கைப்பந்தாட்டம்

கைப்பந்தாட்டம் (volleyball) என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அனுப்பப்படும் பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, பந்து அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். கைப்பந்தாட்ட விளையாட்டிற்கென பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன [1]. கைப்பந்தாட்டத்தை கையுந்து பந்தாட்டம் அல்லது வாலிபால் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு விளையாட்டாக கைப்பந்தாட்டம் 1964 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகிறது.

பெண்கள் கைப்பந்தாட்டம் ஆடுகிறார்கள். ஒரு வ்லையைத் தாண்டி கைகளால் பந்தைத் தட்டி ஆடும் ஆட்டம்
கைப்பந்தாட்டம் ஆடும் காட்சி. ஆட்டம் விதிப்படி நடக்கின்றதா என்று சரிபார்க்கும் நடுவர் வலையின் ஒரு கோடியில் ஒரு சிறு மேடை மீது நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம்
கைப்பந்தாட்டம் ஆடும் காட்சி. ஆட்டம் விதிப்படி நடக்கின்றதா என்று சரிபார்க்கும் நடுவர் வலையின் ஒரு கோடியில் ஒரு சிறு மேடை மீது நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம்

கைப்பந்தாட்டத்திற்காக வகுக்கப்பட்டுள்ள முழுமையான விதிகள் விரிவானவையாகும். ஆனால் ஆட்டம் எளிமையாக பின்வருமாறு விளையாடப்படுகிறது.

ஆட்டத்தைத் தொடங்குகின்ற அணியிலிருக்கும் ஒரு வீரர் அவர் பக்க ஆடுகளத்திற்கு வெளியே நின்று பந்தை கைகளால் அடித்து வலைக்கு மேலாக அடுத்த அணியினரின் ஆடுகளப் பகுதிக்கு அனுப்புகிறார். பந்தைப் பெறுகின்ற எதிரணியினர் பந்தை அவர்கள் பக்க ஆடுகளத்தின் தரையில் விழவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் அணியில் உள்ள மூன்று வீரர்கள் பந்தை மூன்று முறை தட்டுகிறார்கள். ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறைகள் பந்தைத் தட்டக்கூடாது என்ற விதி இங்கு பின்பற்றப்படுகிறது. எதிரணியினரால் அனுப்பப்படும் பந்தை பெறும் முதல் வீரர் கீழ்க்கையால் அல்லது தலைக்கு மேலேயே விரல்களால் பந்தைப் பெற்று பந்து வந்தவேகத்தைக் கட்டுப்படுத்தி இரண்டாவது வீரருக்கு அனுப்புகிறார். மூன்றாவது வீரர் பந்தை விசையுடன் அடித்து அனுப்புவதற்கு தோதுவாக இரண்டாவது வீரர் பந்தை தலைக்கு மேலே உயர்த்தி நிறுத்துகிறார். தாக்குதலுடன் அனுப்பப்பட்ட பந்தை எதிரணியினர் தங்கள் பகுதிக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர். அல்லது முதல் அணியினர் பந்தை அனுப்பியது போல இவர்களும் பந்தைப் பெற்று , தலைக்கு மேல் நிறுத்தி, விசையுடன் அடித்து விளையாட்டைத் தொடர்கின்றனர். எதிரணியினரின் ஆடுகளத்தில் பந்து தரையைத் தொடும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியும்போது தவறு செய்தாலும், வலையைத் தொட்டுவிடுதல் போன்ற மற்ற தவறுகள் இழைத்தாலும் எதிர் அணிக்கு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியப்பட்ட பந்தை திரும்ப எதிர் அணிக்கு திருப்ப முடியாமல் போனாலும் எதிர் அணிக்குப் புள்ளிவழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 25 புள்ளிகளை எந்த அணியினர் முதலில் ஈட்டுகின்றனரோ அந்த அணி வெற்றி பெற்ற அணியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே இருந்து ஓரணியின் வீரரால் அடித்தெறியப்படும் பந்து, இரண்டு அணி வீரர்களாலும் மூன்று மூன்று தட்டல்களில் திருப்பி அனுப்பப்படும் தொடர் நிகழ்வு ராலி எனப்படும். ஓர் அணியின் ஆடுகளப்பகுதியில் பந்து தரையைத் தொடும்வரை, அல்லது மூன்று தட்டல்களால் அடுத்த பகுதிக்கு பந்தை அனுப்பமுடியாத நிலை தோன்றும் வரை இந்த ராலி தொடரும். அடித்தெறியும் அணி ராலியை வெற்றி பெற்று புள்ளிகள் ஈட்டினால் அந்த அணிக்கு மீண்டும் அடித்தெறியும் வாய்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் ராலி தொடரும்.

பொதுவாக கைப்பந்தாட்ட விளையாட்டின் போது பின்வரும் தவறுகள் வீரரகளால் இழைக்கப்படுகின்றன.

•எதிரணியினரின் ஆடுகளத்திற்கு வெளியே தரையைத் தொடுமாறு பந்தை அடித்து விடுதல்•எதிரணியினரின் ஆடுகளத்திற்கு செல்ல முடியாதவாறு பந்தை வலையில் அடித்து விடுதல் •பந்தை கைகளால் பிடித்து விடுதல்•உந்தி தள்ளுவதற்குப் பதிலாக பந்தை பிடித்து எறிந்து விடுதல்•ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை தட்டிவிடுதல்•ஒரே அணியினர் நான்கு முறை பந்தை தட்டி அனுப்புதல் •ராலியின்போது அணி வீரர்கள் வலையை கைகளால் தொட்டு விடுதல்•தொடக்கத்தில் அடித்தெறியும் போது வீரரின் பாதம் ஆடுகளத்தின் எல்லையை தாண்டி விடுதல் போன்றவை தவறுகளாகக் கருதப்படுகின்றன.

பொதுவாக கைகளால் ஆடப்படும் இவ்விளையாட்டில் வீரர்களின் பிற உடல் பாகங்களில் பந்து படுவதும் தவறாகக் கருதப்படுகிறது. கைப்பந்தாட்ட விளையாட்டில் பல்வேறு தேர்ந்த நுணுக்கங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. வலைக்கு மேல் பந்தை நிறுத்தி மேலெழும்பி தாக்கி அடித்தல், மேலெழும்பி வலைக்கு மேலேயே பந்தை தடுத்து திருப்பி அனுப்புதல், அடுத்தவருக்கு பந்தைக் கடத்துதல், தாக்குவதற்கு தோதாக பந்தை தலைக்கு மேலே உயர்த்திக் கொடுத்தல், தனிச்சிறப்பு ஆட்டக்காரருக்கு ஏற்றபடி இடம் அமைத்துக் கொடுத்தல், போன்ற ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்றன.

வரலாறு

தோற்றமும் வளர்ச்சியும்

வில்லியம் கி. மார்கன்

1895 ஆம் ஆண்டின் மழைக்காலம் ஒன்றில் அமெரிக்காவின் மாசாச்சுசெட்சு மாநிலத்தின் ஓலியோக் நகரில் உடற்கல்வி இயக்குநராக இருந்த வில்லியம் கி. மார்கன் என்பவர் மிண்டோநெட்டி என்ற புதிய விளையாட்டை உருவாக்கினார். இப்பெயர் பேட்மிண்டன் என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உள்ளரங்க விளையாட்டாகவும் பலர் விளையாடும் விளையாட்டாகவும் இது உருவாக்கப்பட்டது. எறிபந்தாட்டம் மற்றும் டென்னிசு பந்தாட்டம் ஆகிய ஆட்டங்களின் சில கூறுகள் இவ்விளையாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கூடைப்பந்து என்ற ஒரு புதிய விளையாட்டும் இந்நகருக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த சிபிரிங்பீல்டு நகரில் உருவாக்கப்பட்டிருந்தது. நடுத்தர வயது ஆட்டக்காரர்களை மையமாக வைத்து இவ்விளையாட்டு உருவாக்கப்பட்டது. கூடைப்பந்து விளையாட்டைக் காட்டிலும் மென்மையான விளையாட்டாக இது கருதப்பட்டது. சிறிதளவு தடகள முயற்சிகள் தேவைப்படும் இவ்விளையாட்டு உள்ளரங்கு விளையாட்டாகவே உருவாக்கப்பட்டது.

கைப்பந்தாட்டத்திற்கான தொடக்கக்கால விதிகளை வில்லியம் கி. மார்கன் உருவாக்கி எழுதினார். குறுக்கே கட்டப்படும் வலையின் உயரம் 6 அடி உயரம் எனவும் ஆடுகளத்தின் நீளம் 50 அடியாகவும் அகலம் 25 அடியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விதி செய்தார். ஓர் ஆட்டம் என்பது ஒன்பது இன்னிங்சு கொண்டதாக இருந்தது. ஒரு இன்னிங்சிற்கு ஒவ்வொரு அணிக்கும் மூன்று அடித்தெறிதல் அனுமதிக்கப்பட்டது. எதிரணியின் பக்கத்திற்கு பந்தை திருப்பி அனுப்புவதற்காக பந்தை தட்டும் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை. அடித்தெறியும் போது தவறிழைக்கப்பட்டால் மறு வாய்ப்பு வழங்கப்பட்டது. பந்தை வலையில் அடிப்பது தவறாகக் கருதப்பட்டது. முதல்முறையாக அடித்தெறியும் போது தவறிழைத்தல் தவிர பின்னர் நிகழும் தவறுகளுக்கு புள்ளி இழப்பும் பக்க மாற்றமும் கொடுக்கப்பட்டது.

1896 ஆம் ஆண்டு சிபிரிங் பீல்டு கல்லூரியில் இவ்விளையாட்டு ஒரு காட்சிப் போட்டியாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு வலைக்கு மேல் பந்து அங்குமிங்குமாக அனுப்ப்படுவதைக் கண்ட ஆல்பிரட் ஆல்சிடட்டு என்பவர் இவ்விளையாட்டை வாலிபால் என்று அழைத்தார். அன்றிலிருந்து இவ்விளையாட்டின் பெயர் வாலிபால் என்றானது. விதிகள் சிறிதளவு மாற்றப்பட்டன. பின்னர் இவ்விளையாட்டு பல்வேறு நாடுகளுக்கும் பரவியது [2][3]

இந்தியாவின் மேற்கு வங்காள மாநில கிராமம் ஒன்றில் கைப்பந்து ஆடும் காட்சி

.

வளர்ச்சியும் சீராக்கமும்

இவ்விலையாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தொடர்பான அறிக்கைகள் விவாதத்திற்கு உட்பட்டவையாக உள்ளன. 1986 ஆம் ஆண்டில் அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தயாரிக்கப்பட்டது என்று சிலரும் 1900 ஆம் ஆண்டில்தான் அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தயாரிக்கப்பட்டது என்று சிலரும் வாதிடுகிறார்கள் [4][5][6]. காலப்போக்கில் கைப்பந்தாட்டத்திற்கான விதிகளில் மாற்றங்கள் தோன்றின. வெற்றிக்குப் புள்ளிகளை ஈட்ட வேண்டும் என்ற விதி 1900 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. 21 புள்ளிகள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற விதி 1917 ஆம் ஆண்டு 15 புள்ளிகள் எடுத்தால் வெற்றி என்று மாற்றப்பட்டது. ஒரு குழுவிற்கு ஆறு ஆட்டக்காரர்கள் விளையாடலாம் என்ற விதி 2016 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஒரு குழு பந்தை மூன்று முறை தட்டி விளையாடலாம் என்ற விதி 1922 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 16000 கைப்பந்துகள் அந்நாட்டுப் படையினருக்கும் கூட்டணிப் படையினருக்கும் வழங்கப்பட்டன. இதனால் பல புதிய நாடுகளுக்கு இவ்விளையாட்டு பரவியது [4].

1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைப்பந்து விளையாடத் தொடங்கிய பிறகு கனடாவில்தான் இவ்விளையாட்டு முதன்முதலில் விளையாடப்பட்டது[4]. சர்வதேச பைப்பந்து கூட்டமைப்பு 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, 1949 இல் ஆண்களுக்கான முதல் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான உலகக் கோப்பைப் போட்டி 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது[7]. தற்போது இந்த விளையாட்டானது பிரேசிலில் பிரபலமாக விளையாடப்படுகிறது. ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகள், உருசியா, சீனா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளிலும் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது.

1958 இல் கனடிய இயற்கைவாதிகளின் சங்கத்தில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டி

வழக்கமாக விளையாடப்படும் கைபந்தாட்டம் சில மாறுதல்களுடன் கடற்கரை கைப்பந்து என்ற பெயரில் ஆடப்படுகிறது. மணலில் விளையாடப்படும் இவ்விளையாட்டில் ஒரு அணிக்கு இரண்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கைப்பந்து விளையாட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் கைப்பந்து போட்டிகள் இடம்பெறுகின்றன.

1920 களின் பிற்பகுதியில் நிர்வாண உடையில் இயங்கும் இயற்கைவாதிகள் இவ்விளையாட்டை ஏற்றுக் கொண்டு விளையாடத் தொடங்கினர். அவர்களின் சங்கம் மற்றும் கழக அமைப்புகளில் கைப்பந்து விளையாட்டுத் திடல் உருவாக்கப்பட்டது [8][9]. 1960 களில் இத்தகைய அமைப்பின் அனைத்து சங்கங்களிலும் கைப்பந்து திடல் கண்டிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது [10].

ஆடுகளம்

சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும்.

ஆடுகளத்தின் அளவுகள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கைப்பந்தாட்டம்&oldid=3850817" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்