இலச்மண்பூர் பதே படுகொலைகள்

இலச்மண்பூர் பதே படுகொலைகள் எனப்படுவது, பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள இலச்மண்பூர் பதே கிராமத்தில் வசித்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்கசாதி ரன்வீர் சேனா தீவிரவாத குழுவினரால் தொடுக்கப்பட்ட தாக்குதலைக் குறிப்பதாகும். திசம்பர் 1, 1997 அன்று நடைபெற்ற இந்த திட்டமிடப்பட்ட படுகொலைத் தாக்குதலில் 58 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் கிராமத்தில் இருந்த அவர்களின் குடிசைகளும், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இது குறித்து தனது அதிர்ச்சியை தெரிவித்த அன்றைய இந்திய சனாதிபதி கே. ஆர். நாராயணன், இது சுதந்திர இந்தியாவின் மிக அவமானகரமான நிகழ்வு என குறிப்பிட்டார்[1].

இலச்மண்பூர் பதே படுகொலைகள்
படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணும் அவரது குழந்தையும்.
இடம்இலச்மண்பூர் பதே கிராமம், பீகார், இந்தியா
நாள்திசம்பர் 1, 1997
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த விவசாயக் கூலிகள்
இறப்பு(கள்)58
தாக்கியோர்ரன்வீர் சேனா

பின்னணி

இலச்மண்பூர் பதே கிராமம் பீகாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் பாசுவான், சாமர், மல்லா மற்றும் மாதோ சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களும் பூமிகார் சாதியை சேர்ந்த நிலவுடமையாளர்களும் பெருமளவு வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த கூலி விவசாயிகளுக்கிடையே என்பதுகளின் மத்தியில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பிரபலமாக தொடங்கின. குறிப்பாக பார்ட்டி யுனிட்டி மற்றும் லிபரேசன் ஆகிய இயக்கங்கள் விவசாயிகளுக்கு ஆதவாக பல போராட்டங்களை முன்னெடுத்தன. அதே நேரம், பூமிகார் சாதியினரால் தொடங்கப்பட்ட ரன்வீர் சேனா எனும் தீவிரவாத அமைப்பு, நிலவுடமையாளர்களுக்கு ஆதரவாக இருந்தது. 1997ல் லிபரேசன் இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டத்தில், விவசாயிகள் தங்கள் கூலியான ஒன்றரை கிலோ உணவு தானியத்தை மூன்று கிலோவாக உயர்த்தக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை முறியடிக்கவும், அவர்களிம் கம்யூனிச நக்சலைட் ஆதரவை அழிக்கும் முகாந்திரமாகவும் இந்த படுகொலைகள் திட்டமிடப்பட்டன[2]. மேலும் 1992ல் மாவோயிசத்தினரால் நிகழ்த்தப்பட்ட பாரா படுகொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையிலும் இது அமைந்தது.

தாக்குதல்

இந்த தாக்குதலுக்காக போஜ்பூர் மற்றும் பாட்னா மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரன்வீர் சேனா அமைப்பினர் திரட்டப்பட்டனர். துப்பாக்கி மற்றும் படுகொலை ஆயுதங்களுடன் சாகா பிராந்தியத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள் திசம்பர் 1 இரவு பதினோரு மணியளவில் இலச்மண்பூர் கிராமத்தில் புகுந்து தாக்குதலை தொடங்கினர். பெரும்பாலான மக்கள் தூக்கத்தில் இருந்ததால் பதில் தாக்குதலுக்கோ, தற்காப்புக்கோ இடம் இல்லாமல் போய் விட்டது. சுமார் மூன்று மணி நேரம் தாக்குதலை தொடர்ந்த ரன்வீர் சேனா அமைப்பினர் பிறகு சோன் ஆற்றைக் கடந்து போஜ்பூர் மாவட்டத்திற்கு தப்பியோடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் மொத்தமாக 58 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 27 பேர் பெண்கள். 10 பேர் குழந்தைகள். கொல்லப்பட்ட பெண்களில் 8 பேர் கர்ப்பிணிகள். மேலும் இவர்களின் குடிசைகளும் உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

விசாரனை மற்றும் தீர்ப்பு

படுகொலைகள் 1997ல் நிகழ்த்தப்பட்ட போதும், பத்து வருடங்கள் வரை யார் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியில் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து[3], 2008ல் ரன்வீர் சேனாவை சேர்ந்த 46 பேர் மீது பாட்னா கூடுதல் செசன்சு நீதிமண்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 44 பேர் மீதான குற்றச்சாட்டை மட்டும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவர்களின் மீது நடந்த விசாரனைகளை அடுத்து, ஏப்ரல் 7, 2010ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 44 பேரில் 16 பேருக்கு மரண தண்டனையும், 10 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 50000 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது[4]. எஞ்சிய 18 பேர் குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டனர். மேலும் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செசன்சு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகளின் சார்பில், பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரனையைத் தொடங்கிய நீதிபதிகள் பி.என். சின்கா மற்றும் ஏ.கே. லால் தலைமையிலான பாட்னா உயர்நீதிமன்ற பென்ச், அக்டோபர் 9ல் தனது தீர்ப்பை வெளியிட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறி அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்[5][6].

எதிர்ப்புகள்

பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பல அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களது எதிப்பை தெரிவித்தன. இடதுசாரி அமைப்புகள் தீர்ப்புக்கு எதிராக தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் பீகார் அரசு உடனேயே தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் நிர்பந்தித்துள்ளன[7]. மேலும் தீர்ப்பை விமர்சித்துள்ள மாவோயிச அமைப்புகள், முசாபர்பூர் மாவட்டத்தில் 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்தன[8]. இதையடுத்து நிதிசு குமார் தலைமையிலான பீகார் அரசு, விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.

அமிர்தாசு விசாரனை ஆணையம்

முன்னதாக, இலச்மண்பூர் பதே படுகொலைகளை அடுத்து அன்றைய பீகார் முதலமைச்சர் ராப்ரி தேவியினால் நீதிபதி அமிர்தாசு தலைமையில் ஒரு விசாரனை ஆணையம் அமைக்கப்பட்டது. இது ரன்வீர் சேனா அமைப்புக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான தொடர்பை பற்றிய விசாரனைகளை மேற்கொண்டது. இந்த விசாரனை ஆணையம், மொத்தமாக 450 சாட்சியங்கள் மற்றும் 40 அரசியல் தலைவர்களிடம் விசாரனை செய்தது. இருப்பினும் முழுமையாக விசாரனை முடியும் முன்பே சனவரி 31, 2006ல் அன்றைய பிகார் முதல்வர் நிதிசு குமாரினால் அந்த ஆணையம் முடக்கப்பட்டது. நீதிபதி தனது அறிக்கையை அளிக்க அதிக காலம் எடுத்துக்கொண்டதே விசாரனை முடக்கக் காரனம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பீகார் அரசு தமது விசாரனைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுக்காததே தாமதத்துக்கு காரணம் என நீதிபதி தெரிவித்தார்[9].

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்