தடிமன்

சாதாரண தடிமன் என்பது பெரும்பாலும் மேற்புற சுவாசப்பாதைக் கட்டமைப்பில் எளிதாகப் பரவும் ஒரு தொற்றக்கூடிய நோய் ஆகும். நோயறிகுறிகளில் அடங்குபவை இருமல், கரகரப்பான தொண்டை, மூக்கில் நீர் வடிதல் (ரினோர்ரியா), மற்றும் காய்ச்சல் ஆகியவை. நோயறிகுறிகள் வழக்கமாக ஏழிலிருந்து பத்து நாட்களில் மறைந்துவிடும். எனினும் சில நோயறிகுறிகள் மூன்று வாரங்கள் வரை நீடிக்கலாம். இருநூறுக்கும் மேற்பட்ட நுண்ணங்கிகள் சாதாரண தடிமனை உண்டாக்கலாம். மிகப் பொதுவான காரணமாக இருப்பது (இருப்பவை) தடிமன் நச்சுயிரி(கள்) ஆகும்.

சாதாரண தடிமன்
மானிட தடிமன் நச்சுயிரியின் இழைய மேற்பரப்பு.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகுடும்ப மருத்துவர், infectious diseases, otolaryngology
ஐ.சி.டி.-10J00.0
ஐ.சி.டி.-9460
நோய்களின் தரவுத்தளம்31088
மெரிசின்பிளசு000678
ஈமெடிசின்med/2339
பேசியண்ட் ஐ.இதடிமன்
ம.பா.தD003139

பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ள உடலின் பாகங்களாகிய மூக்கு, மூக்குத்துவாரங்கள், தொண்டை அல்லது குரல்வளை (மேற்புறச் சுவாசப்பாதைத் தொற்று (URI அல்லது URTI)) ஆகியவற்றின் மீதான தீவிரமான தொற்றுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. சாதாரண தடிமன் முக்கியமாக மூக்கு, தொண்டை அழற்சி- தொண்டை, பீனிசம் ஆகியவற்றை பாதிக்கின்றன. நச்சுயிரிகள் தமக்குத்தாமே திசுக்களை அழிப்பதைக் காட்டிலும், தொற்றுக்கு நோய்த்தடுப்புக்கட்டமைப்பின் செவிசாய்ப்பே நோயறிகுறிகளுக்கு காரணமாகின்றன. தொற்றினை முன்தடுப்பதற்கு கைகழுவுவதே முதன்மையான வழிமுறையாகும்.மு கக்கவசம் அணிவதன் வினைத்திறனை சில ஆதாரங்கள் நிறுவுகின்றன.

சாதாரண தடிமனுக்கு நிவாரணம் ஏதும் இல்லை, ஆனாலும் நோயறிகுறிகள் சிகிச்சையளிக்கப்படலாம். மனிதர்களில் மிக அடிக்கடி தொற்றக்கூடிய நோய் இதுவேயாகும். வயது வந்த சராசரி மனிதருக்கு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடிமன் பிடிக்கின்றது. சராசரி குழந்தைக்கு வருடத்தில் ஆறிலிருந்து பன்னிரண்டு முறை தடிமன் பிடிக்கின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இத்தொற்றுக்கள் மானிடரில் இருந்து வந்துள்ளன.

அறிகுறிகள் மற்றும் நோயறிகுறிகள்

தடிமனின் மிகப்பொதுவான நோயறிகுறிகளில் இருமல், மூக்கில் ஒழுகுதல், மூக்கடைப்பு மற்றும் கரகரப்பான தொண்டை என்பன உள்ளடங்கும். நோயறிகுறிகளில் தசைவலி, சோர்வாக உணர்தல், தலைவலி மற்றும் பசியின்மை அடங்கும்.[1] தொண்டைக் கரகரப்பு சுமாராக 40% பேரில் இருக்கிறது. இருமல் சுமாராக 50% பேரில் இருக்கிறது.[2] சுமார் பாதிப் பேருக்குத் தசைவலி நேர்கிறது.[3] காய்ச்சல் பெரியவர்களிடம் சாதாரணமாக இருப்பதில்லை என்றாலும் சிசுக்கள் மற்றும் சிறுவர்களிடையே சாதாரணமாக இருக்கின்றது.[3] தடிமனால் உண்டாகும் இருமலானது, காய்ச்சலால் ஏற்படும் இருமலைக் காட்டிலும் மிதமாகவே இருக்கிறது (சளிக்காய்ச்சல்).[3] இருமலுடன் சேர்ந்த காய்ச்சல் பெரியவர்களிடையே சளிக்காய்ச்சலுக்கான சாத்தியத்தைக் காட்டுகிறது.[4] சாதாரண தடிமனை உண்டாக்கும் பல நுண்ணங்கிகள் எந்த நோயறிகுறிகளையும் காட்டுவதில்லை.[5][6] சுவாசப்பாதையின் (சளி) அடிப்புறத்தில் இருந்து இருமுவதினால் வரும் கோழையின் நிறமானது, நிறமில்லாததில் இருந்து மஞ்சள் மற்றும் பச்சை என மாறுபடும். தொற்று ஒரு பற்றீரியாவினாலா அல்லது நுண்ணங்கியினாலா என்பதைக் கோழையின் நிறம் காட்டுவதில்லை.[7]

வளர்ச்சி

சோர்வடைதலில் துவங்கி, குளிர்தல், தும்முதல் மற்றும் தலைவலியுடன் தடிமன் பீடிக்கிறது. ஒழுகும் மூக்கு மற்றும் இருமல் போன்ற கூடுதல் அறிகுறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தொடர்ந்து வரும்.[1] தொற்று ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் குறிப்பிடத்தக்கவாறு அவற்றின் மோசமான நிலையை அடைகின்றன.[3] அறிகுறிகள் ஏழிலிருந்து பத்து நாட்களில் தீர்ந்துவிடும், என்றாலும் மூன்று வாரங்கள் வரை நீடிக்கலாம்.[8] சிறுவருக்கான 35% இலிருந்து 45% நிகழ்வுகளில் இருமல் பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. சிறுவருக்கான 10% நிகழ்வுகளில், இது 25 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது.[9]

காரணம்

நுண்ணங்கிகள்

மணிமுடி நச்சுயிரிகள் சாதாரண தடிமனை உண்டாக்குவதாக அறியப்படும் நுண்ணங்கிகளின் ஒரு தொகுப்பாகும். ஒரு மின் நுணுக்குக்காட்டியைக் கொண்டு பார்க்கையில் அவற்றுக்கு ஓர் ஒளிவட்டம், மணிமுடி போன்ற தோற்றம் காணப்படுகிறது

மேல்புற சுவாசப்பாதையில் எளிதாகப் பரவக்கூடிய தொற்று சாதாரண தடிமன் ஆகும். தடிமன் நச்சுயிரி என்பது சாதாரண தடிமனுக்கான மிகப்பொதுவான காரணமாக ஆகிறது. இது மொத்தத்தில் 30% இலிருந்து 80% வரை இருக்கிறது. தடிமன் நச்சுயிரி பிக்கோனாவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நச்சுயிரி ஆகும். இந்தக் குடும்ப நச்சுயிரிகளில் அறியப்படும் இனங்கள் 99 உள்ளன.[10][11] மற்ற நச்சுயிரிகளும் கூட தடிமனை உண்டாக்கக்கூடும். மணிமுடி நச்சுயிரி 10% இலிருந்து 15% வரையான நிகழ்வுகளை உண்டாக்குகின்றன. காய்ச்சல் (சளிக்காய்ச்சல்) 5% இலிருந்து 10% நிகழ்வுகளை உண்டாக்குகின்றது.[3] இதர நிகழ்வுகள் மானிடர் சார் சளிக்காய்ச்சல் நச்சுயிரிகள், மானிடர் சுவாச சின்சிஷியல் நச்சுயிரி, அடினோ நச்சுயிரிகள் எந்தெரோ நச்சுயிரிகள் மற்றும் பெரு நியூமோ நச்சுயிரி ஆகியவற்றால் உண்டாக்கப்படலாம்.[12] பெரும்பாலும், ஒன்றுக்கு மேற்பட்ட நச்சுயிரி இனங்கள் தங்கியிருந்து தொற்றினை உண்டாக்குகின்றன.[13] மொத்தத்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நச்சுயிரிகள் தடிமனுடன் தொடர்புள்ளனவாக இருக்கின்றன.[3]

பரவல்

பொதுவான தடிமனுக்கான நச்சுயிரியானது இரண்டு முதன்மையான வழிகளில் வழக்கமாகக் கடத்தப்படுகிறது. நச்சுயிரி இருக்கக்கூடிய காற்றிலிருக்கும் திவலைகளை சுவாசிப்பது அல்லது உறிஞ்சுவது, அல்லது தொற்றுண்டாகியிருக்கும் மூக்குச் சளியுடன் அல்லது மாசுபட்ட பொருட்களுடன் தொடர்புகொள்வது.[2][14] தடிமன் கடத்தப்படுவதன் எந்த வழிமுறை மிகப்பொதுவானது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.[15] சுற்றுச்சூழலில் நீடித்த காலத்திற்கு நச்சுயிரிகள் பிழைத்திருக்கக் கூடும். அதன் பின்னர் கைகளில் இருந்து கண்களுக்கு அல்லது மூக்கிற்கு நச்சுயிரிகள் கடத்தப்பட்டுத் தொற்று ஏற்படுகிறது.[14] தொற்றினாற் பாதிக்கப்படுபவருக்கு அருகிலிருப்போரே பாதிப்புக்குள்ளாவதற்கான கூடிய இடரில் இருப்பதாக தோன்றுகிறது.[15] பல குழந்தைகள் நெருக்கமாக இருக்கக்கூடிய, குறைவான நோய்த்தடுப்பு மற்றும் பெரும்பாலும் குறைந்த சுகாதாரம் கொண்ட குழந்தைகள் பராமரிப்பகம் அல்லது பள்ளிகளில் இந்தப் பரவல் பொதுவாகவே இருக்கிறது.[16] இந்தத் தொற்றுக்கள் பின்னர் வீட்டிலிருக்கும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.[16] பயணிகள் விமானத்தின் மீள்சுழற்சியாகும் காற்று இந்தப்பரவலுக்கான ஒரு வழி என்பதற்குச் சான்று இல்லை.[14] தடிமன் நச்சுயிரியினால் உண்டாக்கப்படும் தடிமன் பெரும்பாலும் நோயறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று நாட்களில் அதிகம் தொற்றிக்கொள்வதாகும். அதன் பின்னர் அவை குறைவான தொற்று உண்டாக்குவனவாகவே உள்ளன.[17]

காலநிலை

மழை மற்றும் குளிர் காலங்கள் போன்றவற்றில் நீடித்த ஆட்படுதலின் காரணமாகவே தடிமன் பிடிக்கின்றது என்ற தொன்று தொட்டு வரும் கோட்பாட்டின் காரணமாகவே இந்த நோய்க்கு ஆங்கிலத்தில் Cold எனும் பெயர் ஏற்பட்டுள்ளது.[18] உடல் சூடு குறைதலின் பங்கு சாதாரண தடிமனுக்கு ஒரு காரணியாக இருப்பது முரண்பட்ட கருத்தாகும்.[19] சாதாரண தடிமனை உண்டாக்கும் நச்சுயிரிகள் பருவகாலம் சார்ந்தவை, இவை குளிர்ச்சியான மற்றும் ஈரமான பருவ நிலைகளில் நிகழ்பவையாகும்.[20] மிகவும் அருகாமையில் வீட்டிற்குள்ளாகவே இருந்து கூடிய நேரம் கழிப்பதன் காரணமாக உண்டாவதாகவே கருதப்படுகின்றது;[21] குறிப்பாக பிள்ளைகள் பள்ளிக்கு மறுபடியும் செல்ல துவங்குவது.[16] எனினும், எளிய தொற்றுக்கள் தொடர்பில் சுவாசத் தொகுதியின் மாற்றங்களுடன் இதனைத் தொடர்பு படுத்தலாம்.[21] எளிதில் பரவ வைக்கக்கூடிய திவலைகளை உலர்வான காற்று அனுமதிப்பதால் குறைவான ஈரப்பதனும் கூட கடத்தும் விகிதத்தைக் கூட்டுவதுடன், வெகுதூரம் பரவ விட்டு காற்றில் நீடித்தும் தங்கலாம்.[22]

மற்றவை

ஹெர்டு நோயெதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்ட தொற்றுக்கு ஒரு தொகை ஆட்கள் நோய்க்கு ஆட்படுகையில் விளைவாகும் நோயெதிர்ப்பாகும். இவ்வாறாக, வயது முதிர்ந்த மக்கள் குறைந்த விகிதத்திலான சுவாசம் தொடர்பான தொற்றுக்களைக் கொண்டிருக்கும் அதே சமயம் இளம் பிராயத்தினர் அதிக விகிதத்திலான சுவாசம் தொடர்பான தொற்றுக்களைக் கொண்டிருக்கின்றனர்.[23] நோய்க்கான ஓர் இடர்க் காரணியாக மோசமான நோயெதிர்ப்புச் செயற்பாடும் ஒன்றாக இருக்கிறது.[23][24] தடிமன் நச்சுயிரியைத் தொடர்ந்து, தூக்கம் குறைதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை தொற்றினை உருவாக்குவதற்கான கூடிய இடருடன் தொடர்புடையவையாகும். இது நோயெதிர்ப்புச் செயற்பாட்டின் விளைவுகளின் காரணமானதாகக் கருதப்படுகிறது.[25][26]

நோய் உடற்கூற்றியல்

சாதாரண தடிமன் என்பது மேற்சுவாச வழியின் ஒரு நோயாகும்

நச்சுயிரிக்குப் பதிலளிக்கும் நோயெதிர்ப்புடன் பெரும்பாலும் தொடர்புடையனவாக சாதரண தடிமனின் நோயறிகுறிகள் இருப்பதாகக் கருதப்படுகின்றன.[27] இந்த நோயெதிர்ப்புப் பதிலளிப்பின் செயற்படு தன்மை ஒவ்வொரு நச்சுயிரிக்கும் குறிப்பானதாகும். உதாரணமாக தடிமன் நச்சுயிரியானது (RSV) குறிப்பிடத் தக்கவகையில் நேரடித் தொடர்பினால் தற்கொள்ளப்படுகிறது. வீக்கம் ஏற்படுத்தும் நடுவண்களை விடுவிப்பதைத் தூண்டுகின்றவனவான இதுவரை அறியாத வழிமுறைகள் மூலம் மனித ICAM-1 வாங்கிகளைக் கட்டிப்போடுகிறது.[27] இந்த வீக்கம் ஏற்படுத்தும் நடுவண்கள் பின்னர் நோயறிகுறிகளை உண்டாக்குகின்றன.[27] மூக்குத்துவார எபித்தெலியத்திற்கு இது பொதுவாக சேதம் உண்டாக்குவதில்லை.[3] மாறாக, சுவாசப்பாதை சின்சிஷியல் வைரஸானது நேரடித்தொடர்பு மற்றும் காற்றுவழித் திவலைகள் ஆகிய இரண்டினாலும் தொடர்புகொள்ளப்படுகிறது. இது பின்னர் அடிப்பக்க சுவாசப்பாதையில் பெரும்பாலும் பரவுவதற்கு முன்னதாக மூக்கினுள்ளும் தொண்டையிலும் பன்மடங்காகின்றன.[28] RSV எபித்தெலியம் சேதத்தை உண்டாக்குவதில்லை.[28] மனித பாராஇன்ஃப்ளூயென்ஸா வைரஸானது மூக்கு, தொண்டை மற்றும் காற்றுக்குழாயில் குறிப்பிடத்தக்க வீக்கத்தை உண்டாக்குகிறது.[29] இளம் குழந்தைகளில், மூச்சுக்குழலை பாதிக்கும்போது அது க்ரூப் எனப்படும் கரகரப்பான இருமல் மற்றும் சுவாசித்தலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது குழந்தைகளில் இருக்கும் சிறிய அள்வினதான காற்றுக்குழல் காரணமானது ஆகும்.[29]

நோய்கண்டறிதல்

மேற் சுவாசப்பாதைத் தொற்றுக்களுக்கு (RTIs) இடையிலான வித்தியாசமானது ஓரளவுக்கு நோயறிகுறிகள் ஏற்படும் அமைவிடத்தின் அடிப்படையிலானவையாகும். சாதாரண தடிமன் பிரதானமாக மூக்கினைப் பாதிக்கிறது, ஃபாரிஞ்சிட்டிஸ் பிரதானமாக தொண்டையையும் , மற்றும் புரோங்கிட்டிஸ் நுரையீரலையும் பாதிக்கிறது.[2] சாதாரண தடிமன் பெரும்பாலும் மூக்கின் வீக்கம் என விவரணம் செய்யப்படுவதுடன் தொண்டை வீக்கத்தின் வேறுபடும் அளவுகளையும் கொண்டிருக்கும்.[30] மக்கள் தாமாகவே இந்நோயைக் கண்டறிவது பொதுவானதாகும்.[3] உள்ளபடியான நச்சுயிரியினைத் தனிப்படச் சுட்டிக்காட்டுவதென்பது அரிதாகவே உள்ளது.[30] நோயறிகுறிகளின் மூலமாக நச்சுயிரியின் வகையை அடையாளம் காண்பது என்பது பொதுவாகவே சாத்தியப்படுவதில்லை.[3]

நோய்த் தடுப்பு

சாதாரண தடிமனைத் தடுப்பதற்கான ஒரேயொரு பலனளிக்கும் வழி, உடல் வழியே நச்சுயிரி பரவுவதை தடுப்பதேயாகும்.[31] இதில் முதன்மையாக அடங்குவது கைகளைக் கழுவுவது மற்றும் முகத்திரை அணிதல் ஆகியனவாகும். உடல் சுகாதாரப் பராமரிப்புச் சூழலில் முழு அங்கி மற்றும் பயன்படுத்திய பின் வீசிவிடக்கூடிய கையுறைகள் அணிவதும் உண்டு.[31] நோய் மிகப்பரந்த அளவில் இருப்பதாலும் நோயறிகுறிகள் குறிப்பிட்டுச்சொல்லும்படியாக இல்லாததாலும் தொற்றுக்கு ஆளானவர்களைத் தனிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லை. பல தரப்பட்ட நச்சுயிரிகள் தொடர்பு பட்டிருப்பதாலும், அவை விரைந்து மாறும் தன்மையனவாக இருப்பதாலும் தடுப்பு மருந்தேற்றல் கடினம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.[31] பரந்த அளவில் பலனளிக்கும் ஒரு தடுப்பு மருந்தினை உருவாக்குவதும் சாத்தியமில்லை.[32]

கைகழுவுவதைப் பழக்கப்படுத்துவது தடிமன் உண்டாக்கும் நச்சுயிரிகளைக் கடத்தப்படுவதைக் குறைக்கும். இது குழந்தைகளிடையே வினைத்திறன் மிக்கது.[33] நச்சுயிரி எதிர்ப்பு அல்லது பற்றீரியா எதிர்ப்புப் பொருட்களைக் கொண்டு சாதாரணமாகவே கைகளைக் கழுவுது என்பது பயனுள்ளதாக இருக்கிறதா என அறியப்படவில்லை.[33] தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அருகாமையில் இருக்கையில் முகத்திரைகளை அணிவது பலன் மிக்கதாக இருக்கலாம். அதிகப்படியான உடல் அல்லது சமூக தொடுதலில் இருந்து விலகி இருப்பது பலனுள்ளதாக இருந்தது என தீர்மானிப்பதற்கான போதுமான சான்றுகள் இல்லை அல்லது.[33] தனியொரு ஆளுக்குத் தடிமன் பீடிக்கும் எண்ணிக்கைகளைக் குறைப்பதில் நாகம் சேர்த்துக்கொள்வது பலன் மிக்கதாக இருக்கலாம்.[34] வழக்கப்படியாக விற்றமின் சி சேர்த்துக் கொள்வது சாதாரண தடிமனின் கடுமையை அல்லது ஆபத்தினைக் குறைப்பதில்லை. விற்றமின் சி தடிமன் பீடித்திருக்கும் காலத்தைக் குறைக்கலாம்.[35]

கட்டுப்படுத்துதல்

சாதாரண தடிமனுக்கு "உங்களது மருத்துவரை அணுகுக" எனக் குடிமக்களைத் தூண்டும் சுவரொட்டி

நோய்த் தொற்றுக் காலத்தைக் குறைக்குமென நிரூபிக்கப்பட்ட எந்த விதமான மருந்தோ அல்லது மூலிகை மருத்துவமோ தற்போது இல்லை.[36] இதற்கான மருத்துவம் நோய் அறிகுறி சார் பரிகாரத்தையே கொண்டுள்ளது.[37] இது கூடுதலான நேரம் ஓய்வெடுப்பது, நீர்த் தன்மையைப் பேணுவதற்காக திரவப் பொருட்களை உட்கொள்ளல், இளஞ்சூடான உப்பு நீரால் வாய் கொப்புளித்தல் என்பவற்றை உள்ளடக்கலாம்.[12] மருந்தற்ற மருத்துவ விளைவு என்பதன் மூலமே பெரும்பாலான சிகிச்சைகள் பலனளிக்கின்றன எனக் கூறப்படுகிறது.[38]

நோயறிகுறி சார் மருத்துவங்கள்

இதற்கான நோயறிகுறிகளை ஒழிப்பதர்கு உதவும் சிகிச்சைகள் எளிமையான வலி நிவாரணிகள் (வலிநீக்கிகள்), காய்ச்சலைக் குறைக்கும் (காய்ச்சல் மருந்துகள்) மருந்துகளாகிய இவுப்புரொபென் ibuprofen[39] மற்றும் அசெற்றமினோபென்/பரசற்றமோல் என்பன பயன்படுத்தப்படுகின்றன.[40] இருமல் மருந்துகள் எளிய வலி நிவாரணி மருந்துகளை விடப் பயனுள்ளவை என்பதற்கு ஆதாரம் கிடையாது.[41] அவற்றின் வினைத்திறனைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஆதாரம் குறைவு என்பதனாலும் தீங்கு விளைவிக்கும் பாதகம் இருக்கலாம் என்பதனாலும் இருமல் மருந்துகள் சிறுவர்களுக்குக் கொடுக்கப்படுவது பரிந்துரைக்கப்படுவதில்லை.[42][43] 2009 இல், இடர்களையும் நிரூபிக்கப்படாத நன்மைகளையும் பற்றிய கவலைகளின் காரணமாக, அகவை ஆறு அல்லது அதற்குக் குறைந்த சிறுவர்களுக்கு மருந்துச் சீட்டின்றிப் பெறும் இருமல் மற்றும் தடிமன் மருந்துகளைக் கனடா அரசாங்கம் தடை செய்தது.[42] டெக்ஸ்திரோமெத்தோர்பன் (மருந்துச் சீட்டின்றிப் பெறும் ஓர் இருமல் மருந்து) மருந்தின் தவறான பயன்பாடு எத்தனையோ நாடுகளில் அது தடை செய்யப்படக் காரணமாயிற்று.[44]

பெரியவர்களில் மூக்கால் ஒழுகுதல் சிக்கல் உள்ளவர்களுக்கு முதலாம் தலைமுறை ஒவ்வாமை முறிகள் மூலம் மருந்தளிக்கப்படலாம். எனினும், முதலாம் தலைமுறை ஒவ்வாமை முறிகள் தூக்கக் கலக்கம் போன்ற மோசமான பக்க விளைவுகளுடன் தொடர்பு பட்டவையாகும்.[37] எபிடரின் போலி போன்ற ஏனைய சளியிளக்கிகளும் பெரியவர்களில் வினைத்திறன் உள்ளவையாகும்.[45] இப்ராத்துரோப்பியம் மூக்கு வழித் தெளித்தல், மூக்கினால் ஒழுகுதலின் நோயறிகுறிகளைக் குறைக்கலாமெனினும், மூக்கடைப்பு போன்றவற்றிற்கு மிகக் குறைந்தளவே பயன்படுகிறது.[46] இரண்டாம் தலைமுறை ஒவ்வாமை முறிகள் வினைத்திறன் உள்ளவையாகக் காணப்படுவதில்லை.[47]

போதிய ஆய்வுகள் இன்மையால், திரவ உள்ளெடுப்பு நோயறிகுறிகளைக் கூட்டுகிறதா அல்லது சுவாச நோய்களைக் குறைக்கிறதா என்பது அறியப்படவில்லை.[48] சூடாக்கப்பட்ட ஈரப்பதன் மிக்க வளி தொடர்பிலும் போதிய தரவுகள் காணப்படுவதில்லை.[49] நெஞ்சுக்கு ஆவி பிடித்தல் மூலம் இரவு நேர இருமல், நெரிசல், உறக்கச் சிக்கல் என்பவற்றுக்கு ஓரளவு நோயறிகுறி சார் வினைத்திறன் ஏற்படுவதாக ஓர் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.[50]

நுண்ணுயிர் கொல்லிகள் மற்றும் நச்சுயிரி கொல்லிகள்

நுண்ணுயிர் கொல்லிகள் வைரசுத் தொற்றுக்கு எதிராக எந்தப் பாதிப்பையும் கொண்டிராமையால், சாதாரண தடிமனுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தா.[51] நுண்ணுயிர் கொல்லிகளின் பக்க விளைவுகள் ஒட்டு மொத்தப் பாதகத்தை ஏற்படுத்துவனவாயினும், நுண்ணுயிர் கொல்லிகள் பொதுவாக மருந்தாகக் குறிப்பிடப்படுகின்றன.[51][52] நுண்ணுயிர் கொல்லிகள் பொதுவாக மருந்தாகக் குறிப்படிப்படுவது ஏனெனில், மருத்துவர்கள் தங்களுக்கு மருந்தெழுதிக் கொடுக்க வேண்டுமென மக்கள் விரும்புவதாலும், மக்களுக்கு உதவுவதற்கு மருத்துவர்கள் விரும்புவதனாலுமே ஆகும். நுண்ணுயிர் கொல்லிகளை மருந்தெனக் குறிப்பிடுவதுற்கு மற்றுமொரு காரணம் நுண்ணுயிர் கொல்லிகளினாற் கட்டுப்படுத்தக்கூடிய நோய்த் தொற்றுக்களைப் புறந்தள்ளி விடுவது கடினம் என்பதாகும்.[53] முதற்கட்ட ஆய்வுகள் சில தடிமனுக்கான நச்சுயிர் எதிர் மருந்துகள் ஓரளவு பயனுள்ளவை எனக் காட்டினாலும், அவ்வாறு வினைத்திறனுள்ள மருந்துகள் காணப்படுவதில்லை.[37][54]

மாற்றுச் சிகிச்சைகள்

சாதாரண தடிமனுக்கான மாற்றுச் சிகிச்சைகள் பல இருந்தாலும், அவற்றிற் பெரும்பாலான சிகிச்சைகளுக்குப் போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை.[37] 2010 ஆம் ஆண்டிலும் கூட, தேன் அல்லது மூக்குவழிப் பாசனம் வழங்கும் முறைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பரிந்துரைப்பதற்குப் போதிய அறிவியல் ஆதாரங்கள் காணப்படவில்லை.[55][56] நோயறிகுறிகள் ஏற்பட்டு 24 மணி நேரத்தினுள் வழங்கப்படின், நாகம் கலந்த சேர்க்கைகள் நோயறிகுறிகளின் கடுமையையும் காலத்தையும் குறைக்கலாம்.[34] சாதாரண தடிமனுக்கு விற்றமின் சி வழங்கப்படுவதைப் பற்றி மிக விரிவாக ஆராய்ச்சி செய்திருப்பினும், அதன் வினைத்திறன் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.[35][57] இதற்காக வட அமெரிக்காவின் நடு மற்றும் கிழக்குப் பகுதிக்கு அகணியமான எக்கைனேசே தாவரப் பகுதிகளைப் பயன்படுத்துவது தொடர்பாகக் காட்டப்படும் ஆதாரம் பொருத்தமற்றதாகும்.[58][59] வெவ்வேறு வகையான எக்கைனேசே சேர்க்கைகள் அவற்றின் வினைத்திறனில் மாறுபடலாம்.[58]

விளைவு

சாதாரண தடிமன் பொதுவாக எளிதானதும், ஒரு வார காலத்தினுள் பெரும்பாலான நோயறிகுறிகளில் நலன் ஏற்பட்டு மறைந்து விடுவதும் ஆகும்.[2] கடுமையான சிக்கல்கள் ஏற்படின், அவை மிக இளையோர், மிக வயதானோர், நோயெதிர்ப்பாற்றல் ஒடுங்கியோர் (வலுவிழந்த நோயெதிர்ப்புத் தொகுதியைக் கொண்டுள்ளோர்) ஆகியோரிலேயே பொதுவாக ஏற்படும்.[60] பீனிசம், தொண்டையழற்சி, காதுத்தொற்று என்பவற்றை விளைவாக்கக்கூடிய இரண்டாம் நிலை பற்றீரியத் தொற்றுக்கள் ஏற்படலாம்.[61] 8% நோயாளிகளில் பீனிசம் ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 30% நோயாளிகளில் காதுத் தொற்று ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[62]

சாத்தியக்கூறு

சாதாரண தடிமன் என்பது மனிதருக்கு ஏற்படும் மிகப் பொதுவான ஒரு நோய்[60] என்பதுடன், உலகெங்குமே அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.[16] வளர்ந்தோர் ஆண்டு தோறும் சாதாரணமாக இரண்டு முதல் ஐந்து தடவைகள் வரை நோய்த்தொற்றுக்கு ஆட்படுகின்றனர்.[2][3] சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் ஆறு முதல் பத்துத் தடவைகள் வரை தடிமன் ஏற்படலாம் (அத்துடன், பள்ளிச் சிறாரில் இது ஆண்டுக்குப் பனிரண்டு தடவைகள் வரை ஏற்படலாம்).[37] நோயெதிர்ப்பு ஆற்றல் வலுவிழப்பதன் காரணமாக, நோயறிகுறிகள் சார்ந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் விகிதம் வயது முதிர்ந்தோரில் கூடுதலாக இருக்கலாம்.[23]

வரலாறு

சாதாரண தடிமனுக்கான காரணம் 1950 கள் தொடக்கமே கண்டறியப்பட்டிருப்பினும், இந்நோய் மிகப் பண்டைய காலத்திலிருந்தே மானிடரில் இருந்து வருகிறது.[63] இதன் நோயறிகுறிகளும் சிகிச்சையும் பொகாமு 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டதும், தற்போது கிடைக்கப் பெறும் ஆகப் பழைய மருத்துவ ஏடாகிய எகிப்தின் எபர்சு ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ளன.[64] இதற்கும் குளிர் காலநிலையால் ஏற்படும் நோயறிகுறிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளின் காரணமாக இதனைச் "சாதாரண தடிமன்" என அழைக்கும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டது.[65]

ஐக்கிய இராச்சியத்தில், சாதாரண தடிமன் அலகு (CCU) 1946 இல் மருத்துவ ஆராய்ச்சி அவையினால் நிறுவப்பட்டது. அங்குதான் 1956 இல் தடிமன் நச்சுயிரி கண்டுபிடிக்கப்பட்டது.[66] 1970 களில், தடிமன் நச்சுயிரித் தொற்றின் நோயரிதகு காலத்தின் போது இந்தர்பெரோன் மூலம் சிகிச்சையளிப்பது இந்நோய்க்கு எதிராக ஓரளவு பாதுகாப்பளிப்பது என்பதை CCU கண்டறிந்தது.[67] நடைமுறைச் சாத்தியமான சிகிச்சை எதுவும் உருவாக்கப்பட முடியவில்லை. தடிமன் நச்சுயிரியால் ஏற்படும் தடிமனைத் தடுக்கவும் அதற்குச் சிகிச்சையளிக்கவும் நாக குளுக்கோனேற்று மிட்டாய்கள் தொடர்பில் அது ஆராய்ச்சியை நிறைவு செய்து இரண்டே ஆண்டுகளின் பின்னர், 1989 இல் அவ்வலகு மூடப்பட்டது. CCU இன் வரலாற்றில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட ஒரேயொரு சிகிச்சை நாகம் ஆகும்.[68]

பொருளாதாரத் தாக்கம்

பிரித்தானியச் சுவரொட்டி[69]

சாதாரண தடிமனின் பொருளாதாரத் தாக்கம் உலகில் மிகக் குறைவாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.[62] சாதாரண செலவுத் தொகையைக் கருத்திற் கொண்டால், ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டு தோறும் 7.7 பில்லியன் டொலர் வரை செலவேற்படுத்தும் 75 மில்லியன் முதல் 100 மில்லியன் வரையான மருத்துவ வருகையை சாதாரண தடிமன் ஏற்படுத்துகிறது. இதற்கான மருந்துச் சீட்டின்றிப் பெறும் மருந்துகளுக்காக அமெரிக்கர்கள் ஆண்டு தோறும் 2.9 பில்லியன் டொலர் செலவழிக்கின்றனர். இவற்றுக்கு மேலதிகமாக, நோயறிகுறி சார் பரிகாரத்திற்கென மருந்துச் சீட்டளிக்கப்பட்ட மருந்துகளுக்காக அமெரிக்கர்கள் ஆண்டு தோறும் 400 மில்லியன் டொலர் செலவழிக்கின்றனர்.[70] இதற்காக மருத்துவரை அணுகியோரில் மூன்றிலொரு பங்கிற்கும் மேற்பட்டோர் நுண்ணுயிர் கொல்லி மருந்துச் சீட்டொன்றையே பெற்றுள்ளனர். நுண்ணுயிர் கொல்லி மருந்துச் சீட்டுகளின் பயன்பாடு நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்புக்குக் காரணாமாகியது.[70] தடிமன் காரணமாக ஆண்டு தோறும் 22 மில்லியன் முதல் 189 மில்லியன் வரையான பாடசாலை நாட்கள் இழக்கப்படுகின்றன எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, தமது பிள்ளைகளைக் கவனிப்பதற்காக வீட்டிலிருக்க வேண்டியிருப்பதனால், பெற்றோர்கள் 126 மில்லியன் வேலை நாட்களை இழக்கின்றனர். ஊழியர்கள் தடிமனால் அவதிப்படுவதன் காரணமாக இழக்கும் 150 மில்லியன் வேலை நாட்களுடன் அதனைச் சேர்க்கும் போது, தடிமனுடன் தொடர்பான வேலை இழப்புக் காரணமாக ஆண்டு தோறும் ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் 20 பில்லியன் டொலர்களைத் தாண்டுகின்றது.[12][70] அதாவது, ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டு தோறும் இழக்கும் வேலை நேரத்தின் 40% ஐ இது கொண்டுள்ளது.[71]

ஆராய்ச்சி

சாதாரண தடிமனுக்கு வினைத்திறன் உள்ளவையா எனக் காண்பதற்காக ஏராளமான நச்சுயிர் எதிர் மருந்துகள் சோதிக்கப்பட்டுள்ளன. 2009 வரை, அவற்றில் எதுவுமே வினைத்திறன் உள்ளதாகவோ உரிமம் வழங்கப்பட்டதாகவோ காணப்படவில்லை.[54] தற்போது நச்சுயிர் கொல்லி மருந்தாகிய பிளெக்கோனரில் இற்கான சோதனைகள் நடைபெறுகின்றன. அது பைக்கோனா வைரசுகளுக்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. BTA-798 இற்கான சோதனைகளும் தற்போது நடைபெற்ற வண்ணம் உள்ளன.[72] பிளெக்கோனரிலின் வாய்வழி உள்ளெடுக்கும் வடிவம் பாதுகாப்புச் சிக்கல்களைக் கொண்டுள்ள அதேவேளை, அதன் வளிமக் கரைசல் வடிவங்கள் ஆராயப்படுகின்றன.[72]

மேரிலாந்து பல்கலைக்கழகம், கொலிஜ் பார்க் மற்றும் விசுக்கன்சின் பல்கலைக்கழகம்–மெடிசன் என்பவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சாதாரண தடிமனை உண்டாக்குவதாக அறியப்படும் வைரசு மரபணுக்கள் அனைத்தையும் படமாக்கியுள்ளனர்.[73]

குறிப்புக்கள்

References
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தடிமன்&oldid=3557006" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்