல் வெளியான அவரது அதிகாரப்பூர்வ அறிக்கை அதைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டது.[4][14][16]

தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டி. எம். நாயரை லண்டனுக்கு அனுப்பி இடஒதுக்கீடு கோர நீதிக்கட்சி முடிவெடுத்தது. ஜூன் 1918 இல் லண்டனை அடைந்த நாயர் டிசம்பர் மாதம் வரை இதற்கான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டார். அறிக்கைகள், கட்டுரைகள் எழுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியும் நீதிக்கட்சியின் நிலைபாட்டினை வெளிப்படுத்தினார். ஆனால் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட சவுத்பரோ குழுவுடன் ஒத்துழைக்க நீதிக்கட்சி மறுத்து விட்ட்து. இந்திய ஆட்சிப்பணியின் இரு பிராமண உறுப்பினர்கள் (வி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி மற்றும் சுரேந்திரநாத் பான்ர்ஜீ) இதில் இடம்பெற்றிருந்ததே இதற்குக் காரணம். ஆனால் சவுத்பரோ குழுவின் இந்தியரல்லா உறுப்பினர்களின் ஆதரவை நீதிக்கட்சி பெற்றிருந்தது.[14][17]

1919–20 காலகட்டத்தில் இந்திய அரசுச் சட்டம், 1919 க்கு இறுதி வடிவம் கொடுக்கப் பிரித்தானிய நாடாளுமன்ற குழு, முறையீடு கூட்டங்களைக் கூட்டியது. ஆற்காடு ராமசாமி முதலியார், வெங்கட ரெட்டி நாயுடு, எல். கே. துளசிராம், கோக்க அப்பராவ் நாயுடு ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற இக்கூட்டங்களில் கலந்து கொண்டது. பனகல் அரசர் ராமராயநிங்கார் அனைத்திந்திய நிலச்சுவான்தார்கள் சங்கம் மற்றும் சென்னை சமீந்தார் சங்கங்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். ரெட்டி நாயுடு, ராமசாமி முதலியார் மற்றும் ராமராயநிங்கார் ஆகியோர் பெரிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசி, உள்ளூர் இதழ்களில் பத்திகள் எழுதித் தங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்டினர். டி. எம். நாயர் ஜூலை 17, 1919 இல் மரணமடைந்ததால், அவர் இக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை. நாயரின் மரணத்துக்குப் பின்னர் ரெட்டி நாயுடு நீதிக்கட்சியின் செய்தித் தொடர்பாளரானார். ஆகஸ்ட் 22 இல் நாடாளுமன்றக்குழு முன் தோன்றி நீதிக்கட்சியின் கருத்தினை முன்வைத்தார். நீதிக்கட்சியின் தரப்புக்கு குழுவில் இடம்பெற்ற தாராண்மியக் கட்சி மற்றும் தொழில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியது. நவம்பர் 17, 1919 இல் வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரைத்தது. எத்தனை இடங்கள் ஒதுக்கவேண்டுமென்பதை அந்தந்தப் பகுதியின் அரசும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியது. நீதிக்கட்சி, சென்னை மாகாண சங்கம், மற்றும் பிரித்தானிய அரசுக்கிடையே ஒரு நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதியில் மார்ச் 1920 இல் இடங்கள்குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. மெஸ்டன் உடன்படிக்கை என்றழைக்கப்பட்ட இதன் மூலம் சென்னை சட்டமன்றத்தின் 63 பொது இடங்களில் 28 (3 நகர்ப்புற மற்றும் 25 ஊர்ப்புற இடங்கள்) பிராமணரல்லாதோருக்காக ஒதுக்கப்பட்டன.[14][17]

ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிர்ப்பு

மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீருதிருத்தங்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்கள் போதாதெனக் கருதிய மகாத்மா காந்தி, மார்ச் 1919 இல் இயற்றப்பட்ட ரவ்லட் சட்டங்களின் மீது கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கினார். கல்வி நிறுவனங்கள், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொது நிகழ்வுகளைப் புறக்கணிக்கும்படி தன் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். நீதிக்கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்கவில்லை. புதிய அரசியல் சூழலில் பங்கேற்று பிரித்தானிய அரசின் மூலம் தன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அது விரும்பியது. காந்தியை சமூக அமைப்பினை சீர்குலைக்க விழைந்துள்ள ஒரு அரசின்மைவாதியெனக் கருதியது. தொழில்மயமாக்கலுக்கு எதிரான காந்தியின் கொள்கைகளைக் கண்டித்து நீதிக்கட்சி உறுப்பினர் மரியதாஸ் ரத்னசாமி 1920 இல் “மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவம்” என்ற அறிக்கையை வெளியிட்டார். வெங்கட ரெட்டி நாயுடுவும் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.[18][19]

ஒத்துழையாமைக் கொள்கையைப் பெரும்பாலான அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரித்ததால் நீதிக்கட்சி தனிமைப்படுத்தப்பட்டது. காந்தி பிராமணரல்ல என்றாலும் அவர் பிராமணர்களோடு மட்டுமே நட்புறவு கொண்டவர் என்று நீதிக்கட்சி கருதியது. மேலும் காந்தி எதிர்த்த தொழில்மயமாக்கக் கொள்கையை ஆதரித்தது. ஏப்ரல் 1921 இல் காந்தி சென்னை வந்தபோது பார்ப்பனியத்தின் நற்கூறுகளைப் பற்றியும் இந்தியப் பண்பாட்டுக்குப் பிராமணர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் உரையாற்றியது நீதிக்கட்சியின் காந்தி எதிர்ப்பை வலுப்படுத்தியது.[19] காந்தியின் பேச்சுக்கு ஜஸ்டிஸ் இதழ் பின்காணும் எதிர்வினையாற்றியது:

காந்தியின் ஆதரவாளர்களான உள்ளூர் பிராமண அரசியல்வாதிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். திரு. காந்தி இருபால்களைச் சேர்ந்த பிராமணர்களால் சூழப்பட்டிருந்தார். ஒரு பிராமண கோஷ்டி பஜனை பாடிக் கொண்டே கூட்டத்துக்கு வந்து சேர்ந்தது. அவர்கள் காந்தியின் முன் கற்பூரம் சுற்றி தேங்காய் உடைத்து அவருக்கு ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் புனித நீரை அளித்தனர். இதுபோலக் கடவுளாக்கத்தின் வேறுசில வெளிப்பாடுகளும் நடந்தன. எதிர்பார்த்தது போலவே அம்மனிதரின் அளப்பரிய தற்பெருமைக்கு இது தீனியாக அமைந்தது. பிராமணர்கள் மற்றும் பார்ப்பனீயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி அவர் நீளமாகப் பேசினார். திராவிடப் பண்பாடு, மெய்யியல், இலக்கியம், மொழிகள் வரலாறுபற்றி ஒன்றுமே அறியாத இந்தக் குஜராத்தி மேன்மகன் பிராமணர்களை வானளாவப் புகழ்ந்தார். பிராமணரல்லாதோர் குறித்து வாய் திறக்கவில்லை. கண்டிப்பாகக் கூட்டத்துக்கு வந்த பிராமணர்களுக்கு உச்சி குளிர்ந்திருக்கும்.[19]

காந்தி நடத்திய யங் இந்தியா இதழுக்கொரு கடிதம் எழுதிய கந்தசாமி செட்டி, பிராமணர்-பிராமணரல்லாதோர் விசயங்களில் தலையிடாமல் இருக்கும்படி காந்திக்கு அறிவுரை கூறினார். அதற்குக் காந்தி அளித்த பதிலில் மீண்டும் இந்து சமயத்துக்குப் பிராமணர்களின் பங்களிப்பைப் பாராட்டிய காந்தி “வாசகர்கள் தென் திராவிடத்தை, வட ஆரியத்திலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டாமென எச்சரிக்கிறேன். இன்றைய இந்தியா இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்ட பல பண்பாடுகளின் கலவையாகும்” என்று கூறியிருந்தார். நீதிக்கட்சி மற்றும் மெட்ராஸ் மெயில் இதழ் காந்திக்கெதிராக மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்கள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் பேசும் மாவட்டங்களில் காந்தியின் புகழைக் குன்றச் செய்தன. சவுரி சாவ்ரா நிகழ்வின் காரணமாகக் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்ட பிறகும் நீதிக்கட்சி அவரைச் சந்தேகக் கண்ணுடன்தான் பார்த்தது. அவர் கைது செய்யப்பட்ட பிறகே தனது கடுமையான நிலைப்பாட்டைத் தணித்துக் கொண்டது.[19]

ஆளும் கட்சியாக

மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீருதிருத்தங்கள், இந்திய அரசுச் சட்டம் 1919 இன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1920 முதல் 37 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. இந்தப் பதினேழு ஆண்டுகளில் 13 இல் (1926–30 தவிர) நீதிக்கட்சியே சென்னை மாகாணத்தை ஆண்டது.

1920–26

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரசு 1920 தேர்தலைப் புறக்கணித்து விட்டது.[20] பெரிய எதிர்ப்பின்றி போட்டியிட்ட நீதிக்கட்சி 98 இடங்களில் 63 இல் வென்றது.[21] அக்கட்சியின் ஏ. சுப்பராயுலு ரெட்டியார் சென்னையின் முதல் முதலமைச்சரானார். ஆனால் விரைவில் உடல்நிலைக் குறைவினால் அவர் பதவி விலகிப் பனகர் அரசர் முதல்வரானார்.[22] இரட்டை ஆட்சி முறை நீதிக்கட்சிக்கு முழுமையாக ஏற்புடையதாக இல்லை.[18] 1924 இல் மட்டிமான் குழுவின் முன் தோன்றிய வெங்கட ரெட்டி நாயுடு நீதிக்கட்சியின் நிலையினை பின்வருமாறு விளக்கினார்:

நான் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தேன். ஆனால் வனத்துறை என் கட்டுப்பாட்டில் இல்லை. அதே போல வேளாண்மை என் கையில் இருந்தது ஆனால் நீர்ப்பாசனத்துறை இல்லை. சென்னை மாகாணத்தின் வேளாண்துறை அமைச்சராக நானிருந்தாலும் சென்னை விவசாயிகள் கடன் சட்டமோ, சென்னை நிலவிருத்தி சட்டமோ என்னைக் கேட்டு இயற்றப்படவில்லை. நீர்ப்பாசனம், வேளாண் கடன்கள், நிலவிருத்தி கடன்கள், பஞ்ச நிவாரணம் ஆகிய எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு வேளாண்துறை அமைச்சர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இதே போலத் தான் தொழிற்சாலைகள், கொதிகலன்கள், மின்சாரம், நீர் ஆற்றல், சுரங்கம், தொழிலாளர் துறைகள் எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத தொழிற்துறை அமைச்சராகவும் இருந்தேன்.[18]

தியாகராய செட்டியின் அதிகாரப்போக்காலும் தமிழ் உறுப்பினர்களைக் கண்டுகொள்ளாமல் தெலுங்கு உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததாலும் நீதிக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1923 இல் சி. ஆர். ரெட்டி விலகித் தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சுயாட்சிக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. 1923 இல் நடந்த இரண்டாவது தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றாலும் அதன் பெரும்பான்மை குறைந்து போனது. இரண்டாவது சட்டமன்றத்தின் முதல் நாளன்றே எதிர்க்கட்சிகள் பனகல் அரசர் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. 65-44 என்ற வாக்கு கணக்கில் அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பனகல் அரசர் நவம்பர் 1926 வரை முதல்வராக நீடித்தார்.[18][23][24] 1926 தேர்தலில் நீதிக்கட்சி சுயாட்சிக் கட்சியிடம் தோல்வியடைந்தது. ஆனால் வெற்றி பெற்ற சுயாட்சி கட்சியினர் ஆட்சியமைக்க மறுத்து விட்டதால் ப. சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளைக் கொண்டு சென்னை ஆளுனர் ஒரு அரசினை உருவாக்கினார்.[25][26]

இட ஒதுக்கீடு

பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி அரசு, 1921ல் ஜாதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இதற்கான முதல் அரசாணையை - எண் 613 - மதராஸ் மாகாண அரசு பிறப்பித்தது. அந்த ஆணையின்படி பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%, பிராமணர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இடஒதுக்கீடு செய்யப்பட்டது.[27]

1930–37

1930களில் எடுக்கப்பட்ட படம் : (இடப்புறம் ஐந்தாவது நபரிலிருந்து) பெரியார் ஈ. வே. ராமசாமி, நடேச முதலியார், பொபிலி அரசர் மற்றும் எஸ். குமாரசாமி ரெட்டியார்

நான்கு ஆண்டுகள் எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட பின்னர் 1930 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது நீதிக்கட்சி. முனுசாமி நாயுடு முதல்வரானார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் கட்சியில் உட்பூசலும் சர்ச்சைகளும் மலிந்தன.[28]

பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் அப்போது உச்சத்தில் இருந்ததால் சென்னை மாகாணத்தின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. தென் மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. வருவாய் குறைபாட்டை ஈடுகட்ட அரசு நிலவரியை அதிகரித்தது.[29] இதனாலும் பொபிலி அரசர் மற்றும் வெங்கடகிரி குமாரராஜா இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதாலும் நீதிக்கட்சியின் ஜமீன்தார் குழு அதிருப்தியடைந்தது. 1930 இல் பி. டி. ராஜன் மற்றும் முனுசாமி நாயுடு ஆகியோரிடையே கட்சி தலைவராவதில் போட்டியேற்பட்டது. தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நாயுடு மூன்றாண்டுகளாகக் கட்சியின் வருடாந்திர மாநாட்டை நடத்தாமல் தவிர்த்தார். நவம்பர் 1930 இல் எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமையில் ஜமீன்தார்கள் ”ஜிஞ்சர்” குழு என்ற போட்டிக்குழுவை உருவாக்கினர். அக்டோபர் 10-11, 1932 இல் நடைபெற்ற கட்சியின் 12வது வருடாந்திர மாநாட்டில் ஜமீன்தார் குழு நாயுடுவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கி பொபிலி அரசரை அவருக்குப் பதில் தலைவராக்கியது. சொந்தக் கட்சியினரே தனக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து விடுவார்கள் என்றஞ்சிய நாயுடு நவம்பர் 1932 இல் பதவி விலகினார்; பொபிலி அரசர் முதல்வரானார். நாயுடுவின் ஆதரவாளர்கள் ஜனநாயக நீதிக்கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினர். 1935 இல் நாயுடுவின் இறப்புக்குக் பின்னர் மீண்டும் நீதிக்கட்சியில் இணைந்தனர்.[29]இக்காலகட்டத்தில் நீதிக்கட்சியின் எல். சிறீராமுலு நாயுடு சென்னை நகரின் மேயராகப் பணியாற்றினார்.[18][30][31][32]

மாகாண மக்களிடையே வேகமாகப் பரவி வந்த தேசியவாத உணர்வும், பொபிலி அரசரின் ஊழல் மலிந்த திறமையற்ற நிருவாகமும் நீதிக்கட்சியின் நற்பெயரை அறவே அழித்து விட்டன. உட்கட்சிப் பூசல்கள் 1930களின் முற்பகுதியில் கட்சியை வெகுவாக வலுவிழக்கச் செய்தன. பொபிலி அரசர் கட்சிக்காரர்களைக் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டதுடன் கட்சியின் முதுகெலும்பாக இருந்த உள்ளாட்சி அமைப்புத் தலைவர்களை ஓரம் கட்ட முயற்சித்தார். பிரித்தானிய அரசின் கடுமையான நடவடிக்கைகளைப் பொபிலி அரசர் ஆதரித்ததால், அவரை மக்கள் பிரித்தானியர்களின் கைக்கூலியாகக் கருதினர். நீதிக்கட்சி அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் மக்களின் கோபத்தை சம்பாதித்தன. ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலங்களில் நில வரியை 12.5% குறைக்க பொபிலி அரசர் மறுத்தது, இதனை எதிர்த்துக் காங்கிரசு தலைமையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஜமீன்தாராகிய அவர் கடுமையாக ஒடுக்கியது போன்ற நிகழ்வுகள் நீதிக்கட்சியின் செல்வாக்கு மேலும் சரியக் காரணமாக அமைந்தது. 1934 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றாலும் வெற்றி பெற்ற சுயாட்சிக் கட்சி (காங்கிரசின் தேர்தல் பிரிவு) அரசமைக்க மறுத்து விட்டதால், நீதிக்கட்சி சிறுபான்மை அரசமைத்தது.[18][31]

நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த இறுதி ஆண்டுகளிலும் மக்களிடையே அதன் ஆதரவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது. அக்கட்சி அமைச்சர்கள் மாதச் சம்பளமாகப் பெருந்தொகை பெற்று வந்தனர் (அவர்களது மாத சம்பளம் ரூ. 4,333.60; இதோடு ஒப்பிடுகையில் அருகிலிருந்த மத்திய மாகாணங்களின் அமைச்சர்கள் பெற்ற ஊதியம் ரூ. 2,250). இது சென்னை மாகாண பத்திரிக்கைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொதுவாக நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மெட்ராஸ் மெயில் இதழ் கூடப் பொபிலி அரசின் ஊழலையும் கையாலாகாத்தனத்தையும் சாடியது.[33] நீதிக்கட்சி அரசுமீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியை ஜமீன் ரயாட் இதழில் வெளியான பின்வரும் கட்டுரையின் மூலம் அறியலாம்:

இந்த மாகாணத்தின் மக்களைப் பீடித்த பிளேக் நோய்போல் நீதிக்கட்சி செயல்படுகிறது; அதன் பால் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தர வெறுப்பு உருவாகிவிட்டது. சர்வாதிகார நீதிக்கட்சி அரசு எப்போது ஒழியும் காங்கிரசு அரசு எப்போது உருவாகுமென அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிராமங்களில் வாழும் கிழவிகள் கூடப் பொபிலி அரசரின் ஆட்சி எப்போது முடியும் என்று கேட்கிறார்கள்.[33]

சென்னையின் ஆளுனர் எர்ஸ்கைன் பிரபு, இந்தியாவுக்கான செயலர் செட்லாந்து பிரபுவுக்கு பெப்ரவரி 1937 இல் எழுதிய கடிதத்தில் “கடந்த பதினைந்தாண்டுகளில் நடந்துள்ள அனைத்து தவறுகளுக்கும் மக்கள் பொபிலி அரசே காரணம் என்று கருதுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 1937 தேர்தலில் புது வேகத்துடன் களமிறங்கிய காங்கிரசிடம் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. 1937க்குப் பின் சென்னை மாகாண அரசியல் களத்தில் அதன் ஆதிக்கம் அற்றுப்போனது.[18][33]

நீதிக்கட்சியின் இறுதி வீழ்ச்சிக்கு ஆய்வாளர்களால் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன: கட்சி பிரித்தானிய அரசின் ஆதரவாளராகச் செயல்பட்டது, கட்சி உறுப்பினர்களின் மேட்டிமைத்தனம், பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஆதரவை இழந்தது மற்றும் சமூக சீருத்திருத்தவாதிகள் கட்சியை விட்டு விலகிச் சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்தது.[34][35][36] வரலாற்றாளர் பி. ராஜாராமன் “உட்கட்சிப் பூசல்கள், திறமையற்ற ஒருங்கமைப்பு, மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் இன்மை மற்றும் செயலிழந்த நிலையே” கட்சி அழியக் காரணங்களெனக் குறிப்பிடுகிறார்.[18][33]

எதிர்க்கட்சியாக

நீதிக்கட்சி, 1926–30 காலகட்டத்திலும், 1937 முதல் 1944 இல் திராவிடர் கழகமாக மாறும் வரை எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது.

1926–30

1926 சட்டமன்றத் தேர்தலில் சுயாட்சிக் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையை அது எதிர்த்ததால் ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. சென்னை ஆளுனர் ஜார்ஜ் கோஷன் நீதிக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசமைக்க விருப்பமில்லாததாலும் ஆளுனருடன் கருத்து வேறுபாடு நிலவியதாலும் பனகல் அரசர் ஆட்சியமைக்க மறுத்து விட்டார். இதனால் கோஷன் தேசியவாத சுயேட்சை உறுப்பினர்களைக் கொண்டு ப. சுப்பராயன் தலைமையில் ஒரு சுயேட்சை அரசினை உருவாக்கினார். இவ்வரசுக்கு ஆதரவளிக்க 34 உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு நியமித்தார். இவ்வரசை ஆளுனரின் கைப்பாவையரசு என்று வருணித்த நீதிக்கட்சி அதற்கு ஆதரவளிக்க மறுத்து விட்டது. சுயாட்சிக் கட்சியும் நீதிக்கட்சியும் எதிர்க்கட்சிகளாகச் செயல்பட்டன. 1927 இல் இவை இணைந்து சுப்பராயனுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணையால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் சுப்பராயன் அரசு பாதிப் பதவிக்காலத்தைத் தாண்டும் முன்னர் சுப்பாராயன் அரசுக்கு நீதிக்கட்சியின் எதிர்ப்பு ஆதரவாக மாறி விட்டது. சைமன் குழு சென்னைக்கு வருகை தந்தபோது அதனை எதிர்ப்பது குறித்து எழுந்த அரசியல் மாற்றங்களால் நீதிக்கட்சியின் அரசு எதிர்ப்பு, ஆதரவாக மாறியது. பனகல் அரசர் டிசம்பர் 1928 இல் மரணமடைந்த பின்னர் நீதிக்கட்சி இரு குழுக்களாகப் பிரிந்தது. அவர்களில் என். ஜி. ரங்கா தலைமையிலான அமைச்சர் ஆதரவாளர்கள், (Ministerialists) பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையினை நீக்கக் கோரினர்.[18][37] கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் இரு குழுக்களிடையே உடன்படிக்கை ஏற்பட்டு முனுசாமி நாயுடு கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]

1936–44

1937 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின்னால் நீதிக்கட்சி தன் அரசியல் செல்வாக்கை முற்றிலும் இழந்து விட்டது. அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகிய பொபிலி அரசர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று விட்டார்.[38] சி. ராஜகோபாலாச்சாரியின் தலைமையில் அமைந்த புதிய காங்கிரசு அரசு பள்ளிகளில் கட்டாய இந்திக் கல்வியை அறிமுகப்படுத்தியது. சர் ஏ. டி. பன்னீர்செல்வம் தலைமையில் நீதிக்கட்சி, பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து இம்முயற்சியை எதிர்த்தது. பன்னீர்செல்வம் 1937 தேர்தலில் வெற்றிபெற்ற வெகுசில நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக நீதிக்கட்சி ஈ. வே. ராமசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பொபிலி அரசரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஈ. வே. ராமசாமி டிசம்பர் 29, 1938 இல் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் காங்கிரசு உறுப்பினராக இருந்த பெரியார் பல ஆண்டுகளாக நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.[39] 1925 இல் காங்கிரசு பார்ப்பனீயத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறிச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கம் பெரும்பாலும் காங்கிரசையும் சுயாட்சிக் கட்சியினையும் எதிர்த்து நீதிக்கட்சிக்கு ஆதரவாகப் செயல்பட்டது. 1926 மற்றும் 30 தேர்தல்களில் நீதிக்கட்சி வேட்பாளர்களுக்காகப் பெரியார் பிரச்சாரம் மேற்கொண்டார். 1930களின் ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார். ஜூலை 1934 இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டது; இதன் பின்னால் மீண்டும் நீதிக்கட்சி ஆதரவாளரானார்.[18][40] சரிந்திருந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் மீண்டது. அக்டோபர் 29, 1939 அன்று ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசு பதவி விலகியது. இந்திய மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் பிரிட்டன் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியதே இந்தப் பதவி விலகலுக்குக் காரணம். சென்னை மாகாணம் ஆளுனரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பெப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் எர்ஸ்கைன் கட்டாய இந்திக் கல்வி ஆணையைத் திரும்பப்பெற்றார்.[41]

ஈ. வே. ராமசாமியின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி திராவிட நாடு கோரும் பிரிவினைக் கொள்கையினை முன் வைத்தது. கட்சியின் 14வது வருடாந்திர மாநாட்டில் பிரித்தானிய அரசின் இந்தியச் செயலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தமிழருக்கெனத் தனி நாடு உருவாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[42] 1939 இல் பெரியார் “தனி இறையாண்மையுடைய கூட்டாட்சிக் குடியரசாக” திராவிட நாடு உருவாக வேண்டுமென்று திராவிட நாடு மாநாடொன்றைக் கூட்டினார். 1938 முதல் “தமிழருக்கெனத் தனித் தமிழ்நாடு” கோரி வந்த அவர், டிசம்பர் 17, 1939 இல் “திராவிடருக்கெனத் தனி திராவிட நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.[43] ஆகஸ்ட் 1940 இல் நடைபெற்ற கட்சியின் 15வது வருடாந்திர மாநாட்டிலும் தனி திராவிட நாடுக் கொள்கை முன்வைக்கப்பட்டது.[44][45] பிரித்தானிய அரசின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் ஆகஸ்ட் 10, 1941 இல் ஈ. வே. ராமசாமி திராவிடநாடு போராட்டத்தைக் கைவிட்டார். கிரிப்சின் தூதுக்குழு இந்தியா வந்தபோது, ராமசாமி, டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார், என். ஆர். சாமியப்ப முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு மார்ச் 30, 1942 இல் கிரிப்சை சந்தித்து திராவிட நாடு கோரியது. ஆனால் கிரிப்சு ஒரு சட்டமன்றத் தீர்மானம் அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாக மட்டுமே பிரிவினை சாத்தியம் என்று கூறி விட்டார்.[46][47] இக்காலகட்டத்தில் இரு முறை (1940 மற்றும் 42 இல்) ஈ. வே. ராமசாமி தலைமையில் காங்கிரசு ஆதரவுடன் நீதிக்கட்சி அரசு அமைய வாய்ப்பு உருவானது. ஆனால் இரு முறையும் ராமசாமி அரசமைக்க மறுத்துவிட்டார்.[48]

திராவிடர் கழகமாக மாற்றம்

பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியினைத் தேர்தல் அரசியலிலிருந்து விலக்கிக் கொண்டார். அவரது தலைமையில் அது சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டும் செயல்பட்டது. “சமூக சுயமரியாதையை அடைந்து விட்டால், அரசியல் சுய மரியாதைத் தானாகக் கிட்டி விடும்” என்பது அவரது வாதமாக இருந்தது.[48] பெரியாரின் ஆதிக்கத்தால் நீதிக்கட்சி பிராமண எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு மற்றும் இறைமறுப்பு கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. 1942–44 காலகட்டத்தில் இந்து சமய நூல்களான பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் நீதிக்கட்சியினர் கடுமையாகச் சாடினர். இதனால் இந்தி எதிர்ப்புக்காக நீதிக்கட்சியுடன் கைகோர்த்திருந்த சைவத் தமிழறிஞர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதுவரை மாணவர்களிடையே பெரிதாகச் செல்வாக்கு பெற்றிராத நீதிக்கட்சி கா. ந. அண்ணாதுரையின் முயற்சிகளால் மாணவர் ஆதரவைப் பெறலாயிற்று.[49][50]

ஆனால் ஈ. வே. ராமசாமியின் தலைமையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத சில தலைவர்கள் கட்சியில் ஒரு போட்டிக் குழுவை உருவாக்கி அவரைத் தலைவர் பதவியிலிருந்து இறக்க முயன்றனர். இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தோர் - பி. பாலசுப்பிரமணியன் (சண்டே அப்சேர்வர் இதழின் ஆசிரியர்), ஆர். கே. சண்முகம் செட்டியார், பி. டி. ராஜன், ஏ. பி. பாட்ரோ, சி. எல். நரசிம்ம முதலியார், தாமோதரன் நாயுடு மற்றும் கே. சி. சுப்ரமணிய செட்டியார். பெரியார் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுக்களிடையே பலப்பரீட்சை மூண்டது. டிசம்பர் 27, 1943 இல் கட்சியின் செயற்குழுவைக் கூட்டிய பெரியார் எதிர்ப்பு குழு 1940 க்குப் பின் அவர் கட்சி மாநாட்டை நடத்துவதில்லையென்று குற்றம் சாட்டியது. அவர்களது விமர்சனத்தை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி கட்சியின் வருடாந்திர மாநாட்டைக் கூட்டினார்.[51]

ஆகஸ்ட் 27, 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பதினாறாவது வருடாந்திர மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டி வெற்றி பெற்றது. இதற்கு ஒரு வாரம் முன்னர் (ஆகஸ்ட் 20 இல்) பெரியார் எதிர்ப்பு கோஷ்டியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாதவை என்றும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும் அறிவித்தனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் ஈ. வே. ராமசாமி கட்சியின் விதிமுறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல; அதனால் அவருக்குத் தீர்மானங்களை நிறைவேற்ற அதிகாரமில்லை என்பதே. ஆனால் சேலம் மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டியினருக்கு வெகுவான ஆதரவு கிட்டி அவர்கள் வெற்றி பெற்றனர்.[52] அம்மாநாட்டில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • கட்சி உறுப்பினர்கள் பிரித்தானிய அரசு அளித்த விருதுகளையும், பதவிகளையும் ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும்
  • அவர்கள் தங்களது அரசு பதவிகளிலிருந்து விலக வேண்டும்
  • அவர்கள் தங்கள் பெயர்களில் உள்ள சாதிப்பின்னொட்டுகளைக் களைய வேண்டும்
  • நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று அழைக்கப்படும்.

இத்தீர்மானங்கள் நிறைவேற முக்கியக் காரணமாக இருந்த அண்ணாதுரை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரானார். நீதிக்கட்சியின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலானோர் திராவிடர் கழகத்தில் இணைந்து விட்டனர்.[53][54] பி. டி. ராஜன், மணப்பாறை திருமலைசாமி, பி. பாலசுப்பிரமணியன் போன்றோர் இம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் முதலில் பி. ராமச்சந்திர ரெட்டி தலைமையிலும் பின் பி. டி. ராஜன் தலைமையிலும் செயல்பட்டனர். உண்மையான “நீதிக்கட்சி” தாங்கள் தான் என்றும் அறிவித்தனர்.[38] 1952 சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. அதன் வேட்பாளர்களில் பி. டி. இராஜன் மட்டும் வெற்றி பெற்றார்.[55] இந்தக் கட்சி அதன் பின்னால் எந்தத் தேர்தல்களிலும் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிடவில்லை. 1968 இல் தனது பொன்விழா ஆண்டைச் சென்னையில் கொண்டாடிய இக்கட்சி பி. டி. ராஜனின் மரணத்துக்குப் பின்னர் முற்றிலும் செயலற்றுப் போனது.[56]

தேர்தல்களில் நீதிக்கட்சி

தேர்தல்மொத்த இடங்கள்[57]வென்ற இடங்கள்நியமன இடங்கள்[58]நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்முடிவுகட்சித் தலைவர்
192098632918வெற்றிதியாகராய செட்டி
192398442917வெற்றிதியாகராய செட்டி
19269821340தோல்விபனகல் அரசர்
1930983534வெற்றிபி. முனுசாமி நாயுடு
19349834தோல்வி[59]பொபிலி அரசர்
193721518467தோல்விபொபிலி அரசர்
1939–1946தேர்தல்கள் நடைபெறவில்லைஈ. வே. ராமசாமி
19462150460பங்கேற்கவில்லைபி. டி. ராஜன்
1952375[60]1தோல்விபி. டி. ராஜன்

கட்சி அமைப்பு

நீதிக்கட்சி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு முறையான சட்ட அமைப்பின்றி செயல்பட்டது. அக்டோபர் 18, 1917 இல் தி இந்து நாளிதழில் வெளியான அதன் கொள்கை அறிக்கையே கட்சியின் சட்டதிட்டங்களைப் பட்டியிலிட்ட ஒரே ஆவணம். அக்டோபர் 1917 இல் கட்சியின் நிருவாகிகள் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆற்காடு ராமசாமி முதலியார் கட்சியின் முதல் பொதுச்செயலராகப் பணியாற்றினார். 1920 இல் கட்சியின் சட்ட அமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியது. டிசம்பர் 19, 1925 இல் கட்சியின் 9வது வருடாந்திர மாநாட்டின்போது அதிகாரப்பூர்வமாக அதன் சட்ட அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.[13][61]

சென்னை நகரம் நீதிக்கட்சியின் செயல்பாடுகளின் மையமாக இருந்தது. மவுண்ட் சாலையில் அமைந்திருந்த கட்சியின் தலைமையகத்தில் கட்சிக் கூட்டங்கள் நடைபெற்றன. இவ்வலுவலகத்தைத் தவிர சென்னையில் வேறுபல கிளை அலுவலகங்களும் திறக்கப்பட்டன. 1917 இல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. சென்னையைத் தளமாகக் கொண்ட தலைவர்கள் அவற்றுக்கு அவ்வப்போது போய் வந்தனர். நீதிக்கட்சிக்கு ஒரு தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் 25 செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர். 1920 தேர்தலுக்குப் பின்னர் ஐரோப்பிய அரசியல் கட்சிகளைப் போன்று செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தலைமைக் குறடா நியமிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்சி சட்ட அமைப்பின் 6வது பிரிவின் படி கட்சித் தலைவரே அனைத்து பிராமணரல்லாதோர் அமைப்புகள் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தன்னிகரற்ற தலைவராக இருந்தார். பிரிவு 14, உறுப்பினர்கள் மற்றும் செயற்குழுவின் பொறுப்புகளை வரையறுத்ததோடு செயற்குழு முடிவுகளைச் செயலாக்கும் பொறுப்பைப் பொதுச் செயலாளருக்கு அளித்தது. 21வது பிரிவு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநில மாநாடு கூட்டப்பட வேண்டுமென்றது. ஆனால் கட்சி செயல்பட்ட 27 ஆண்டுகளில் 16 வருடாந்திர மாநாடுகளே கூட்டப்பட்டன.[13][61]

கட்சித் தலைவர்களின் பட்டியல்:[13][61]

தலைவர்பதவி துவக்கம்பதவி முடிவு
தியாகராய செட்டி1917ஜூன் 23, 1925
பனகல் அரசர்1925டிசம்பர் 16, 1928
பி. முனுசாமி நாயுடுஆகஸ்ட் 6, 1929அக்டோபர் 11, 1932
பொபிலி அரசர்அக்டோபர் 11, 1932டிசம்பர் 29, 1938
ஈ. வே. ராமசாமிடிசம்பர் 29, 193827 ஆகஸ்ட் 1944
பி. ராமசந்திர ரெட்டி19441945
பி. டி. ராஜன்1945????

சாதனைகள்

சட்டவாக்கச் சாதனைகள்

மார்ச் 19, 1923 இல் வெளியான ஒரு கேலிப்படம். முதல் நீதிக்கட்சி அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுகிறது. மதுவிலக்கு, ஆந்திரப் பல்கலைக்கழகம், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில் துறை வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை மக்களின் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் என்று குறிப்பிடுகிறது.

நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது நிறைவேற்றிய பல சட்டங்கள் நீடித்த தாக்கம் கொண்டிருந்தன. அவற்றுள் சில தற்காலம் வரை நடைமுறையில் உள்ளன. செப்டம்பர் 16, 1921 இல் நீதிக்கட்சி அரசு முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை (# 613) வெளியிட்டதன் மூலம் இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர் சாதிவாரியான இட ஒதுக்கீடு பொதுவான ஒன்றாகிவிட்டது.[62][63][64]

டிசம்பர் 18, 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு 1925 இல் நிறைவேற்றப்பட்ட சென்னை இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பல இந்துக் கோவில்களை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இச்சட்டமே சென்னை மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் இயற்றப்பட்டுள்ள பல இந்து அறநிலைய மற்றும் அறக்கட்டளை சட்டங்களுக்கு முன்னோடியாகும். தற்கால தமிழ்நாடு அரசு கொள்கையும் இதைப் பின்பற்றியே அமைந்துள்ளது.[64][65] 1919 இந்திய அரசுச் சட்டம், பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. முதல் நீதிக்கட்சி அரசு ஏப்ரல் 1, 1921 இல் இத்தடையை விலக்கியது. தேர்தலில் வாக்களிக்கவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பாலின அடிப்படையில் அமைந்த தகுதிகள் நீக்கப்பட்டன. இதன் மூலம் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி 1926 இல் சென்னை சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்படுவதற்கு வழி வகுத்தது. இந்திய சட்டமன்றங்களில் ஒரு பெண் உறுப்பினராவது இதுவே முதல் முறை. இவை தவிர 1922 இல் சட்டமன்றத்தில் பட்டியல் பிரிவினரைக் குறிக்க “பஞ்சமர்” மற்றும் “பறையர்” போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாதென்றும் ”ஆதி திராவிடர்” என்ற பெயரையே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் நீதிக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.[64]

நீதிக்கட்சி கொண்டு வந்த சென்னை தொடக்கக் கல்வி சட்டம், 1920 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது; தொடக்கக் கல்விக்கு நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்தது. குழந்தைகளைப் பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொள்ளும் பெற்றோரைத் தண்டிக்கவும் வழிவகுத்தது. 1934 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் இச்சட்டம் திருத்தப்பட்டது. சென்னைப் பலகலைக்கழகச் சட்டம், 1923 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் குழுவை விரிவு படுத்தியதுடன் அதில் பல்வேறு தரப்பினர் இடம்பெறவும் வழிவகுத்தது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். 1922 இல் இயற்றப்பட்டு 1935 இல் திருத்தப்பட்ட, தொழிற்சாலைகளுக்கு அரசு உதவிச் சட்டம், தொழிற்சாலைகளைத் தொடங்க கடனுதவி வழங்கியது. மலபார் குத்தகைச் சட்டம், 1931 குத்தகைக்காரர்களின் உரிமைகளை வலுப்படுத்தியது.[64]

பல்கலைக்கழகங்கள்

நீதிக்கட்சியின் தமிழ் மற்றும் தெலுங்கு உறுப்பினர்களிடையே நிலவிய போட்டி இரு பல்கலைக்கழகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. கட்சி துவக்கப்பட்ட நாட்களிலிருந்து நிலவிய இப்போட்டி முதல் நீதிக்கட்சி அரசில் தெலுங்கு உறுப்பினர்கள் மட்டும் அமைச்சர்களானதால் மேலும் அதிகமானது. ஆந்திரப் பல்கலைக்கழகம் அமைக்க நீண்ட நாட்களாகத் தெலுங்கு தலைவர்கள் கொண்டா வெங்கடபய்யா மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகியோர் வேண்டி வந்தனர். 1921 இல் நீதிக்கட்சி அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற ஒரு முன்மொழிவைத் தயார் செய்தது. சி. நடேச முதலியார் இதனை எதிர்த்தார். ஆந்திரம் / ஆந்திரப் பலகலைக்கழகம் ஆகியவற்றை வரையறுப்பது கடினமெனத் தமிழ் உறுப்பினர் வாதிட்டனர். அதிருப்தி கொண்டிருந்த ஜே. என். ராமநாதன், ராமநாதபுர அரசர் ராஜேசுவர சேதுபதி ஆகியோரை திருப்திப்படுத்த தியாகராய செட்டி தமிழரான டி. என். சிவஞானம் பிள்ளையை அமைச்சராக்கினார். இதற்குப் பிரதிபலனாக ஆந்திரப் பல்கலைக்கழக சட்டம் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் நவம்பர் 6, 1925 இல் நிறைவேற்றப்பட்டது. 1926 இல் ஆந்திரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு சி. ஆர். ரெட்டி அதன் முதல் துணை வேந்தரானார். இதனால் தமிழர்களுக்காகத் தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. சென்னைப் பல்கலைக்கழகம் பிராமணர் ஆதிக்கத்தில் இருப்பதால் பிராமணரல்லாதோருக்கு அங்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மார்ச் 22, 1926 இல் சிவஞானம் பிள்ளையின் தலைமையில் தமிழ் பல்கலைக்கழகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பலனாக 1929 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்குப் பெரிய தொகை ஒன்றை உதவித்தொகையாக வழங்கிய அண்ணாமலை செட்டியாரின் பெயர் இடப்பட்டது.[66][67]

கட்டமைப்பு

1921 இல் சென்னையின் நிலப்படம் (நெடுங்குளம் நிலமாக்கப்படவில்லை)
1955 இல் சென்னையின் நிலப்படம், தி. நகர் உருவான பின்

நீதிக்கட்சியின் இரண்டாவது முதல்வர் பனகல் அரசரின் ஆட்சி காலத்தில் சென்னை நகரின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாகத் தற்போதைய தியாகராய நகர் பகுதி உருவாக்கப்பட்டது. பனகல் அரசரின் அரசு நகரின் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்குப் போதிய குடியிருப்பு வசதிகள் செய்து தரச் செப்டம்பர் 7, 1920 அன்று சென்னை நகரத் திட்டச் சட்டத்தை நிறைவேற்றியது.[68]

5 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் உடைய நெடுங்குளம் என்ற நீர்நிலை அக்காலத்தில் நகரத்தின் மேற்கு எல்லையில் நுங்கம்பாக்கம் முதல் சைதாப்பேட்டை வரை நீண்டிருந்தது. 1923 இல் இந்நீர்நிலை நீரகற்றப்பட்டு மேடாக்கப்பட்டது.[69] 1911 இல் நெடுங்குளத்துக்கு மேற்கே பிரித்தானிய அரசு மாம்பலம் கிராமத்தில் ஒரு தொடருந்து நிலையத்தைக் கட்டியிருந்தது. பனகல் அரசர் 1923 இல் அதன் அருகே ஒரு குடியிருப்புப் பகுதியை உருவாக்கினார். அதற்குத் தியாகராய செட்டியின் நினைவாக “தியாகராய நகர்” (அல்லது தி. நகர்) என்று பெயரிட்டார்.[69] பனகல் பூங்கா என்ற பூங்காவைச் சுற்றி தி. நகர் அமைக்கப்பட்டது.[69]இப்புதிய பகுதியின் சாலைகளுக்கும் பிற பகுதிகளுக்கும் நீதிக்கட்சி பிரமுகர்களின் பெயர்கள் இடப்பட்டன. (கான் பகதூர் முஹம்மது உஸ்மான், முகமது ஹபிபுல்லா, ஓ. தணிகாசலம் செட்டியார், நடேச முதலியார், டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் ஆகியோர் இதில் அடக்கம்).[69][70][71]

நீதிக்கட்சி அரசுகள் பல குடிசை மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளையும். பொதுக் குளியலிடங்களையும் கட்டின. 1924 இல் ஆயுர்வேதம், சித்த, யுனானி மருத்தவ முறைகளை ஆராய்ந்து பரப்ப இந்திய மருத்தவப் பள்ளியை நீதிக்கட்சி அரசு நிறுவியது.[64][72]

அரசியல் தாக்கம்

நீதிக்கட்சி சென்னை மாகாணத்தின் முன்னணி பிராமணரல்லாதோர் அரசியல் அமைப்பாகச் செயல்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி முதலே பிராமணரல்லாதோர் இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் நீதிக்கட்சியே முதல் பிராமணரல்லாதோர் அரசியல் இயக்கமாகும். இரட்டை ஆட்சி முறையின்போது அது நிருவாகத்தில் பங்கேற்றமை சென்னை மாகாணத்தின் படித்த மேட்டுக்குடி மக்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் 1967 முதல் தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தற்கால திராவிட கட்சிகளின் அரசியல் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.[7][8][18]

சர்ச்சைகள்

பிராமணர்குறித்த நிலைப்பாடு

பிராமணரல்லாதோருக்கான அரசியல் அமைப்பாகவே நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் அது பிராமணர்கள் உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. ஆனால் ஐரோப்பியர் போன்ற பிற வகுப்பினர்களைப் போலவே பிராமணர்களும் பார்வையாளர்களாகக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.[73] 1926 தேர்தல் தோல்விக்குப் பின்னர் இக்கொள்கையைக் கைவிட்டு அனைத்து தரப்பினரையும் கட்சி அனுமதிக்க வேண்டும் என்றும் தேசியவாத நிலையை எடுக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் இக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு (குறிப்பாக ஈ. வே. ராமசாமியின் ஆதரவாளர்களிடமிருந்து) இருந்தது. 1929 இல் நடைபெற்ற ஒரு மும்முனைக் கூட்டத்தில் (நீதிக்கட்சி மற்றுமிரு காங்கிரசல்லாத குழுக்கள்) பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையை நீக்க ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது. அக்டோபர் 1929 இல் நெல்லூரில் நடைபெற்ற கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் கட்சி செயற்குழு இதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது.[37] அதனை ஆதரித்து முனுசாமி நாயுடு பின்வருமாறு பேசினார்:

ஒரு குறிப்பிட்ட சாதியினரை நாம் தடை செய்யும் வரை, மாகாணத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளாக நாம் நம்மைக் கருத முடியாது. நாம் எதிர்பார்ப்பது போல அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு மாகாணங்களுக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டால், நாம் அனைத்து சாதிகளுக்காகப் பேசும் அமைப்பாக மாறும் நிலையில் இருக்க வேண்டும். நமது அமைப்பின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பிராமணரகளை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம்?. ஒரு வேளை நாம் தடையை நீக்கினாலும் கூடப் பிராமணர்கள் நம் அமைப்பில் சேராது போகலாம். ஆனால் அதற்குபின் நாம் அவர்களைச் சேர விடாது செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு இராது.[37]

முன்னாள் கல்வி அமைச்சர் ஏ. பி. பாட்ரோ நாயுடுவின் கருத்தை ஆதரித்தார். ஆனால் இத்தீர்மானம் ஈ. வே. ராமசாமியாலும் ஆர். கே. சண்முகம் செட்டியாராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் தோல்வியடைந்தது. பிராமணர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பதை எதிர்த்துப் பேசிய ராமசாமி:

பிராமணர்களது செயல்பாட்டால் கோபம் கொண்ட பிராமணரல்லாதோர் அதிக அளவில் மெல்ல நீதிக்கட்சியின் பக்கம் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் பிராமணர்களைக் கட்சி உறுப்பினர்களாக அனுமதிப்பது முட்டாள்தனம்.[37]

என்றார். அக்டோபர் 1934 வரை நீதிக்கட்சியில் பிராமணர் உறுப்பினராக இருந்த தடை நீடித்தது.[40] நீதிக்கட்சியுடன் போட்டியிட வேண்டிய தேவையால் காங்கிரசு கட்சி தனது அதிகாரக் கட்டமைப்பில் பல பிராமணரல்லாதோருக்கு இடமளிக்க வேண்டியதாயிற்று. நீதிக்கட்சியின் செயல்பாடுகள் நடப்பில் இருந்த சமூக அடுக்கமைப்பைக் குலைத்ததுடன் பிராமணர் - பிராமணரல்லாதோர் இடையே நிலவிய வெறுப்பினை அதிகரித்தது.[8]

தேசியவாதம்

நீதிக்கட்சி பிரித்தானியப் பேரரசுக்கு விசுவாசமாக இருந்தது. தனது ஆரம்ப நாட்களில் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்தது. இந்தியாவின் நடுவண் நாடாளுமன்றத்துக்கும் உறுப்பினர்களை அனுப்பவில்லை. 1916–20 காலகட்டத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு பெற்று அரசியல் முறையில் பங்கேற்பதில் தனது கவனத்தை செலுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தின்போது மெட்ராஸ் மெயில் போன்ற ஐரோப்பிய ஆதரவு இதழ்களுடன் இணைந்து காந்தியையும் தேசியவாதிகளையும் எதிர்த்தும் சாடியும் வந்தது.[15][61]

ஆனால 1920 களின் நடுப்பகுதியில் தேசியவாதக் கொள்கைகளைத் தனதாக்கத் தொடங்கியது. காதி மற்றும் சுதேசி இயக்கங்களுக்கு முன் காட்டிய எதிர்ப்பைக் கைவிட்டு ஆதரவளிக்கத் தொடங்கியது. 1925 இல் கட்சி வருடாந்திர மாநாட்டில் உள்ளூர் தொழிற் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் இயற்றியது. இந்த மாற்றம் சென்னை மாகாணத்தில் அதிகரித்து வந்த சுயாட்சி மற்றும் காங்கிரசு கட்சிகளின் செல்வாக்குடன் போட்டி போட நீதிக்கட்சிக்கு உதவியது.[74] ”சுயாட்சி” என்ற சொல் நீதிக்கட்சியின் சட்ட அமைப்பிலும் சேர்க்கப்பட்டது. கட்சியின் சென்னைப் பிரிவு சி. ஆர். ரெட்டியால் இம்மாற்றம் ஏற்பட்டது. நீதிக்கட்சியைப் பொறுத்தவரை சுயாட்சி என்பது முழு விடுதலை அல்ல; பிரித்தானிய மேற்பார்வையின் கீழ் பகுதி தன்னாட்சி உரிமை பெறுவதே. அதன் சட்ட அமைப்பில் “ அமைதியான சட்டத்துக்கு உட்பட்ட முறையில் முயன்று விரைவில் பிரித்தானியப் பேரரசின் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு தன்னாட்சி பெற [முயல வேண்டும்]” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜாலியன்வாலா பாக் படுகொலையை நீதிக்கட்சி கண்டித்ததா என்பது பற்றித் தெளிவான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. வரலாற்றாளர்களிடையே இதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[13][19][75] தேசியவாதக் கொள்கையை நோக்கி 1920 களில் தொடங்கிய கட்சியின் பயணம் 1930 களில் முனுசாமி நாயுடு மற்றும் பொபிலி அரசரின் தலைமையில் தடைபட்டது. சட்டமறுப்பு இயக்கத்தின்போது பிரித்தானிய அரசின் கடுமையான நடவடிக்கைகளை நீதிக்கட்சி அரசுகள் கண்டிக்கவில்லை.[33] ஆனால் நாடெங்கும் தேசியவாத உணர்ச்சிகள் மிகுந்ததால் காங்கிரசு உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கண்டபின்னால் 1934 இல் மீண்டும் நீதிக்கட்சி தேசியவாதக் கொள்கைகளைக் கையில் எடுத்தது. காங்கிரசின் செல்வாக்கை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் உதவியை நாடியது. 1930களில் நீதிக்கட்சியிலிருந்து தூரச் சென்ற ராமசாமி, அக்கட்சி தனது சோசலிசக் கருத்துகள் நிறைந்த ஈரோட்டு செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்டவுடன் மீண்டும் அதனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இப்புதிய திட்டத்தில் மதுவிலக்கு போன்ற காங்கிரசின் கொள்கைகளும் இடம் பெற்றிருந்தன.[31]

பட்டியல் பிரிவினர் மற்றும் முசுலிம்களின் ஆதரவிழப்பு

1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனிற்காகச் செயல்படுவதாகக் கூறினாலும் மெல்ல பல சமூகத்தினரின் ஆதரவை இழந்தது. தியாகராய செட்டி மற்றும் பனகல் அரசரின் தலைமையின் கீழ் பிராமணரல்லாத சில உயர் சாதியினரின் கட்சியாக மாறியது; பட்டியல் பிரிவினர் மற்றும் முசுலிம்கள் கட்சியை விட்டு விலகினர். முதல் நீதிக்கட்சி அரசினை முசுலிம் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் ஆதரித்தனர் ஆனால் பதவி வழங்கல்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர்.[76] முசுலிம்களின் அதிருப்தி முசுலிம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி கானின் பின்வரும் கூற்றால் (1923) விளங்கும்:

எனது அனுபவத்தில் பதவி வழங்கும் தருணங்களில் எல்லாம் அவர்கள் [நீதிக்கட்சியினர்] ஒரு முதலியார், நாயுடு, செட்டியார் அல்லது பிள்ளை சமூகத்தினரையே தெரிவு செய்கிறார்கள். ஒரு இசுலாமியரைத் தேர்வு செய்வதில்லை.[76]

இழந்த முசுலிம் ஆதரவை நீதிக்கட்சியால் பின் எப்போதும் திரும்பப் பெற இயலவில்லை. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் கிட்டிய இடங்களில் பெரும்பான்மையை உயர் சாதி இந்துக்களே பிடித்துக் கொண்டதே இதற்குக் காரணம்.[77]

பட்டியல் மக்களுடனான பிரிவும் இக்காலகட்டத்தில் தான் நடந்தது. டி. எம். நாயரின் மரணத்துக்குக் பின் பட்டியல் பிரிவினர் நீதிக்கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர். புளியந்தோப்பு கலவரங்கள் (பி அன் சி தொழிற்சாலை வேலை நிறுத்தம்) பிராமணரல்லாத சாதிகளான வெள்ளாளர்கள், பெரி செட்டியார்கள், பலிஜா நாயுடுகள் கம்மா மற்றும் காப்புகள் ஆகியோருக்கும் ஆதி திராவிடர்களுக்கும் இடையேயான உறவு கசக்கக் காரணமாக அமைந்தன. மே 11, 1921 இல் கர்னாடிக் நெசவு ஆலையில் வேலை செய்து வந்த ஆதி திராவிடர்களும் சாதி இந்துகளும் வேலை நிறுத்ததைத் தொடங்கினர். ஜூன் 20 ம் தேதி பங்கிங்காம் ஆலை தொழிலாளர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் நிருவாகம் ஆதி திராவிட தொழிலாளர்களை விரைவில் சமாதானப் படுத்தியதால் அவர்கள் வேலைக்குத் திரும்பினர்.சாதி இந்துக்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால் இரு பிரிவினர் இடையே பகை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சாதி இந்துக்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். நீதிக்கட்சித் தலைவர்கள் பிரித்தானிய அரசு ஆதி திராவிடர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினர்.[19] ஜஸ்டிஸ் இதழ் பின்வருமாறு எழுதியது:

இவ்வளவு மோசமான நிலை உருவாகக் காரணம் தொழில் துறை அரசு அலுவலர்கள் ஆதி திராவிடர்களுக்கு அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்ததும் சில காவல்துறை அதிகாரிகள் தங்களை அறியாமலே ஆதி திராவிடர்களை ஊக்குவிப்பதும் தான் எனப் பொது மக்கள் கருதுகின்றனர்.[19]

அக்டோபர் 12 இல் ஓ. தணிகாசல செட்டி இந்தப் பிரச்சனையைச் சென்னை சட்டமன்றத்தில் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்களுக்கும் சென்னை ஆளுனரின் நிருவாகக் குழுவின் சட்டத் துறை உறுப்பினரான எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற பிராமணர் மற்றும் உள்துறை உறுப்பினரான லயனல் டேவிட்சன் என்ற ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு காரசாரமான விவாதம் நடந்தது. டேவிட்சன் இவ்விவகாரத்துக்கான மொத்த பொறுப்பும் தொழில் துறை அமைச்சகத்தையே சாரும் என்று குற்றம் சாட்டினார். “இது வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்குமிடையே நடக்கும் ஒரு தொழிற் பிரச்சனை மட்டுமல்ல. இரு கோஷ்டிகளுக்கிடையே சாதிக் காழ்ப்புணர்வால் நடந்த மோதல்” என்று டேவிட்சன் கூறினார். சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களின் பிரதிநிதியான எம். சி. ராஜா டேவிட்சனின் கூற்றை ஆமோதித்தார். மெட்ராஸ் மெயில் இதழில் ஒரு ஆதி திராவிட வாசகர் முன்பு டி. எம். நாயர் பிராமணர்களைக் கண்டித்த அதே பாணியில் நீதிக்கட்சியைக் கண்டித்தார். புளியந்தோப்பு சம்பவங்கள் நடந்து சில காலத்தில் ராஜாவும் ஆதி திராவிடர்களும் நீதிக்கட்சியை விட்டு விலகினர்.[19][78]

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நீதிக்_கட்சி&oldid=3933212" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்