உயிர்ச்சத்து டி

உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2 அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் 'உயிர்ச்சத்து' எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் பொருந்தாது. இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது, மேலும் மாத்திரை வடிவிலும் இவ்வுயிர்ச்சத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.[1] கொழுப்பு மீன்கள், முட்டைகள், சிவப்பு இறைச்சி வகை ஆகிய உணவுவகைகளில் மிகையான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதால் இவ்வுயிர்ச்சத்து குறைபாடானவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்யப்படுகின்றது.[2] ஒளியில் வளரும் காளான் வகைகளை உணவாகப் பயன்படுத்தல் மூலம் நாளாந்த உயிர்ச்சத்தின் 100% பெற்றுக்கொள்ளலாம்.[3]

உயிர்ச்சத்து டி
மருந்து வகுப்பு
கோளிகல்சிபெரோல் (D3)
பயன்பாடுஎன்புருக்கி நோய், எலும்புப்புரை, உயிர்ச்சத்து டி பற்றாக்குறை
உயிரியல் இலக்குஉயிர்ச்சத்து டி ஏற்பி
உநோவே குறிA11CC
வெளியிணைப்புகள்
மபாதD014807d
AHFS/Drugs.comMedFacts Natural Products

உயிர்ச்சத்து டி3 குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக (calcidiol) மாற்றம் பெறுகின்றது, கல்சிடையோல் (வேறு பெயர்கள்: கல்சிபிடையோல், 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோல், 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி3, 25(OH)D3)பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நிர்ப்பீடனத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது.[4] கல்லீரலில் ஏர்கோகல்சிபெரோல் (உயிர்ச்சத்து டி2) 25-ஐதரொக்சி ஏர்கோகல்சிபெரோலாக (வேறு பெயர்கள்: 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி2, 25(OH)D2)மாற்றம் அடைகிறது. ஒரு நபரது உயிர்ச்சத்து டியின் நிலையை அறிவதற்கு இந்த இரண்டு உயிர்ச்சத்து 'டி'யின் வளர்சிதைக்கூறுகளின் அளவுகள் குருதித் தெளியத்தில் கணிக்கப்படுகின்றன.[5][6]

தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்ட கல்சிடையோல் நிர்ப்பீடன அல்லது நோய்த்தடுப்புத் தொகுதியில் நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு பொருளாகத் தொழிற்படுகின்றது, அதேவேளை சிறுநீரகத்தில் ஒரு இயக்குநீராகத் தொழிற்படுகின்றது. வளரூக்கியாக கல்சியம், பொசுபேற்று வளர்சிதைமாற்றங்களில் பங்கெடுப்பதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியிலும் மீளஉருமாற்றத்திலும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. கல்சிரையோல் பொதுவாக உயிர்ச்சத்து என்று அழைப்பதை விட அதன் தொழிற்பாட்டுதன்மையால் வளரூக்கியாகவே கருதப்படுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. கல்சியத்துடன் சேர்ந்து எலும்புப்புரை நோய் உருவாகுதலைத் தடுக்கின்றது. இவைகளைத் தவிர, உயிர்ச்சத்து டி நரம்பு, தசைத் தொழிற்பாட்டைச் செம்மைபடுத்துகின்றது; அழற்சியைக் குறைக்கின்றது; உயிரணுவின் பெருக்கத்திற்கும் உருமாற்றத்திற்கும் முதிர் உயிரணு அகற்றலிற்கும் காரணமாக உள்ள மரபணுவுக்கு உறுதுணையாகின்றது.[7]

விளைவுகள்

இறப்புவீதம்

குருதியில் குறைவான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுதல் இறப்பு வீதத்தைக் கூட்டுகின்றது.[8] ஆய்வொன்றில் முதுமை வயதுடைய பெண்களுக்கு உயிர்ச்சத்து டி3 மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட போது இறப்புக்கான இடர்காரணி குறைவாகக் காணப்பட்டது.[9] உயிர்ச்சத்து டி2, அல்பாகல்சிடோல், கல்சிட்ரயோல் என்பன ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கவில்லை.[9]எனினும் மிகையான அல்லது குறைவான உயிர்ச்சத்து டி அளவு அசாதாரண தொழிற்பாட்டுக்கும் இளவயதில் முதுமையடைதலுக்கும் காரணியாகின்றது.[10][11][12]

வகைகள்

உயிர்ச்சத்து 'டி'க்களின் சமகூறுகள்
பெயர்வேதியல் சேர்மம்கட்டமைப்பு
உயிர்ச்சத்து டி1ஏர்கோகல்சிபெரோலுடன் இலுமிசுடேரோல், 1:1
உயிர்ச்சத்து டி2ஏர்கோகல்சிபெரோல் (ஏர்கோசுடேரோலில் இருந்து உருவாக்கம்)
உயிர்ச்சத்து டி3கோளிகல்சிபெரோல் ( தோலில் 7-dehydrocholesterol சேர்மத்தில் இருந்து உருவாக்கம்).
உயிர்ச்சத்து டி422-இரு ஐதரோஏர்கோகல்சிபெரோல்
உயிர்ச்சத்து டி5சைட்டோகல்சிபெரோல் (7-dehydrositosterol சேர்மத்தில் இருந்து உருவாக்கம்)

உயிர்ச்சத்து 'டி'க்களின் உயிர்ச்சத்துச் சமகூறுகள் (அட்டவணையைப் பார்க்கவும்) சில உள்ளன. இரண்டு பெரிய வகைகளுள் ஒன்று உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றையது உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்), இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து கல்சிபெரோல் என அழைக்கலாம்.[13] 1932இல் உயிர்ச்சத்து டி2இன் வேதியல் இயல்பு அறியப்பட்டது. 1936இல் உயிர்ச்சத்து டி3இன் வேதியல் கட்டமைப்பு அறியப்பட்டது.[14]

வேதியல் கட்டமைப்பின்படி உயிர்ச்சத்து டி ஒரு செக்கோசுட்டீரோய்டு (secosteroid), அதாவது இசுட்டீரோய்டு மூலக்கூறில் ஒரு பிணைப்பு முறிந்து காணப்படும் அமைப்பு.[15] உயிர்ச்சத்து டி2க்கும் உயிர்ச்சத்து டி3க்கும் இடையேயான கட்டமைப்பு வேறுபாடு அவற்றின் பக்கச் சங்கிலியில் உள்ளது. உயிர்ச்சத்து டி2இன் பக்கச்சங்கிலியில் 22வது, 23வது கரிமங்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்பும் 24வது கரிமத்தில் மெதையில் குழுமமும் காணப்படுகின்றது.

உயிர்ச்சத்து டி2, உயிரிகளின் மென்சவ்வில் உள்ள ஒருவகை இசுடீரோலான ஏர்கோசுடீரோலில் இருந்து உருவாகிறது, மேலும் தாவர மிதவைவாழிகள், முதுகெலும்பிலிகள், பூஞ்சைகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர்வீச்சால் ஏற்படும் வினைத்தாக்கம் மூலம் உற்பத்தியாகின்றது; உயிர்ச்சத்து டி2 நிலத்துத் தாவரங்களில் அல்லது முதுகெலும்பிகளில் உற்பத்தி ஆவது இல்லை.[16] உயிர்ச்சத்து டி2யை உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் உயிர்ச்சத்து டி3இன் தேவையை முழுமையாக்கலாம் என்பது பற்றிய முரண்பாடான கருதுகோள்கள் நிலவுகின்றன.[17]

உயிர்ச்சத்து டி பற்றாக்குறை

அனைத்துலகிலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாக உயிர்ச்சத்து டி பற்றாக்குறை திகழ்கின்றது. உணவில் உட்கொள்ளும் அளவு அல்லது கதிரவ ஒளிபடுதல் குறைவதனால் இக்குறைபாடு ஏற்படுகின்றது. பாலுணவு வகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், மரக்கறி உணவையே மட்டும் கடுமையாகக் கடைப்பிடிப்போர் மத்தியில் இப்பற்றாக்குறை ஏற்படலாம். குறிப்பாக வயதானவர்களில் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இடர்க்காரணி இருந்தாலும் பொதுவாக சிறுவர் உட்பட ஏனையவர்களிலும் பொதுவாக ஏற்படுகின்றது.

மனிதரில் கல்சிய வளர்சிதைமாற்றம்.[18] உயிர்ச்சத்து டியின் பங்கு ஒரெஞ்சு நிறத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

உண்ணும் உணவிலிருந்து கல்சியத்தை அகத்துறிஞ்ச உதவுவதன் மூலமும், கல்சியத்தின் வளர்சிதைமாற்றத்துக்கு உதவுவதன் மூலமும் உயிர்ச்சத்து டி எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ளுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் எலும்புகளின் தோற்றம், தன்மை என்பன பாதிக்கப்படுகின்றது. மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய் அல்லது எலும்புநலிவு நோய் (Osteomalacia) எனவும் அழைக்கப்படுகின்றது. எலும்புகளின் உருவாக்கத்துக்குத் தேவையான கனிமமாக்கல் செயன்முறையில் பாதிப்பு ஏற்படுவதால் இவ்விளைவுகள் ஏற்படுகின்றன.

இவற்றைவிட, உயிர்ச்சத்து டியின் செயற்பாடுகள் உடலில் உள்ள அநேகமான இழையங்களில் நடைபெறுகின்றன. தசைத்தொகுதி, நோய்த்தடுப்புத் தொகுதி, மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி போன்றவற்றில் உயிர்ச்சத்து டி இணைந்து தனது செயலை நிகழ்த்துவதற்காக உயிர்ச்சத்து டி ஏற்பிகள் உள்ளன.[19] இதன் மூலம் உயிர்ச்சத்து டி உடலின் ஏனைய பகுதிகளில் வகிக்கும் பங்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதய நோயால் பாதிப்படையும் இடர்க் காரணி, சிறுவர்களில் ஈழை நோய், புற்றுநோய், முதலாவதுவகை நீரிழிவு, மன உளைச்சல் போன்றன குருதியில் குறைந்த அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றது என்று அறியப்பட்டுள்ளது. தண்டுவட மரப்பு நோய், சில புற்றுநோய்கள், காசநோய், தடிப்புத் தோல் அழற்சி போன்ற சில நோய்களுக்குத் துணை மருந்தாக உயிர்ச்சத்து டியைப் பயன்படுத்துவது நன்மையைக் கொடுக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[19]

கரும்நிறத் தோலை உடையவர்களிலும் இக்குறைபாடு ஏற்படலாம். இவர்களில் கருநிறமி (மெலனின்) சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்களை உட்புகவிடாது தடுப்பது காரணமாகின்றது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[20][21][21] எனினும் வேறு சில ஆய்வுகள் ஆபிரிக்க இனத்தவரிடையே குறைந்தளவு உயிர்ச்சத்து டி காணப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.[22] கொழுப்பு உடலில் அகத்துறிஞ்சப்படுவது பாதிக்கப்படுதலும் உணவினூடாக உயிர்ச்சத்து டி கிடைப்பதைக் குறைக்கிறது.

என்புருக்கி நோய்

என்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வயதுடைய குழந்தையின் வளைவுக் கால்களைக் காட்டும் கதிர் வரைபடம்

என்புருக்கி நோய் எலும்புகள் மென்மையடைவதால் ஏற்படும் சிறுபிராயத்து நோயாகும். இந்நோயின் முக்கிய காரணி உயிர்ச்சத்து டி குறைபாடு. இருப்பினும், கல்சியம் அல்லது பொசுபரசு குறைபாட்டாலும் ஏற்படலாம். குழந்தைப்பருவத்தில் வறுமை, பசி காரணமாக தீவிர ஊட்டச்சத்துக் குறைவோடு காணப்படும் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்களில் இதன் அளவு குறைவதால், பிள்ளை பிறந்த பிற்பாடு பாலூட்டும் போது குழந்தைக்கும் குறைந்த அளவு செல்கிறது. எனினும், பொதுவாகவே தாய்ப்பாலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. குழந்தைகளுக்கு மரக்கறி வகைகள் மட்டுமே கொடுக்கப்படலும் இந்நோயுடன் தொடர்புடையதாக உள்ளது.[23] உயிர்ச்சத்து டி செறிவூட்டப்பட்ட பால் வகைகள் சிறுவருக்கு கொடுப்பது இதன் குறைபாடு வருவதைத் தடுக்கின்றது.

இந்நோயில், கல்சியம் அல்லது பொசுபரசு குருதியில் சரியான அளவு பேணப்படுவது குழம்புவதால் இந்நோயில் எலும்புகளில் நடைபெறும் கனிமமாக்கல் செயற்பாடு பாதிக்கப்படுகிறது. குழந்தைகளில் எலும்பு வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது, எலும்புகள் நேரான உருவத்தை இழந்து வளைந்து காணப்படுகின்றன, இலகுவில் முறியக்கூடியதாக உள்ளன. வில் போன்று வளைந்த கால்கள், முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு குறைபாடுகள், மண்டை எலும்பு மென்மையுறுதல் போன்ற எலும்பு தொடர்புடைய அறிகுறிகளுடன் பல் சம்பந்தமான பிரச்சனைகள், தசைச்சோர்வு போன்ற அறிகுறிகளும் இந்நோயில் இடம்பெறுகின்றன.

என்புமென்மை நோய்

வளரந்தவர்களில் உயிர்ச்சத்து டி குறைபாட்டால் எலும்புகளில் மென்மையை ஏற்படுத்தும் நோய். எலும்புகளின் கனிமமாக்கலுக்கு போதியளவு கல்சியம் அல்லது பொசுபரசு இன்மையால் இந்நோய் உருவாகின்றது. இணைகேடயச் சுரப்பிகளின் மிகைத் தொழிற்பாட்டாலும் குருதியில் கல்சியத்தின் அளவு குறையும்போது இந்நோய் உண்டாகின்றது. முதுகெலும்பு வளைதல், கால் வளைதல், எலும்பு முறிவடைதல் இந்நோயால் ஏற்படும். எலும்பு நோ, தசைச்சோர்வு என்பன இதன் அறிகுறிகளாகும்.

மிகை உயிர்ச்சத்து டி

உயிர்ச்சத்து டியின் உள்ளெடுக்கப் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வரம்பளவு நாளாந்தத்துக்கு 4000 அனைத்துலக அலகுகள் (IU) ஆகும். இதைவிட அளவுக்கதிகமாக உள்ளெடுத்தால் நச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. எனினும், பொதுவாக உயிர்ச்சத்து டி நச்சுமை காணப்படுவது அரிது.[24] உயிர்ச்சத்து டி நச்சுமை கதிரவ ஒளியினால் ஏற்படாது, ஆனால் உயிர்ச்சத்து டி மாத்திரைகளின் அளவு மிகைப்புப் பயன்பாடு கூடுவதால் அல்லது உயிர்ச்சத்து டி வலுவூட்டப்பட்ட உணவுப்பொருட்களை அளவுக்கதிகமாக நுகருவதால் ஏற்படக்கூடும். முதன்மிய இணைக் கேடயச்சுரப்பி இயக்க மிகைப்பு (Hyperparathyroidism) உள்ளவர்கள் உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள்.[25] இவர்களில் குருதியில் கல்சியத்தின் அளவு மிகையாகக் காணப்படும். மிகைக் கல்சியக்குருதி கொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் முதிர்மூலவுரு உயிர்ச்சத்து டியின் மிகையளவுக்கு எளிதாகப் பாதிப்படையும் இடர்த்தன்மை காணப்படுகின்றது.[25][26] எனவே கர்ப்பிணித்தாய்மார் உயிர்ச்சத்து டி மாத்திரைகளை ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்றே உள்ளெடுத்தல் தேவையானது.

மிகைக் கல்சியக்குருதியுடன் அடிக்கடி சிறுநீர் வெளியேறல், தாகம் என்பன உயிர்ச்சத்து டி நச்சுமை உள்ளதென்பதற்கான உறுதியான சுட்டுமை ஆகும். மிகைக் கல்சியக்குருதி சிகிச்சை மூலம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படாவிடின் மெல்லிழையங்களிலும் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகளிலும் அதிகளவு கல்சியம் படியத்தொடங்கிவிடும்.[27][28][29] இவர்களில் பசியின்மை, குமட்டல், வாந்தி போன்ற நோய் அறிகுறிகளுடன் சிறுநீர்மிகைப்பு, தாகம், சோர்வு, தூக்கமின்மை, பதட்டம், தோல் அரிப்பு முதலியன ஏற்படும். இறுதியில் சிறுநீரகச் செயலின்மை, சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுதல், சிறுநீரகக்கல் ஆகியன உயிராபத்தை ஏற்படுத்தவல்லனவாகத் தோன்றும்.[30] உயிர்ச்சத்து டி நச்சுமையின் வேறு அறிகுறிகள்: சிறுவர்களில் மனவளர்ச்சிக்குறை, அசாதாரண எலும்பு உருவாக்கமும் வளர்ச்சியும், வயிற்றோட்டம், எரிச்சற்தன்மை, எடை குறைவு, மன உளைச்சல்.[27][29]

உயிர்ச்சத்து டி, கல்சியம் உள்ளெடுப்பது தவிர்க்கப்படல் உயிர்ச்சத்து டி நச்சுமைக்கான சிகிச்சையாகும். சிறுநீரகப் பாதிப்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது.[25]

செயற்பாட்டு இயக்கமுறை

உயிரியத் தொகுப்பு

தோலின் மேற்றோலில் உள்ள முட்படை (பழுப்பு நிறம்) மற்றும் அடித்தளப்படை (சிவப்பு நிறத்தில்) ஆகியவற்றில் உற்பத்தி மிகையாக நடைபெறுகின்றது.

உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) தோலில் காணப்படும் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோலில் (7-dehydrocholesterol) இருந்து ஒளிவேதியல் வினை மூலம் உருவாகுகின்றது. 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் மனிதன் உட்பட்ட பெரும்பான்மை முதுகெலும்பிகளின் தோலில் ஒப்பீட்டளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.[31] 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் இயல்பாகவே தோலிலும் பாலிலும் காணப்படுகின்றது. பாலை நேரடியாக புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாக்கும் போது பாலில் உயிர்ச்சத்து டியை உற்பத்தி செய்யமுடியும். உயிர்ச்சத்து டி வியாபார நோக்கில் உற்பத்தி செய்யப்படும் முறைகளில் இதுவும் ஒன்றாகும்.[32] எண்ணெய் மீன்களிலும் காட் மீன் ஈரல் எண்ணெய்களிலும் டி3 காணப்படுகின்றது.[27][32][33]

உயிர்ச்சத்து டி2 ஏர்கோசுட்டிரோலில் இருந்து உருவானதாகும். ஏர்கோசுட்டிரோல் என்பது சிலவகை அலைதாவரங்கள் (தாவர மிதவைவாழிகள்), முதுகெலும்பிலிகள், மதுவங்கள், காளான்கள் ஆகியனவற்றின் கலமென்சவ்வில் காணப்படும் ஒருவகை இசுட்டிரோல் ஆகும்.[34] ஏர்கோசுட்டிரோல் புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உட்படும்போது ஏர்கோகல்சிபெரோல் உருவாகுகின்றது. காளான்களில் குறைந்தளவில் காணப்படும் உயிர்ச்சத்து டி2 அவற்றை புறஊதாக் கதிரின் வினைக்குட்படுத்தும் போது அதிகரிக்கின்றது.[35]

தோலில் உற்பத்தி

தோல் இரண்டு முதன்மைப் படைகளைக் கொண்டுள்ளது: வெளிப்புறத்தில் உள்ள மெல்லிய படை மேற்றோல் எனவும் உட்புறத்தில் உள்ள பெரும்பான்மையாக தொடுப்பிழையத்தால் ஆக்கப்பட்டுள்ள அமைப்பு உட்தோல் எனவும் அழைக்கப்படுகின்றது. மேற்றோல் ஐந்து படைகளைக் கொண்டுள்ளது; அவை வெளிப்புறத்தில் இருந்து உட்புறமாக முறையே கொம்புப்படை, தெளிவுப்படை, சிறுமணிப்படை, முட்படை, முளைப்படை அல்லது அடித்தளப்படை ஆகியனவாகும். உயிர்ச்சத்து டியின் உற்பத்தி மிகவும் உட்புறத்தில் உள்ள முட்படை மற்றும் அடித்தளப்படை ஆகியவற்றில் நடைபெறுகின்றது.

தோலில் 7-நீரகநீங்கிய கொலசுட்ரோல் அலைநீளம் 270 தொடக்கம் 300 வரையான நானோமீட்டர் (nm) கொண்ட புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாகும் போது உயிர்ச்சத்து டி3 உருவாகுகின்றது. மிகையான உற்பத்தி 295 - 297 nm இல் நடக்கின்றது.[36] இத்தகைய அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்கள் கதிரவ ஒளியிலும் சூரியப்படுக்கைகளில் அமைந்துள்ள புறஊதா விளக்குகளிலும் இருந்து வெளிவிடப்படுகின்றன.

வளர்சிதை மாற்றமும் உயிரியற் செயற்பாடும்

கோளிகல்சிபெரோல் கல்சிடையோலாக மாறும் கல்லீரல் ஐதராக்சைலாக்கம்
கல்சிடையோல் கல்சிரையோலாக மாறும் சிறுநீரக ஐதராக்சைலாக்கம்

உயிர்ச்சத்து டி குருதி மூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக மாற்றம் பெறுகின்றது. குருதிச் சுற்றோட்டத்தில் உள்ள கல்சிடையோல் பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நோய் எதிர்ப்புத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் தொழிற்படுவடிவான கல்சிரையோலாக மாற்றப்பட்டு குருதியருவிக்குள் விடப்படுகின்றது.[4] குருதியில் காணப்படும் உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதத்துடன் அல்லது அல்புமினுடன் இணைந்து கொண்டு வெவ்வேறு இலக்குறுப்புகளுக்கு காவிச்செல்லப்படுகின்றது.[15] நோய் எதிர்ப்புத் தொகுதியின் ஒற்றைக்குழிய-பெருவிழுங்கிகளில் கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. தனித்திறனற்ற நோயெதிர்ப்புத் தொகுதியைத் தூண்டுவதன் மூலம் உடலில் நுண்ணுயிரிகள் நுழைவதைத் தடுக்கும் சைட்டோக்கைன் எனும் உயிரணுத் தொடர்பிகள் போன்று கல்சிரையோல் தொழிற்படுகிறது.[4][37]

தோலில் உருவாகும் அல்லது உணவு மூலம் உள்ளெடுக்கப்படும் கோளிகல்சிபெரோல், கல்லீரலில் நிகழும் வேதியல் வினைமூலம் 25வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்பட்டு 25-ஐதரொக்சி கோளிகல்சிபெரோலாக (25(OH)D3, கல்சிடையோல்) மாற்றமடைகிறது. இந்த வேதிவினை மைக்ரோசோமில் உள்ள உயிர்ச்சத்து டி 25-ஐதராக்சிலேசு எனும் நொதியத்தால் ஊக்குவிக்கப்படுகின்றது.[38] கல்சிடையோல் சிறுநீரகத்துக்கு உயிர்ச்சத்து டி பிணைப்புப் புரதம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு 1வது இடத்தில் ஐதராக்சைலாக்கத்துக்கு உட்படுகின்றது. இதன் மூலம் கல்சிரையோல் என அழைக்கப்படும் 1,25-இரு ஐதரொக்சி கோளிகல்சிபெரோல் (1,25(OH)2D) உருவாகின்றது. இந்தத் தொழிற்படுவடிவ கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பிக்கான ஒரு ஏற்பிணைப்பியாகும். கல்சிடையோல் கல்சிரையோலாக மாற்றப்படுவதற்கு 25-ஐதரொக்சி உயிர்ச்சத்து டி3 1-அல்பா-ஐதராக்சிலேசு எனும் நொதியம் துணைபுரிகிறது.

கல்சிரையோல் தனது உயிரிய வினைகளை உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் (VDR) பிணைக்கப்படுவதன் மூலம் நடுவு செய்கின்றது. இலக்கு உயிரணுக்களின் கருவில் இந்த உயிர்ச்சத்து டி ஏற்பிகள் அமைந்துள்ளன.[15] உயிர்ச்சத்து டி ஏற்பியுடன் பிணைக்கப்பட்ட கல்சிரையோல் உயிர்ச்சத்து டி ஏற்பியை ஒரு படியெடுத்தல் காரணியாகச் செயற்பட அனுமதிக்கின்றது. குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சி, கல்சியத்தைப் பிணைத்துக்கொண்டு காவும் புரதங்களின் (கல்பைண்டின்) மரபணு வெளிப்பாட்டை இப்படியெடுத்தற் காரணி ஒழுங்குபடுத்துகின்றது.[39] உயிர்ச்சத்து டி ஏற்பி பெரும்பான்மையான உறுப்புகளில் காணப்படுகின்றது: தோல், மூளை, மார்புச்சுரப்பி, குடல், முன்னிற்குஞ்சுரப்பி, இதயம், இனப்பெருக்க உட்சுரப்பிகள். குடல், எலும்பு, இணைக்கேடய சுரப்பிகள் போன்றவற்றில் உயிர்ச்சத்து டி ஏற்பி செயற்படு நிலைக்குள்ளாவது குருதியில் கல்சியம் மற்றும் பொசுபரசு அயனிகளின் மட்டத்தை பேணுகின்றது. இது இணைக்கேடய வளரூக்கி, கல்சிடோனின் வளரூக்கி ஆகியனவற்றின் உதவியுடன் நிகழ்கின்றது.

உயிர்ச்சத்து டியின் முக்கிய பங்குகளுள் ஒன்று வன்கூட்டுத்தொகுதியில் எலும்புகளில் உள்ள கல்சியத்தின் சமநிலையைப் பேணுவதாகும். குடலில் இருந்து கல்சியத்தை அகத்துறிஞ்சுவது, எலும்புறிஞ்சிக் கலங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் எலும்புகளில் இருந்து குருதிக்கு கல்சியத்தை வெளியுறிஞ்சச் (resorption) செய்வது, இவற்றின் மூலம் கல்சியம் மற்றும் பொசுபரசின் சமநிலையைப் பேணுவது எலும்புகளின் ஆக்கத்துக்கும் மீளாக்கத்துக்கும் இன்றியமையாதது.

வரலாறு

அமெரிக்க ஆய்வாளர்களான எல்மர் மக்கலம் மற்றும் மார்கேரைட் டேவிசு ஆகியோர் 1914இல் காட் ஈரல் எண்ணெயில் இருந்து ஒரு பதார்த்தத்தைக் கண்டறிந்தனர்.[40] இது பின்னர் உயிர்ச்சத்து ஏ என அழைக்கப்பட்டது. பிரித்தானிய மருத்துவர் எட்வார்டு மெலான்பை, காட் ஈரல் எண்ணெய் கொடுக்கப்பட்ட நாய்களில் என்புருக்கி நோய் வரவில்லை என்பதை அவதானித்தார். இதிலிருந்து, உயிர்ச்சத்து ஏ அல்லது வேறொரு நெருங்கிய காரணி இந்நோயைத் தடுக்கின்றது என்பது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 1922இல் எல்மர் மக்கலம் உயிர்ச்சத்து ஏ அகற்றப்பட்ட காட் ஈரல் எண்ணெயை நோயுற்ற நாய்களுக்குக் கொடுத்துப்பார்த்தார். அப்போதும் இந்நோய் குணமாகியது. இதிலிருந்து குறிப்பிட்ட அந்தப் பதார்த்தத்துக்கு 'உயிர்ச்சத்து டி' எனப் பெயரிடப்பட்டது. ஏனெனில், இது நான்காவதாகப் பெயரிடப்பட்ட உயிர்ச்சத்து ஆகும்.[41][42][43] ஆரம்பகாலத்தில் மாந்தரால் உயிர்ச்சத்து டியை சூரிய ஒளி மூலம் தொகுத்துக்கொள்ள முடியுமென்பது பற்றிய அறிவு இருந்திருக்கவில்லை.

1923இல் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கரிமப் பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து 'டி'யின் அளவை புறவூதாக்கதிர் கூட்டுகிறது என்பதை அமெரிக்க உயிர்வேதியியலாளர் காரி இசுடீன்போக் விபரித்தார்.[44] கொறிணிகளின் உணவை புறவூதாக்கதிர் வினைக்குட்படுத்திய பிற்பாடு அவை என்புருக்கி நோயில் இருந்து குணமடைந்தது அவதானிக்கப்பட்டது. இவரது முறை பால் போன்ற உணவுப்பொருட்களில் உயிர்ச்சத்து டியைச் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.[45]

1925இல்[40] 7-dehydrocholesterol ஒளியில் தாக்கமுறும்போது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்து (தற்போதைய உயிர்ச்சத்து டி3) ஒன்று உருவாகுகின்றது என்பதை அறியத்தொடங்கி இருந்தனர். அல்பிரெட் பாபியன் கெசு (Alfred Fabian Hess) ஒளி உயிர்ச்சத்து 'டி'க்குச் சமானமானது என அறியத்தந்தார்.[46][47] இசுடீரோலுக்கும் உயிர்ச்சத்துக்கும் இடையான தொடர்புகளை செருமனியில் கோட்டின்கேன் பல்கலைகழகத்தில் ஆய்ந்தறிந்த அடோல்ப் விண்டவுசு (Adolf Windaus), இச்சேவைக்கு 1928இல் நோபெல் பரிசு பெற்றார்.[48]

1971-72இல் உயிர்ச்சத்து டியின் வளர்சிதை மாற்றம் பற்றிய மேலதிக விவரங்கள் அறியப்பட்டன.கல்லீரலில் உயிர்ச்சத்து டி கல்சிடையோலாக மாற்றப்படுகின்றது என்பது அறியப்பட்டது.[6][49] கல்சிடையோல், கல்சிரையோல் என்பன மைக்கல் ஒளிக் என்பவரது தலைமையில் நடந்த ஆய்வில் அறியப்பட்டன.[50]

நாளாந்தத்தேவை

வெவ்வேறு நாட்டினது துறைசார் நிறுவனங்கள் வெவ்வேறு அளவுகளைப் பரிந்துரை செய்கின்றன. கதிரவ ஒளி போதுமானதாக இருக்காவிடின் பொதுவாக பரிந்துரை செய்யப்படும் நாளாந்தத்தேவையின் அளவு போதாது.[51]

அலகு மாற்றம் : 1 µg = 40 IU and 0.025 µg = 1 IU [52]

உணவு மூலம்

சிலவகை உணவுப்பொருட்களில் இருந்து மட்டுமே உயிர்ச்சத்து டியைப் பெற்றுக்கொள்ள முடியும்.[27][28][32][33] கதிரவ ஒளி மூலம் பெற்றுக்கொள்ளப்படுவதே பெரும்பான்மையானவர்களுக்கு பிரதானமான உயிர்ச்சத்து டியின் மூலம் ஆகும்.[53]

உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்)

  • பூஞ்சைகள், குறிப்பாக காளான் வகைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். காளான் வகைகளை புறவூதாக் கதிர் வினைக்குட்படுத்துவது மூலம் அவற்றில் உள்ள உயிர்ச்சத்து டி அளவைக் கூட்ட முடியும்.[54][55]
    • புறவூதாக்கதிருக்கு உட்படுத்தப்பட்ட காளான் , போர்டோபெல்லோ, சமைக்காதது: உயிர்ச்சத்து டி2: 11.2 μg (446 IU)
    • புறவூதாக்கதிருக்கு உட்படுத்தப்பட்ட காளான் , போர்டோபெல்லோ, தீயில் வாட்டியது: உயிர்ச்சத்து டி2: 13.1 μg (524 IU)
    • காளான் , போர்டோபெல்லோ, சமைக்காதது: உயிர்ச்சத்து டி2: 0.3 μg (10 IU)
  • தாவரங்கள் - குதிரை மசால் (அல்ஃபல்ஃபா): 4.8 μg (192 IU) உயிர்ச்சத்து டி2, 0.1 μg (4 IU) உயிர்ச்சத்து டி3 (100 கிராமுக்கு) [56]

உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்)

சில நாடுகளில் பால், பழச்சாறுகள், தயிர் (யோகர்ட்) போன்ற அன்றாடம் உட்கொள்ளப்படும் உணவுவகைகளில் உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகின்றது.[1][57]

  • மரக்கறி மூலம்
    • இலைக்கன்
      • கிளடோனியா ஆர்பசுகுலா: உயிர்ச்சத்து டி3யின் அளவு 0.67 தொடக்கம் 2.04 μg வரை.[58]
  • விலங்கு மூலம் [59]
    • மீன் ஈரல் எண்ணெய் (காட் ஈரல் எண்ணெய்): 4.5 g (1 தேக்கரண்டி) இலிருந்து 450 IU (100 IU/g) உயிர்ச்சத்து டியைப் பெறலாம்
    • கொழுப்பு மீன் இனங்கள்:
      • சாமன் மீன், சமைத்தது, 85 g (3 oz) இலிருந்து 444 IU (5.2 IU/g)
      • மக்கரல், சமைத்தது, 85 g இலிருந்து 390 IU (4.6 IU/g)
      • தூனா, எண்ணெயில் கலனடை செய்யப்பட்ட மீன்கள், 100 g இலிருந்து 269 IU (2.7 IU/g)
    • முட்டையின் நிறை 61 g ஆக இருந்தால், சமைத்த முட்டை மஞ்சட்கருவில் 44 IU (0.7 IU/g)
    • சமைத்த மாட்டு ஈரல் 85 g இலிருந்து 42 IU (0.5 IU/g)

உசாத்துணைகள்


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உயிர்ச்சத்து_டி&oldid=3928038" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்