இயேசு சந்தித்த சோதனை

இயேசு சந்தித்த சோதனை (temptation of Christ) என்பது இயேசுவின் வாழ்க்கை, போதனை ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்களில், குறிப்பாக மத்தேயு நற்செய்தி, மாற்கு நற்செய்தி, லூக்கா நற்செய்தி ஆகிய புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு அலகையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ள இடங்கள் இவை:

  • மத்தேயு நற்செய்தி 4:1-11
  • மாற்கு 1:12-13
  • லூக்கா 4:1-13

சோதனையின் பின்னணி

நற்செய்திகள் தரும் தகவல்படி, இயேசு திருமுழுக்கு பெறுகிறார். அதன்பின் யூத பாலைநிலத்தில் நாற்பது நாள்களும் இரவுமாக நோன்பு இருக்கிறார். அப்பொழுது அலகை இயேசுவின் முன் தோன்றி அவரைச் சோதனைக்கு உட்படுத்துகிறது. அலகையின் மூன்று சோதனைகளையும் இயேசு முறியடிக்கிறார். வானதூதர்கள் இயேசுவுக்கு உணவு அளிக்கிறார்கள்.

மேற்கூறிய மூன்று நற்செய்தி பாடங்களிலும் மிகக்குறுகியது மாற்கு தரும் பாடம்தான். அங்கே இயேசு சோதிக்கப்பட்டார் என்ற தகவல் மட்டுமே வேறு விளக்கங்கள் இன்றித் தரப்பட்டுள்ளது (மாற்கு 1:12-13).

மத்தேயுவும் லூக்காவும் செய்துள்ள பதிவுகளில் இயேசுவுக்கும் அலகைக்கும் இடையே நடைபெறுகின்ற உரையாடல் விரிவாகத் தரப்படுகிறது. இயேசுவின் சோதனை பற்றி மாற்கு நற்செய்தியில் இல்லாமல் மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் மட்டுமே காணப்படுகின்ற தகவல்கள் எல்லாமே விவிலியத்திலிருந்து காட்டப்படுகின்ற மேற்கோள்களாக உள்ளன. அவை Q (Q source) எனப்படுகின்ற ஓர் மூல ஏட்டிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர் கருத்து.

இயேசுவின் சோதனை பற்றிய வரலாறு யோவான் நற்செய்தியில் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”இயேசு சந்தித்த சோதனைகள்” - வெனிசு நகரில் புனித மாற்கு பெருங்கோவில். 12ஆம் நூற்றாண்டு கற்பதிகை ஓவியம்

இயேசுவின் சோதனை பற்றிய பகுதியின் இலக்கியப் பாணி

இது ஓர் உவமையா?

இயேசுவின் சோதனை பற்றிய பாடம் எந்த இலக்கியப் பாணியில் அமைக்கப்பட்டது என்பது குறித்து ஒரு விவாதம் உள்ளது. அதாவது, இயேசு சோதிக்கப்பட்டார் என்று நற்செய்தி நூல்கள் கூறுவது வரலாற்று நிகழ்ச்சியா, உவமையா, தொன்மமா அல்லது பல இலக்கியப் பாணிகளின் தொகுப்பா? நற்செய்தி நூல்கள் விவரிப்பது போலவே, உண்மையாகவே இயேசுவின் சோதனை நிகழ்ந்ததா என்னும் கேள்வியே இந்த விவாதத்தின் மையத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக, 19ஆம் நூற்றாண்டு ஆய்வாளரான ஆண்ட்ரூ மார்ட்டின் ஃபெய்ர்பெய்ர்ன் என்பவர் இப்பொருளை ஏற்கனவே ஆய்ந்தார். இயேசு சோதனைகளைச் சந்தித்தபோது அலகை நேரடியாக அவருடைய முன்னிலையில் வந்து நின்று பேசியதா? அவரை உயரமான ஒரு மலைக்குக் கூட்டிச் சென்றதா? இயேசுவுக்கு அலகைக்கும் இடையே நிகழ்ந்ததாக நற்செய்தி நூல்கள் கூறுகின்ற உரையாடல் உண்மையாகவே நடந்ததா? அலகை விவிலியத்தை மேற்கோள் காட்டி இயேசுவுக்குச் சவால் விடுத்ததா? அல்லது, இந்நிகழ்ச்சியின் வழியாக, எல்லா மனிதரும் சந்திக்கின்ற சோதனைகள் கதையாக எடுத்துக் கூறப்பட்டனவா? இத்தகைய கேள்விகளை ஃபெய்ர்பெர்ன் ஆய்வு செய்தார்.[1]

இயேசு தம்முடைய பணிக்காலத்தின்போது உவமைகள் வழியாக மக்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார். அப்போது தமது உள்ளத்தின் ஆழத்தில் தாம் சந்தித்த சோதனைகளை, உள் அனுபவங்களை அவர் மக்களோடு பகிர்ந்துகொள்வதற்காக, தாம் சோதனைகள் மீது வெற்றிகொண்டதை ஓர் உவமையாக, கதையாக எடுத்துக் கூறியிருக்கலாம். இவ்வாறு வில்லியம் ஈவன்ஸ் போன்றோர் கருதுகின்றனர்.[2]

மேலும், இயேசு கூறிய உவமைகளுள் லூக்கா 14:28-30 பகுதியில் இரண்டு உவமைகள் இணைந்து வருகின்றன. ஒரு மனிதன் ஒரு கோபுரம் கட்ட விரும்புகின்றான். அதை அரைகுறையாகக் கட்டிவிட்டு அவன் முடிக்க இயலாமல் விட்டுவிட்டால் எல்லாரும் அவனைப் பார்த்து நகைப்பார்கள். அதுபோலவே, ஓர் அரசன் தகுந்த தயாரிப்பின்றி மற்றோர் அரசனை எதிர்த்துச் சென்று, தோல்வியுற்றால் அதுவும் நகைப்புக்குரியதே. இந்த உவமைகள் வழியாக இயேசு “செய்வன திருந்தச் செய்” என்னும் பாடத்தையும், ஆர அமர சிந்திக்காமல் அவசரப்படாலாகாது எனவும் அறிவுறுத்துகிறார். இயேசுவுக்கு நிகழ்ந்தனவாகக் கூறப்படுகின்ற சோதனைகளும் இந்தப் பாடத்தைப் புகட்ட இயேசுவால் கூறப்பட்ட உவமைகளா என்று ஹென்றி காட்பரி போன்ற அறிஞர் கருதுகின்றனர். இயேசுவின் மெசியாப் பணியானது கடவுளின் திட்டப்படி நிகழுமே ஒழிய இயேசுவின் சுய விருப்பத்துக்கு ஏற்ப நிகழாது என்பதையும் இயேசு “சோதனை என்னும் உவமை” வழியாக உணர்த்தியதாகக் கருதலாம்.[3][4]

வில்லியம் பார்க்லே என்னும் விவிலிய அறிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்: “இயேசு சந்தித்த சோதனைகளுள் ஒன்று, அலகை இயேசுவை மிக உயர்ந்த ஒரு மலை உச்சிக்குக் கொண்டு சென்றதாகவும், உலக அரசுகள் அனைத்தையும் அவருக்குக் காட்டி, அவற்றை அவருக்குக் கொடுப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் அனைத்தையும் பார்க்கக் கூடிய அளவில் உயர்ந்த மலை பாலத்தீன நாட்டில் கிடையாது. எனவே, இச்சோதனை நற்செய்தி நூல்கள் கூறுவதுபோல அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை என்று சொல்ல முடியாது. இயேசுவின் உள்ளத்து அளவிலும் உணர்வு அளவிலும் என்ன அனுபவங்களை அவர் பெற்றார் என்பதே இயேசுவின் சோதனைகள் வழியாகக் கூறப்படுகின்றது”.[5] சோதனையில் வருகின்ற அலகை பற்றிய விவரங்களையும் எழுத்துக்கு எழுத்து உண்மையாகக் கொள்ள முடியாது.[6]

இவ்வாறு, இயேசு சந்தித்த சோதனைகள் ஒன்றில் அவருடைய உள் அனுபவத்தை வெளிக்கொணர்கின்றன அல்லது உவமையாக, கதையாக இயேசுவால் எடுத்துக் கூறப்படுகின்ற ஓர் உண்மையை உள்ளடக்கி இருக்கின்றன என்றும், எழுத்துக்கு எழுத்து அப்படியே நடந்த நிகழ்ச்சியைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே முன்வைக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.[7]

பழைய ஏற்பாட்டு பாடங்கள் பயன்படுத்தப்படல்

இயேசுவின் சோதனை பற்றி மத்தேயு தருகின்ற தகவல்களில் பழைய ஏற்பாட்டு பாடங்கள் பல வருகின்றன. பழைய ஏற்பாட்டு நூல்களில் “ஆண்டவரின் தூதருக்கும்” “அலகைக்கும்” இடையே மோதல் நடைபெற்ற நிகழ்ச்சி உண்டு. எனவே, மத்தேயு சமூகக் கிறித்தவர்களுக்கு இத்தகைய மோதல் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. செப்துவசிந்தா என்று அழைக்கப்படுகின்ற பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்பில் Iesous என்னும் பெயரைக் காணலாம். இதற்கு “யோசுவா”, “இயேசு” என்று மொழிபெயர்ப்பு வடிவம் இருக்கும். அதுபோலவே diabolos என்னும் சொல்லையும் காணலாம். இதுவே devil என்றும் “அலகை” (”சாத்தான்”) என்றும் பொருளாகும். ஆக, இயேசு (யோசுவா) குறித்து அலகைக்கும் ”ஆண்டவரின் தூதருக்கும்” இடையே செக்கரியா 3இல் நிகழும் உரையாடல் போன்றே மத்தேயு 4இல் இயேசுவுக்கும் அலகைக்கும் இடையே உரையாடல் நிகழ்கிறது.[8]

மேற்கூறியது தவிர, இயேசு சோதிக்கப்பட்ட மத்தேயு நற்செய்தி பாடத்தில் இயேசு மூன்று விவிலிய வசனங்களை மேற்கோள் காட்டுவதாக வருகிறது. அந்த விவிலிய வசனங்கள் இவை:

  • இணைச் சட்டம் 8:3
  • இணைச் சட்டம் 6:13
  • இணைச் சட்டம் 6:16

இந்த மேற்கோள்கள் இணைச் சட்ட நூலின் அதிகார வரிசையைப் பின்பற்றவில்லை, மாறாக விடுதலைப் பயணம் நூலில் இசுரயேல் மக்கள் பாலைநிலத்தில் பயணம் செய்த நாட்களில் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.[9][10]

லூக்கா நற்செய்தியிலும் மத்தேயு நற்செய்திய்தியில் உள்ளது போலவே, இயேசு விவிலியத்தை மேற்கோள் காட்டுவது வருகிறது. ஆயினும் லூக்கா நற்செய்தியில் இரண்டாம் மூன்றாம் சோதனைகள் மூன்று இரண்டு என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசை இயேசு பாலைநிலத்தில் இரு சோதனைகளை சந்தித்து அதன் பின் மூன்றாம் சோதனையை எருசலேம் கோவில் உச்சியில் சந்திப்பதாக, இயல்பாக வருகிறது.[11]

மேலும், லூக்கா நற்செய்தியில், “அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும் வரை இயேசுவை விட்டு அகன்றது” (லூக்கா 4:13) என்று வருகிறது. இயேசு நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் போதித்ததைத் தொடர்ந்து அவருடைய சொந்த ஊர் மக்களே அவரைக் கொல்ல முயற்சி செய்த நிகழ்ச்சிக்கும் இயேசு சந்தித்த சோதனைகளுக்கும் ஒரு பாலம் அமைப்பதுபோன்று மேற்கூறிய கூற்று உள்ளது.[12] அல்லது ஒருவேளை இயேசு துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறக்கப் போகும்போது அலகை மீண்டும் தோன்றுவதாகக் கொள்ளலாம் (காண்க: லூக்கா 22:3)[13][14]

லூக்கா மற்றும் மத்தேயு பதிகின்ற இயேசுவின் சோதனை பாடம்

லூக்கா மற்றும் மத்தேயு இயேசுவின் சோதனை பற்றி எடுத்துக் கூறும் பகுதிகள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் வேற்றுமைகளையும் கொண்டுள்ளன. இரண்டு பாடங்களிலும் சோதனைகளை வரிசைப்படுத்தும் முறை வேறுபடுகிறது. இயேசு நாற்பது நாள் நோன்பிருந்த வேளையில் சோதிக்கப்பட்டதாக லூக்காவும், நாற்பது நாள் நோன்பிருந்த பிறகு சோதிக்கப்பட்டதாக மத்தேயுவும் கூறுகின்றனர். மாற்கு, லூக்கா, மத்தேயு ஆகிய மூவரும், இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்துக்குத் “தூய ஆவியால்” அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.

எந்தெந்த சோதனைகளை இயேசு சந்தித்தார் என்று மாற்கு கூறவில்லை. மாறாக, மத்தேயுவும் லூக்காவும் அந்த சோதனைகள் யாவை என்று கூறுகின்றனர்:

  • பசியுற்றிருந்த இயேசு கற்களை அப்பமாக மாற்றித் தம் பசியைத் தீர்த்துக்கொள்ளலாமே என்ற சோதனை;
  • அலகை இயேசுவை எருசலேம் கோவிலின் உயர்ந்த பகுதிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து கீழே குதிக்குமாறும், அவ்வாறு செய்தால் அவர் கீழே விழுந்துவிடாமல் தம் தூதர்களை அனுப்பிக் கடவுள் காத்துக்கொள்வார் என்று விவிலியம் கூறுவதாகவும் எடுத்துச் சொல்லி, இயேசுவை சோதிக்கிறது. இங்கே அலகை திருப்பாடல்கள் 91:11-12 பகுதியை மேற்கோள் காட்டுகிறது. அப்பகுதி உண்மையில் கடவுள் தம்மை நம்புவோரை எப்போதுமே பாதுகாப்பார் என்று மட்டுமே கூறுகிறது. ஆனால் அலகையோ, கடவுளின் வல்லமையை வேண்டுமென்றே சோதிக்கும்படி இயேசுவைத் தூண்டுகிறது;
  • அலகை இயேசுவை ஓர் உயர்ந்த மலைக்கு இட்டுச் சென்று, உலக அரசுகளைக் காட்டி, இயேசு தன்னை விழுந்து வணங்கினால் அவற்றை அவருக்குக் கொடுப்பதாகக் கூறி சோதிக்கிறது.

இயேசு நாற்பது நாள்கள் நோன்பிருத்தல்

நோன்பிருத்தல் வழியாக ஒருவர் ஆன்ம சுத்தி பெறலாம் என்பது பொதுவான சமய நம்பிக்கை.[15] பழைய ஏற்பாட்டில் எலியா இறைவாக்கினரும் மோசேயும் நாற்பது நாள்களும் இரவுகளும் நோன்பிருந்ததாக உள்ளது. இயேசுவின் நாற்பது நாள் நோன்பினை அந்தப் பழைய ஏற்பாட்டு நோன்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நாற்பது நாள் என்றதும் அது சரியாக நாற்பது என்ற எண்ணிக்கையைக் குறிக்கும் என்பதை விட “நீண்ட நாள்கள்” என்ற பொதுவான பொருளையும் உள்ளடக்கும்.[16] அதுபோலவே “நோன்பு” என்பது யாதொரு உணவுமே உண்ணாதிருப்பது என்று பொருள்படாது. மாறாக, இயேசு பாலைநிலத்தில் கிடைக்கக் கூடுமான சிறிதளவு உணவை உண்டிருக்கலாம்.[17][18]

இயேசு சந்தித்த ஒவ்வொரு சோதனையையும் கீழ்வருமாறு விரித்துரைக்கலாம்.

இயேசு சந்தித்த முதல் சோதனை: கற்களை அப்பமாக மாற்றலாமே!

நோன்பிருந்த இயேசுவை அணுகி, அலகை கற்களை அப்பமாக மாற்றித் தம் பசிதீர்க்கும்படி சோதிக்கிறது. ஓவியர்: ஜேம்சு டிஸ்ஸோ. காப்பிடம்: ப்ரூக்ளின் கலைக்கூடம்

கடவுளின் தூய ஆவி இயேசுவை ஓர் பாலைநிலத்திற்குக் கொண்டுசெல்கிறார். அங்கு இயேசு நோன்பிருக்கிறார். அதே பாலைநிலப் பின்னணியில் தான் இயேசு அலைகயால் சோதிக்கப்படுகிறார்.[19] அலக்சாண்டர் ஜோண்சு என்பவர் தரும் தகவல் இது: இயேசு சோதிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற பாலைநிலம் எருசலேம் நகருக்கும் எரிகோ நகருக்கும் இடையே பரந்துகிடக்கின்ற, பாறைகள் நிறைந்த வனாந்தரப் பகுதி என்று ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்பட்டு வருகிறது. அதில் “குவாராந்தானியா குன்று” (Mount Quarantania - பொருள்: நாற்பது நாள் தொடர்பான மலை) பகுதியில் இயேசு நோன்பிருந்தார்.

பாலைநிலம் என்பது, யூத மரபில், மக்கள் வாழும் சமுதாயத்திற்குப் புறம்பே கிடக்கும் பாழடைந்த நிலமாகவும், அங்கே அலகைகள் உலவுவதாகவும் கருதப்பட்டது. லேவியர் 16:8-10 போன்ற சில பாடங்களில் “போக்கு ஆடு” என்று அழைக்கப்படுவதை சிலர் “அசாசேல்” என்னும் அலகையாயக் கொண்டு அது பாலைநிலத்தில் உலவியதாகக் கொண்டனர். வேறு சிலர், பாலைநிலத்தை இன்பவனமான ஏதேன் தோட்டத்தோடு தொடர்புபடுத்தியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி, முதல் மனிதரான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் இருந்ததுபோல, புது மனிதரும் புதிய ஆதாமுமான இயேசு பாலைவனத்தில் இருந்தார். இக்கருத்துக்கு மத்தேயு நற்செய்தியில் ஆதாரம் இல்லை என்று கூறி, அறிஞர்கள் மேற்கூறிய விளக்கத்தை ஏற்பதில்லை.

பாலைநிலம் என்பது விவிலியத்தின் வேறு இடங்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது. அதாவது, இசுரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்து வழிநடந்தனர் (விடுதலைப் பயணம் நூல்). மோசேயும் பாலைநிலத்தில் பல நாள்களைக் கழித்தார். அந்த நிகழ்ச்சிகள் இயேசுவின் பாலைநில அனுபவத்திற்கு முன்காட்சிகள் போல் உள்ளன.[18]

இயேசு தம்முடைய பசியைத் தீர்த்திட கற்களை அப்பமாக மாற்றலாமே என்று கூறி அலகை அவரை சோதிக்கிறது. அதற்காக அலகை இயேசுவை நோக்கி “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றது. ஆனால் இயேசு மறுமொழியாக, “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்” என்று மறைநூலில் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (காண்க: திருப்பாடல்கள் 91:12). அலகையின் சோதனையை முறியடிக்கிறார் (மத்தேயு 4:1-4).

இரண்டாம் சோதனை: உச்சியிலிருந்து கீழே குதிக்கலாமே!

இயேசு சந்தித்த இரண்டாம் சோதனையில், அலகை இயேசுவை “திருநகரில் உள்ள கோவில்” உச்சிக்குக் கொண்டுசெல்வதாக உள்ளது. இதில் வருகின்ற “திருநகரம்” எருசலேம் என்றும், “கோவில்” என்பது “எருசலேம் நகர் கோவில்” என்றும் கிறித்தவர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மத்தேயு நற்செய்தியில் “கோவில்” என்னும் சொல்வழக்கு 17 தடவை வருகிறது. அதில் ஒரு தடவை கூட “எருசலேம் கோவில்” என்று வெளிப்படையாகக் கூறப்படவில்லை. லூக்கா, நற்செய்தியில் தெளிவாக “எருசலேம் கோவில்” என்று கூறப்படுகிறது. அந்நற்செய்தியின் பெறுநரான “தியோபில்” யூத இனத்தவர் அல்ல என்பதால் அவருக்குத் தெளிவாகப் புரியும் அளவில் “எருசலேம் கோவில்” என்று எழுதப்பட்டதாகவும் அறிஞர் கருதுகின்றனர்.[20]

கோவிலின் “உயர்ந்த பகுதிக்கு” இயேசுவை அலகை கொண்டு சென்றதாக நற்செய்திகள் கூறுகின்றன. இந்த “உயர்ந்த பகுதி” எதைக் குறிக்கிறது என்று தெளிவில்லை. இது கோவில் கட்டடத்தின் கூரையாக இருக்கலாம்; அல்லது “மதில் உச்சியாக” இருக்கலாம்; அல்லது வெளியே நீண்டு நிற்கின்ற கோவில் மூலையின் முகடாக இருக்கலாம்.[18]

”பின்னர் அலகை இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுக்காக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது’ என்றது.” (லூக்கா 4:9-11).

ஆனால் இயேசுவோ அலகையின் சோதனைக்கு இசையவில்லை. அவர், கடவுள் தமக்குக் கையளித்த பணியைப் பிரமானிக்கமாக இறுதிவரை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்.

எனவே, இயேசு அலகைக்குத் தகுந்த பதில் கொடுத்தார். அப்பதிலும் விவிலியத்தின் நூலான இணைச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது: இயேசு அளித்த பதில்: “இயேசு அலகையிடம், “’உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்” (மத்தேயு 4:7).

மூன்றாம் சோதனை: உலக அரசுகள் எல்லாம் உமதே!

இறுதி சோதனையின்போது அலகை இயேசுவை “மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,” தன்னை வணங்கச் சொன்னது (மத்தேயு 4:8-9). இந்த “உயர்ந்த மலை” யாது என்பது குறித்துப் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. அவை:

  • எருசலேம் நகரிலிருந்து எரிக்கோ நகருக்குச் சென்ற சாலையில் ஒரு சுண்ணாம்புக் கல் குன்று உள்ளது. அது “குவாராந்தானியா குன்று” என்று அழைக்கப்படுகிறது. அலகை இயேசுவை அக்குன்றின்மேல் நிறுத்தி சோதித்திருக்கலாம்.[21]
  • ஜாண் கால்வின் இயேசுவை அலகை ஓர் “உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசென்று” உலக அரசுகளைக் காட்டி, அவரை சோதித்தது என்று கூறுகிறார். ஜெனீவா விவிலியம் அவ்வாறே மொழிபெயர்க்கிறது.
  • ”உலக அரசுகள்” என்பது நிலப்பகுதியை அல்ல, மாறாக “உலகை ஆளுகின்ற அதிகாரம்” என்ற பொருளைக் குறிக்கிறது.
  • ”உலக அரசுகள் அனைத்தையும்” அலகை காட்டியது என்னும்போது, இயேசுவின் காலத்தில் அக்கூற்று ஒரு சிறு நிலப்பகுதியையே குறித்தது. எனவே, அதை ஓர் உயர்ந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஆயினும் அமெரிக்காக்கள் மற்றும் ஆஸ்திரேலியா பகுதி மக்களினங்களை இங்கு அடக்க முடியாது.
  • ”உயர்ந்த குன்று” என்பதை எழுத்துக்கு எழுத்து பொருள் கொள்ளலாகாது. சோதனைகள் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட அனுபவங்களே. அந்த அனுபவங்களையே இயேசு ஓர் உவமை வழியாக எடுத்துக் கூறினார்.[22]

இயேசு தன்முன்னால் விழுந்து தன்னை வணங்கினால் அவருக்கு உலக அரசுகளைக் கொடுப்பதாகக் கூறி, அலகை அவரை சோதித்தது (மத்தேயு 4:8-9).

அதற்கு இயேசு கொடுத்த பதில் இது: “அகன்று போ, சாத்தானே. ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” (மத்தேயு 4:10).

வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தல்

நோன்பிருந்தபோது தம்மை சோதித்த அலகையை முறியடித்ததும், வானதூதர் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர் (மத்தேயு 4:11). ஓவியர்: ஜேம்சு டிஸ்ஸோ. காப்பிடம்: ப்ரூக்ளின் கலைக்கூடம்

நற்செய்திகளின்படி, இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டு அச்சோதனைகளை வென்றார். "அலகை இயேசுவை விட்டு அகன்றது"; "உடனே வானதூதர் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்" (மத். 4:11). லூக்கா கூற்றுப்படி, "அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும் வரை இயேசுவை விட்டு அகன்றது" (லூக் 4:13). எனவே, அலகை மீண்டும் திரும்பிவரும் என்ற கருத்து தொக்கிநிற்கின்றது.

மாற்கும் மத்தேயுவும் "வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்ததை" குறிப்பிடுகின்றனர். லூக்கா அக்குறிப்பைத் தரவில்லை. மத்தேயு நற்செய்தியின்படி, இங்கு மீண்டும் ஒருமுறை இயேசு எலியாவோடு ஒப்பிடப்படுவது தெரிகிறது (காண்க: 1 அரசர்கள் 19:4-9). எலியாவுக்குக் காகங்கள் உணவு கொண்டுவந்தன.

இயேசு தாம் சோதிக்கப்பட்ட நாள்களில் கடவுளிடத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்துவிடவில்லை. மாறாக, சோதனைகளின் நடுவிலும் நிலைத்துநின்றார். எனவே, கடவுள் அச்சோதனைகளின் முடிவில் இயேசுவுக்கு வானதூதர் வழியாக உணவளித்தார். சிலர் வானதூதர் செய்த பணிவிடை அவர்கள் அலகையைத் துரத்தியதைக் குறிக்கிறது என்று விளக்குகின்றனர்.[16][19]

இயேசுவின் சோதனைகள் பற்றி மாற்கு தரும் செய்தி

இயேசுவின் சோதனையை மாற்கு நற்செய்தி மிகச் சுருக்கமாகவே தருகிறது. அதாவது இயேசு திருமுழுக்குப் பெற்றபின் அலகையால் சோதிக்கப்படுகிறார். மாற்கு 1:12-13 : "உடனே தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அவர் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்". வனவிலங்குகள் பற்றி மாற்கு மட்டுமே குறிப்பிடுகிறார்.

இயேசுவின் சோதனைகள் பற்றி யோவான் தரும் செய்தி

மற்ற மூன்று நற்செய்திகளிலும் இயேசுவின் சோதனை குறிக்கப்பட்டாலும் அது யோவான் நற்செய்தியில் காணப்படவில்லை. ஆயினும் யோவான் நற்செய்தியில் இயேசுவின் சோதனை பற்றிய சில குறிப்புகள் வேறு இடங்களில் உளதாக சில அறிஞர் கருதுகின்றனர்.[23] விட்டேக்கர் என்பவர் காண்கின்ற ஒப்புமைகள்:

  • யோவான் 6:26,31 - இயேசு பாலை நிலத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்தார் ("இக்கற்களை அப்பமாக மாற்றும்" என்ற சோதனை பற்றிய குறிப்பு)
  • யோவான் 2:18 - எருசலேம் கோவிலில் அதிசய அடையாளம் கேட்டு இயேசுவை சோதித்தார்கள் (கோவிலின் உச்சியிலிருந்து குதிக்கும்படி இயேசு சோதிக்கப்பட்டது)
  • யோவான் 6:15 - இயேசுவைக் கட்டாயப்படுத்தி அரசர் ஆக்க மக்கள் முனைந்தனர் (உலக அரசுகளை அலகை இயேசுவுக்கு வாக்களித்து சோதித்தது)

இயேசுவின் சோதனைகள் பற்றிய இறையியல் விளக்கங்கள்

கற்களை அப்பமாக மாற்றும்படி இயேசுவை அலகை சோதித்ததல். கையெழுத்துப் படி விளக்க ஓவியம். ஓவியர்: சீமோன் பெனிங். காலம்: 16ஆம் நூற்றாண்டு

இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது. மரபு வழி விளக்கம் இது: மூன்று சோதனைகள் வழியாக இயேசு மூன்று பாவங்களுக்கு உட்படுமாறு சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் தம்மைச் சோதித்த அலகையை முறியடித்து, சோதனைகளை வென்றார். அந்த மூன்று சோதனனைகள் இவை:

  • அகங்காரம் என்னும் பாவம்: இயேசு உச்சியிலிருந்து குதித்தால் அவர் கீழே விழுந்துவிடாமல் கடவுளின் தூதர்கள் அவரைக் காக்க மாட்டார்களா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.
  • போசனப் பிரியம் (பெருந்தீனி விருப்பம்) என்னும் பாவம்: இயேசு கற்களை அப்பமாக மாற்றித் தம் பசியைத் தீர்க்க முடியாதா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.
  • பேராசை என்னும் பாவம்: உலக அரசுகள் மீது அதிகாரம் செலுத்தலாமே என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.

நோன்பு இருந்த ஒருவர் தம் பசியை ஆற்ற முனைந்தால் அதை "பெருந்தீனி விருப்பம்" என்று கூற முடியாது என்பதால் அதை ஓர் உயர்வு நவிற்சி அணி எனலாம் என்று ஜோன்சு என்பவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

பியோதர் தஸ்தயெவ்ஸ்கி என்னும் புதின ஆசிரியர் "கரமாசோவ் சகோதரர்கள்" என்னும் தம் புதினத்தின் ஒரு பாத்திரத்தின் வழி தருகின்ற விளக்கம் இது: இயேசு இவ்வுலகில் மெசியாவாக, மீட்பராக வந்தார். ஆனால் எத்தகைய மெசியா அவர்? அவர் கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து, அவரிடத்தில் நம்பிக்கை கொண்டவராகத் தமது பணியை ஆற்றுவாரா அல்லது தமது சொந்த விருப்பப்படி, அதிகாரத்தைக் கைப்பற்றி கொடுங்கோல் மன்னன் போல அரசுகளைக் கையகப்படுத்தி மக்களை ஒடுக்குவாரா? இது இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை. அவர் முன்னிலையில் அதிகார மமதை ஒரு பக்கம் கீழ்ப்படிதல் மறுபக்கம் என்று இரு முடிவுகள் வைக்கப்பட்டன. அவர் எதைத் தேர்ந்தெடுப்பார்? - இதுவே இயேவுக்கு ஏற்பட்ட சோதனை.[17]

எனவே, இயேசு எந்த முடிவைத் தேர்ந்தெடுக்கும்படி சோதிக்கப்பட்டார்?

  • தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களிலிருந்து தம்மை விடுவிப்பது அவர் பணியா? (கற்களை அப்பமாக்கி உண்ணுவதற்கான சோதனை)
  • எல்லாரும் காணும்படி மந்திர மாயஜால வித்தைகள் நிகழ்ந்த்தி மக்களைக் கவர்வது அவரது பணியா? (கோவில் முகட்டு உச்சியிலிருந்து கீழே குதித்தாலும் காயம் ஏற்படாமல் தப்பிக்க சோதனை)
  • உரோமையரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கின்ற அரசியல் விடுதலைப் போராளியாக அவர் மக்களுக்குத் தம்மைக் காட்டுவாரா? (உலக அரசுகள் மீது ஆட்சி அதிகாரம் பெறுவதற்கான சோதனை)

ஜான் ஹவட் யோடர் (John Howard Yoder) என்பவர் எழுதிய “இயேசுவின் அரசியல்” (The Politics of Jesus) என்னும் நூலில் கூறுவது: இயேசு பாலைநிலத்தில் சந்தித்த சோதனைகள் பிற்காலத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அரசியல் தலைவராக அவர் மாறும்படியாக அவருக்கு ஏற்பட்ட சோதனைகளின் முன் அறிவிப்புப் போல அமைந்தன. அச்சோதனைகள் கீழ்வருவன:

  • இயேசு பாலைநிலத்தில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு அளித்தார். ஐந்து அப்பங்களையும் சில மீன்களையும் பலுகச் செய்து அவர் மக்களுக்கு உணவளித்தார். உடனேயே மக்கள் அவரைத் தம் அரசராக ஆக்கிவிட முயன்றார்கள். அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?
  • இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்தார். கோவில் மீது தமக்கு அதிகாரம் உண்டெனக் காட்டினார். அக்கட்டத்தில் அவருக்கு மக்களுடைய ஆதரவு தாராளமாக இருந்தது. ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிவிட்டால் என்ன என்ற விதத்தில் ஏற்பட்ட சோதனைக்கு இடம் கொடுப்பதா?
  • இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்குமுன் கெத்சமனி தோட்டத்தில் தந்தையை நோக்கி மன்றாடிக்கொண்டிருந்த வேளையில் அவரைக் கைதுசெய்ய வந்தவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வானதூதர்களின் படையை வரவழைக்கின்ற ஒரு சோதனை ஏற்பட்டது. அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?

இவ்வாறு இயேசுவின் சோதனைகளை விளக்குகிறார் யோடர்.

இயேசுவின் சோதனைகள் மனித சக்திக்கு மேற்பட்டவையா?

இக்கேள்வி எழுவதற்கு அடிப்படை என்னவென்றால், இயேசு ஒரே சமயத்தில் கடவுள் மனிதருமாக இருக்கின்றார். கடவுள் என்ற முறையில் அவர் அலகையால் வாக்களிக்கப்பட்ட உணவு, புகழ், உலக அரசுகள் அனைத்திற்குமே உரிமையானவர். அவற்றை அவர் யாரிடமும் கேட்டுப் பெற வேண்டிய தேவை இல்லை.

இயேசு உண்மையிலேயே மனிதரும் ஆவார் என்ற அடிப்படையில் அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்று எபிரேயர் திருமுகம் கூறுகிறது. எபிரேயர் 4:15 - “நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்”. இவ்வகையில், இயேசு சந்தித்த சோதனைகள் எல்லா மனிதரும் சந்திக்கின்ற சோதனைகளே என்பது தெளிவாகிறது.

இயேசுவின் சோதனைகளைப் பற்றி விளக்குகையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவ்வாறு கூறுகிறார்: அலகை இயேசுவை சோதித்தபோது, இயேசு அதிகாரத் தோரணையோடு மக்களை ஆண்டு நடத்துகின்ற மெசியாவாகத் தம்மைக் காட்டிக் கொள்ளுமாறு சோதனை தந்தது. இயேசுவோ, மெசியா என்பது ஒரு பதவியோ அதிகாரமோ அல்ல, மாறாக, மக்களின் நன்மைக்காகத் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பது என்பதில் உறுதியாய் இருந்தார். அத்தகைய பலி சிலுவையில் அவர் மக்களின் மீட்புக்காகத் தம்மையே கையளிப்பதில் அடங்குமே ஒழிய, இவ்வுலகப் பாணியில் ஆட்சி அதிகாரத்தைக் கைவசம் எடுத்துக்கொண்டு மக்களை அடக்கி ஆளுவதில் அடங்காது என்று கூறி அவர் சோதனைகள் மீது வெற்றிகொண்டார்.[24]

விவிலிய நிகழ்ச்சிகளின் பின்னணியில் இயேசு சந்தித்த சோதனை விளக்கம்

இயேசுவின் சோதனையை விளக்கும்போது, விவிலியப் பின்னணியைக் கருத்தில் கொண்டு இறையியலார் எடுத்துரைப்பர். அதாவது, முன்னாள்களில் பாலைநிலத்தில் இசுரயேல் மக்கள் வழிநடந்து சென்றபோது, அவர்கள் கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க மறுத்த நேரங்கள் உண்டு. “பாலைநிலத்தில் அவர்கள் பெரு விருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனை சோதித்தார்கள்” (திருப்பாடல்கள் 106:14). அதற்கு நேர்மாறாக, இயேசு இசுரயேலின் பாவத்தையும் உலக மக்கள் அனைவரின் பாவத்தையும் தம் மேல் சுமந்து, கடவுளின் ஆட்டுக்குட்டியாகப் பலியாகிட தம்மையே கையளித்தார். யாவரும் மனமாற்றம் பெற்று கடவுளின் அருளில் பங்குபெற வேண்டும் என்பதே சிலுவைப் பலியில் நோக்கம் (காண்க: எரேமியா 31:3; மத்தேயு 10:6; 15:24; யோவன் 13:22; திருத்தூதர் பணிகள் 10:11-15; மாற்கு 16:15; கொலோசியர் 1:23).

இயேசு என்பதற்கு “மீட்பர்” என்பது பொருள். ஆனால் இயேசுவை சோதித்த அலகையின் பெயர் “எதிரி”. தமக்கு பாலைநிலத்தில் ஏற்பட்ட சோதனைகளை முறியடித்ததன் வழியாக இயேசு கடவுளையே மனிதர் முழுமையாக நம்பி இருக்க வேண்டியதின் தேவையை வெளிப்படையாக எடுத்துக்காட்டினார். மேலும், எதிரியின் வலையில் சிக்காமல் கவனமாக வழிநடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்.

கலைப்படைப்புகளில் இயேசுவின் சோதனை சித்தரிக்கப்படல்

இயேசு பாலைநிலத்தில் சோதனைகளைச் சந்தித்த நிகழ்ச்சி பல நூற்றாண்டுகளாகவே கிறித்தவக் கலை மற்றும் இலக்கியங்களில் இடம் பெற்றுவந்துள்ளது. சில எடுத்துக்காட்டுகள்:

  • ஜான் மில்டன் எழுதிய “இன்பவன மீட்சி” (Paradise Regained) என்ற இலக்கியப் படைப்பின் முக்கிய கருத்து இயேசுவின் சோதனையை உள்ளடக்கியதே.
  • பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய “காரமாசோவ் சகோதரர்கள்” என்ற புதினத்தின் பிரிவாகிய “பெரும் சோதனையாளர்” (The Grand Inquisitor என்பதில் இயேசுவின் சோதனை பற்றிய நீண்டதொரு பகுதி உள்ளது.
  • ஆண்ட்ரூ லாய்ட் வெப்பர் என்பவர் உருவாக்கிய “உலக நாயகர் இயேசு கிறிஸ்து” (Jesus Christ Superstar) நாடகம்/திரைப்படம் இயேசுவின் சோதனையைச் சித்தரிக்கிறது.
  • Godspell என்னும் நாடகம்/திரைப்படம் இயேசுவின் சோதனையைக் காட்டுகிறது.
  • மேலும், சில நாடகங்களிலும் திரைப்படங்களிலும் இயேசுவின் சோதனைகள் நற்செய்தி தரும் தகவல்கள்படி சித்தரிக்கப்படாமல் வேறு விதமாகக் காட்டப்படுகின்றன.
  • ”மத்தேயு எழுதிய நற்செய்தி” (The Gospel According to Matthew) - இயக்குநர்: பியேர் பவுலோ பசலீனி; ஆண்டு: 1964, இத்தாலியா
  • “உலகிலேயே பெரிய வரலாறு” (The Greatest Story Ever Told) - இயக்குநர்: ஜோர்ஜ் ஸ்டீவென்ஸ்; ஆண்டு: 1965, அ.ஐ.நா.
  • “இயேசு சந்தித்த இறுதி சோதனை” (The Last Temptation of Christ) - இயக்குநர்: மார்ட்டின் ஸ்கோர்சேசே; ஆண்டு: 1987, அ.ஐ.நா.

மேலும் காண்க

ஆதாரங்கள்

  • Albright, W.F. and C.S. Mann. "Matthew." The Anchor Bible Series. New York: Doubleday & Company, 1971.
  • Schweizer, Eduard. The Good News According to Matthew. Atlanta: John Knox Press, 1975

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Temptation of Christ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்